செவ்வாய், 4 செப்டம்பர், 2012

சீன,சப்பானிய வரலாறுகளில் இடம் பெற்றிருக்கும்தமிழர்

சீன,சப்பானிய வரலாறுகளில் இடம் பெற்றிருக்கும் தமிழர் ஒருவரைப் பற்றிய வரலாறு!

பதிவு செய்த நாள் : 03/09/2012

சீன,சப்பானியவரலாறுகளில்இடம்பெற்றிருக்கும்தமிழர் ஒருவரைப்பற்றியவரலாறு!
போதி தருமர் என்பவர் 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தத் துறவி ஆவார். தமிழ்நாட்டில், காஞ்சிபுரத்தில், பல்லவ ஆட்சியில், கந்தவர்மன் என்ற அரசனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தருமர், பல்லவ அரசராக இருந்து, பின்னர் புத்த சமயத்தைத் தழுவியதாகக் கருதப்படுகிறது. புத்த சமய ஆசானாக (குருவாக) மாறிய பிறகு, சீனத்துக்குப் பயணம் மேற்கொண்ட போதி தருமர், அங்கே மகாயான புத்தச் சமயத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு வாழ்ந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது. சென் புத்தச் சமயத்தை (இன்று உலகெங்கும் புகழ்பெற்றுத் திகழும் சென் கதைகள்) உருவாக்கிய புகழ் இவரையே சாரும்! போதி தருமர், சீனத்தில் ‘சாலின் குங்பூ’ (Shaolin Kung Fu) என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

குங்பூவும்போதிதருமரும்:
போதி தருமர், சாலின் குங்பூவைச் சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
1.கல்வெட்டுச் சான்று:
சீனக் கோயிலில் (shoalin temple – kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத் துறவி போதி தருமர் உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்பூ என்கிறது.
2.டான்லின் பதிவுகள் (Tánlín):
டான்லின் பதிவுகள், தென்னிந்தியப் பல்லவப் பேரரசரின் மூன்றாம் மகன் போதி தருமர் என்கின்றன.
3.டௌசுவான் பதிவுகள் (Dàoxuān):
டௌசுவான் பதிவுகள், போதி தருமரைத் தென்னிந்தியப் பல்லவன் என்கின்றன. (南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).
4.பௌத்தக் காஞ்சிக் கோயில்:
தற்போதும் பௌத்தக் காஞ்சிக் கோயிலில் உள்ள தற்காப்புக்கலைச் சிற்பங்களில், தற்காப்புக்கலையின் மூல அசைவுகள் எப்படி பிறந்தன என்று உள்ளது.
5.பிராஃடன் கூற்று:
பிராஃடன் என்னும் ஆய்வாளர், போதி தருமரைக் காஞ்சியை தலைநகராகக் கொண்ட தமிழ்ப் பல்லவப் பேரரசின் இளவரசர் என்கிறார்.
6.யொங்சியா பாட்டு (yǒngjiā Xuánjué)
யொங்சியா என்னும் பாட்டு, 28 புத்த ஆசான்களின் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதி தருமர் வரை)
8.பிராஃடன், யாங் சுவான்சி (Yáng Xuànzhī) பதிவை மறுப்பது:
அக்காலச் சீனத்தில், எந்தத் துறவி சீனத்துக்கு வந்தாலும், அவரைப் பெர்சியர் என்றெண்ணி விடுவது வழக்கம் என்பதால், யாங் சுவான்சி (Yáng Xuànzhī) ( bō-sī guó hú rén) போதி தருமரைப் பெர்சியரென்று கூறியதைப் பிராஃடன் மறுக்கிறார்.
9. தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படிப் பிறந்தன என்பதைக் காட்டும் பௌத்தக் காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலைச் சிற்பங்களைத் தற்போதும் சீன, சப்பானியத் தற்காப்புக்கலை ஆசிரியர்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.
10. போதி தருமர் (பௌத்தவர்மப் பல்லவன்) நான்காம் கந்தவர்மனுக்குப் பிறந்த மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்காலப் பல்லவ மரபினர் கடைசி மகனைப் புத்தமடத்துக்கு அளித்து விடுவர்.
நான்காம் கந்தவர்மனுக்குப் பிறந்த மூன்று மகன்களென அறியப்படுவோர்:
1. முதலாம் நந்திவர்மன்,
2. இரண்டாம் குமாரவிட்டுணு,
3. புத்தவர்மன் (போதி தருமர் (எ) பௌத்தவர்மப் பல்லவன்).
11. கால ஒற்றுமை:
1. போதி தருமரின் காலமெனப் பதிவுகள் கூறுவது கி.பி.475-550.
2. விட்டுணுகோபனின் காலத்தின் அடிப்படையில் (கி.பி.340) நான்காம் கந்தவர்மனின் காலமாக அறியப்படுவது கி.பி.450-500.
3. 28 ஆசான்கள் வரிசையின் காலமாகக் கருதப்படுவது, கி.மு.563 முதல் (சாக்கியமுனி முதல்) கி.பி.550 வரை (போதி தருமர் வரை). மேற்கூறிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.
–நன்றி: விக்கிப்பீடியா.
போதி தருமர் பற்றிய செவிவழி வரலாறு:
போதி தருமர் ஒரு தமிழர். கி.பி.5ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த பல்லவ அரசனின் 3ஆவது மகனார். சிறந்த வீரர்! தற்காப்புக் கலைகளைச் சிறப்பாகப் பயின்றவர். அரசு, ஆட்சியை விரும்பாமல் உள்ளம் செல்லும் வழியில் செல்கிறார். பிரசனதரா என்ற மகாயான புத்தத் துறவியைத் தன் இறைமை ஆசானாகத் (குருவாகத்) தேர்ந்தெடுத்துக் கொண்டு இறைமையில் (ஆன்மித்தில்) தெளிவு பெறுகிறார்.
புத்த சமயத்தைக் கிழக்கு நாடுகளுக்குக் கொண்டு செல்ல விரும்பிக் கடல் வழியே, இன்றைய மலேசியா, இந்தோனேசியா, வியட்னாம், தாய்லாந்து வழியாக 3 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு, கி.பி.527இல் சீனம் சென்றடைகிறார். சீனத்தில், போதி தருமர் என்னும் பெயர் அவர்கள் வழக்கில் சிதைந்து ‘தா மோ’ என்று ஆகியிருக்கிறது. தாமோவைத், தெற்குச் சீனத்தை ஆண்டு கொண்டிருந்த அப்போதைய சீன அரசன் வூ வரவேற்று விருந்தோம்பியிருக்கிறான். அந்த அரசனின் தற்பெருமை, ஆணவம் ஆகியவற்றைத் தாமோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விளைவு, அரசனின் சினம், பகை, அந்த நாட்டை விட்டு வெளியேற ஆணை. பின்னர், வடச் சீனத்திற்குச் சென்ற தாமோ, யாங்ட்சி ஆற்றங்கரையில் இருக்கும் சாவோலின் கோயிலை அடைகிறார்.
கோயிலில் இருந்தவர்களின் அழைப்பை முதலில் ஏற்காமல், அருகில் இருந்த மலைக்குகை ஒன்றில் அறிதுயில் (தவம்) மேற்கொள்கிறார். மலைக்குகையில், ஒரு சுவரின் முன்னால் ஒன்பது ஆண்டுகள் உட்கார்ந்து கடுமையான அறிதுயிலைக் கடைப்பிடிக்கிறார். அதன் விளைவாகப் புதிய ஊக்கம் பெற்றுச், சாவோலின் கோயிலில் தன்னை இணைத்துக் கொள்கிறார். சாவோலின் பள்ளியில், பிள்ளைகளுக்குப் பௌத்தம், தியானம், தற்காப்புக் கலை போன்றவற்றைக் கற்பிக்கிறார்.
சீனத்தில்தாமோ:
சீனத்தில் புத்தச் சமயம் பரவ, உறுதிப்பட முதன்மைக் காரணமாக இருந்தவர், இங்கிருந்து சென்ற தமிழர் போதி தருமர். போதி தருமர் என்கிற தமிழரால் உருவாக்கப் பெற்றதுதான் சென் புத்தச் சமயம்! புத்தரின் 28ஆவது நேரடி மாணவராகப் போதி தருமரைச் சீனர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் சப்பானிலும், வேறு வடிவங்களில் போதி தருமர் புகழ் பெற்றார். சப்பானில் அவர், எதிர்பாரா நன்மையைத் (அதிருட்டம்) தருபவராகக் கொண்டாடப்பட்டார்.
சீனத்திலும், சப்பானிலும் இன்றும் போதி தருமருக்கு ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. போதி தருமரின் முடிவு பற்றி வெவ்வேறு கதைகள் வழங்குகின்றன. அவர் 150 அகவை (வயது) வரை வாழ்ந்ததாகவும், இறந்த பிறகு சியாங் மலைச்சரிவில் புதைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. ஆனால் அவரைப் புதைத்து 3 ஆண்டுகளுக்குப் பின், பாமியன் மலையருகே, கையில் ஒற்றைச் செருப்புடன் அவர் சென்று கொண்டிருந்ததைக் கண்டதாக, வெய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறி இருக்கிறார். “எங்கே போகிறீர்கள்” என்று அவர் கேட்டதற்குப் போதி தருமர், “என் வீட்டிற்குச் செல்கிறேன்” என்று சொன்னாராம். ஐயமுற்றவர்கள், போதி தருமரின் கல்லறையைத் திறந்து பார்த்தபோது, அங்கே ஒற்றைச் செருப்பு மட்டுமே இருந்ததாகவும், போதி தருமரின் உடலைக் காணவில்லை என்றும் ஒரு வரலாறு கூறுகிறது.
போதி தருமர் பற்றிய வரலாற்றுக்குச் சீனத்திலும், சப்பானிலும் பல வடிவங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவர் தமிழ்நாட்டின் காஞ்சியிலிருந்து சென்றவர் என்பதும், சீனத்தில் சென் புத்தச் சமயமும், தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்கும் சாவோலின் பள்ளியும் உருவாக அவர் தலையாய காரணமாக இருந்தார் என்பதும் வரலாற்றில் ஒன்றே போலத்தான் கூறப்பட்டுள்ளன.
உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது! அதே நேரம், வருத்தமாகவும் இருக்கிறது. சீன வரலாற்றில், சப்பானிய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் தமிழர் ஒருவரைப் பற்றிய வரலாறு, தமிழ்நாட்டின் வரலாற்றில் காணப்படவில்லையே!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக