பாரதி போன்ற ஒரு போராளி தேவை: திருமாவளவன்
தில்லித் தமிழ்ச் சங்கத்தில், "பாரதியின்
தொலைநோக்கு' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்
தலைவர் தொல். திருமாவளவன். (வலது படம்)
புது
தில்லி, செப். 7: பாரதி போன்ற போராளி இன்றைய இந்தியாவின் தேவை என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.தில்லி தமிழ்ச் சங்கத்தில், "பாரதியின் தொலைநோக்கு' என்ற தலைப்பில் வியாழக்கிழமை அவர் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதில் அவர் பேசியதாவது:நம்
நாட்டில் சுதந்திரப் போராட்டத்தை பல தலைவர்கள் தீவிரப்படுத்தும் முன்பே
அதன் தாக்கத்தை உணர்ந்தவர் மகாகவி பாரதி. 1882-1921-ம் ஆண்டுவரை அவர்
வாழ்ந்தார். அவரது காலச் சூழல் சாதியம், பார்ப்பனியம், வெள்ளையர் ஆதிக்கம்
நிறைந்தவையாக இருந்தது. அந்த காலகட்டத்திலும் சமூக விழிப்புணர்வு,
பெண் விடுதலை, சுதந்திரம், தொழில்நுட்பம், அறிவியல், உலக நாடுகளின்
வளர்ச்சி போன்றவற்றையெல்லாம் பாரதியால் சிந்திக்க முடிந்தது. ஒரு
கவிஞனாகவும் சமூகப் போராளியாகவும் வாழ்ந்தவர் பாரதி. ஆணுக்குப் பெண் சமம், சாதிய ஒழிப்பு போன்ற அவரது நூற்றாண்டுக்கு முந்தைய கனவுகள் இன்று நிஜங்களாகி வருகின்றன. சுதந்திரத்துக்கு
வித்திட்ட மகாத்மா காந்தியடிகள், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள்
எல்லாம் வெளிநாடுகளில் படித்துவிட்டு வந்து, தாய் நாட்டில் சுதந்திர
தாக்கத்தை ஏற்படுத்தினர். சமூகச் சீர்திருத்தவாதியான பெரியார்,
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி நீதிக் கட்சியைத் தொடங்கி மொழிச்
சுதந்திரத்துக்காகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். ஆனால், எந்தப் பின்னணியும் இல்லாமல் சாதிய அடக்குமுறை நிறைந்த சூழலில் தேச விடுதலை,
சமூகச் சீர்த்திருத்தங்கள் ஆகியவை குறித்து கனவு கண்டு அதைத் தனது கவிப்
புலமையால் வெளிப்படுத்த பாரதியால் மட்டுமே முடிந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர் இந்த நாட்டில் பிரதமராக வர முடியுமா?அதை அக்காலத்திலேயே சிந்தித்த பாரதி, "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்றார். சந்திர
மண்டலத்தில் அடி எடுத்து வைத்த முதல் மனிதன் நீல் ஆர்ம்ஸ்டிராங் 82 வயதில்
அண்மையில் காலமானார். நீல் ஆம்ஸ்டிராங் சந்திர மண்டலத்தில் தண்ணீர்
இருக்கிறதா என்பதை 1960 ஜூலை 20-ம் தேதிதான் அறிந்தார்.ஆனால்,
சந்திர மண்டலத்துக்கு நீல் ஆர்ம்ஸ்டிராங் செல்லும் முன்பே "வானை அளப்போம்,
விண்மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என கவிதை
படைத்தார் பாரதி. அவரைப் போன்ற போராளி எங்கள் இயக்கத்துக்கு இல்லை.
இன்று அவர் இருந்திருந்தால் எங்கள் இயக்கத்துக்குத் தலைவராகியிருப்பார்.
அவ்வாறான போராளி இன்றைய இந்தியாவின் தேவை என்றார் திருமாவளவன்.நிகழ்ச்சிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் எம்.என். கிருஷ்ணமணி தலைமை வகித்தார். ஆன்மிகச் சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்றார். பொருளாளர் பி. அறிவழகன் நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர் எம். ஆறுமுகம் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக