சொல்கிறார்கள்
"கண் பார்வை இல்லை என்றாலும் அருந்திறல் ஆற்றலாம்!'
கண் பார்வை இல்லா விட்டாலும், சாதனை படைத்து வரும் கணித பேராசிரியை சுஷ்மா அகர்வால்: என்,
14 வயது வரை, மற்ற குழந்தைகள் போலவே இருந்தேன்; 9ம் வகுப்புப் படிக்கும்
போது, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டது. டாக்டர்களிடம் காட்டிய போது, "இது
ரெட்டினா குறைபாடு. கண்பார்வை மெல்ல குறைந்து போகும். கடைசியில் பார்வை
இழப்பு ஏற்படும்' என்றனர்.பிளஸ் 1 படிக்கும் போது, தந்தை இறந்து விட்டார்;
அதன் பிறகு, என் அம்மா தான் எல்லாமே. பி.எஸ்சி., கணிதம் முடிக்கும் போது,
கண்பார்வை முழுமையாகப் போய் விட்டது. இரண்டு ஆண்டுகள், வீட்டிலேயே அடைந்து
கிடந்தேன். பின், என் தோழி கொடுத்த ஊக்கத்தால், ஜல்காவ் சென்று,
எம்.எஸ்சி., படித்து முடித்தேன்.நான் எம்.எஸ்சி., படித்த போது, பேராசிரியர்
வீரமணி கொடுத்த ஊக்கத்தால், பிஎச்.டி., முடித்தேன். யு.ஜி.சி.,யைப் போல்,
அறிவியல் பிரிவிற்கு வைக்கப்படும், சி.எஸ்.ஐ.ஆர்., தேர்வில், "பெலோஷிப்'
அளவிற்கு தேர்வானேன். நேஷனல் போர்டு பார் ஹையர் மேத்தமேடிக்ஸ் பெலோஷிப்
கிடைக்கவே, சென்னையிலுள்ள, ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படித்து முடித்தேன்.
கண்பார்வை இன்றி, நான் பிஎச்.டி., முடித்ததை, அப்போதைய பிரதமர் தேவகவுடா,
தனிப்பட்ட முறையில் எனக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். இவற்றை எல்லாம்
சாதிப்பேனா என, ஆரம்பத்தில் எனக்குத் தெரியாது. எதையும் நான்
எதிர்பார்க்கவும் இல்லை. எதிர்ப்பட்ட எதையும், சவாலாக எடுத்துக் கொண்டு,
சாதிக்காமல் விட்டதில்லை.என் போன்றோரை, பரிதாபத்தோடு பார்க்காதீர்கள்;
அதுதான், எங்களை பலவீனப்படுத்தும். சாதாரண மக்களைப் போல் பாவித்து,
ஊக்கமளித்தால், நாங்களும் பல சாதனைகள் புரிவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக