bharathi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
bharathi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 செப்டம்பர், 2012

அன்பை வளர்க்கும் வழி-பாரதியார்

அன்பை வளர்க்கும் வழி

* ஏழைகளுக்கு வயிறு நிறைய அன்னம் இடுவது தான் மேலான தர்மம். அதை விடச் சிறந்தது ஏழை ஒருவன் கல்விகற்க வழிசெய்வது தான்.
* பிறர் சொத்தை அபகரிக்க மனதால் நினைப்பது கூட, திருடுவதற்குச் சமமானதாகும். அதற்குரிய தண்டனை மனிதன் மூலம் கிடைக்காவிட்டாலும், இயற்கை மூலம் கிடைத்தே தீரும்.
* தனக்கும், குடும்பத்திற்கும், நாட்டுக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் வாழ்வதையே வாழ்வின் நோக்கமாக கொள்ளுங்கள்.
* மாற்றம் என்பது உலகநியதி. அதற்காக, அனைத்தையும் மாற்றிக் கொள்வதும் இயலாது. பொருள் பொதிந்த அம்சங்களை வைத்துக் கொண்டு. பயனில்லாத அம்சங்களை விட்டுவிடுங்கள்.
* மண்ணும், காற்றும், நீரும், நிலாவும், நம்மைச் சுற்றி வாழும் அனைத்து உயிர்களும் தெய்வமென்று வேதம் கூறுகிறது. இயற்கையைத் தவிர வேறு தெய்வமில்லை.
* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால், ஆண்கள் பெண்களிடம் அன்பு காட்ட வேண்டும். அன்பை வளர்க்கும் வழி இதுவே.
-பாரதியார்

சனி, 8 செப்டம்பர், 2012

பாரதி போன்ற ஒரு போராளி தேவை: திருமாவளவன்




பாரதி போன்ற ஒரு போராளி தேவை: திருமாவளவன்


தில்லித் தமிழ்ச் சங்கத்தில், "பாரதியின் தொலைநோக்கு' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். (வலது படம்)
புது தில்லி, செப். 7: பாரதி போன்ற போராளி இன்றைய இந்தியாவின் தேவை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.தில்லி தமிழ்ச் சங்கத்தில், "பாரதியின் தொலைநோக்கு' என்ற தலைப்பில் வியாழக்கிழமை அவர் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதில் அவர் பேசியதாவது:நம் நாட்டில் சுதந்திரப் போராட்டத்தை பல தலைவர்கள் தீவிரப்படுத்தும் முன்பே அதன் தாக்கத்தை உணர்ந்தவர் மகாகவி பாரதி. 1882-1921-ம் ஆண்டுவரை அவர் வாழ்ந்தார். அவரது காலச் சூழல் சாதியம், பார்ப்பனியம், வெள்ளையர் ஆதிக்கம் நிறைந்தவையாக இருந்தது. அந்த காலகட்டத்திலும் சமூக விழிப்புணர்வு, பெண் விடுதலை, சுதந்திரம், தொழில்நுட்பம், அறிவியல், உலக நாடுகளின் வளர்ச்சி போன்றவற்றையெல்லாம் பாரதியால் சிந்திக்க முடிந்தது. ஒரு கவிஞனாகவும் சமூகப் போராளியாகவும் வாழ்ந்தவர் பாரதி. ஆணுக்குப் பெண் சமம், சாதிய ஒழிப்பு போன்ற அவரது நூற்றாண்டுக்கு முந்தைய கனவுகள் இன்று நிஜங்களாகி வருகின்றன. சுதந்திரத்துக்கு வித்திட்ட மகாத்மா காந்தியடிகள், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் படித்துவிட்டு வந்து, தாய் நாட்டில் சுதந்திர தாக்கத்தை ஏற்படுத்தினர். சமூகச் சீர்திருத்தவாதியான பெரியார், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி நீதிக் கட்சியைத் தொடங்கி மொழிச் சுதந்திரத்துக்காகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். ஆனால், எந்தப் பின்னணியும் இல்லாமல் சாதிய அடக்குமுறை நிறைந்த சூழலில் தேச விடுதலை, சமூகச் சீர்த்திருத்தங்கள் ஆகியவை குறித்து கனவு கண்டு அதைத் தனது கவிப் புலமையால் வெளிப்படுத்த பாரதியால் மட்டுமே முடிந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர் இந்த நாட்டில் பிரதமராக வர முடியுமா?அதை அக்காலத்திலேயே சிந்தித்த பாரதி, "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்றார். சந்திர மண்டலத்தில் அடி எடுத்து வைத்த முதல் மனிதன் நீல் ஆர்ம்ஸ்டிராங் 82 வயதில் அண்மையில் காலமானார். நீல் ஆம்ஸ்டிராங் சந்திர மண்டலத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதை 1960 ஜூலை 20-ம் தேதிதான் அறிந்தார்.ஆனால், சந்திர மண்டலத்துக்கு நீல் ஆர்ம்ஸ்டிராங் செல்லும் முன்பே "வானை அளப்போம், விண்மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என கவிதை படைத்தார் பாரதி. அவரைப் போன்ற போராளி எங்கள் இயக்கத்துக்கு இல்லை. இன்று அவர் இருந்திருந்தால் எங்கள் இயக்கத்துக்குத் தலைவராகியிருப்பார். அவ்வாறான போராளி இன்றைய இந்தியாவின் தேவை என்றார் திருமாவளவன்.நிகழ்ச்சிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் எம்.என். கிருஷ்ணமணி தலைமை வகித்தார். ஆன்மிகச் சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்றார். பொருளாளர் பி. அறிவழகன் நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர் எம். ஆறுமுகம் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.

வெள்ளி, 9 மார்ச், 2012


பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் நிறுவப்பட்ட அப்புசாமி - சீதா பாட்டி இசைக்கூடல் அமைப்பு, மற்ற சபாக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நன்றே அடிப்படை என்ற உயர்ந்த குறிக்கோளுடன் கலைஞர்களை தேர்ந் தெடுத்து, மேடை வாய்ப்பு கொடுக்கும் இதன் நோக்கங்கள் சிறப்பானவை. மயிலை, கற்பகாம்பாள் நகர் கோகலே சாஸ்திரி வளாகத்தில் நடைபெற்றது, இந்த இசை நிகழ்ச்சி. இசைக் கலைமணி மல்லிகா ரமணன் இந்த நிகழ்ச்சியில், மகாகவி பாரதியின் அற்புத படைப்புகளை முழுவதுமாக தேர்ந்தெடுத்து, தமிழ் மணக்க, செவிகள் இனிக்கப் பாடியது, கேட்க இன்பமாக இருந்தது. கர்நாடக இசைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்கள் பெரும்பாலும், துக்கடாக்களின் பகுதியிலோ அல்லது இடைச் செருகலாகவோ மட்டுமே இடம் பெற்று வருவது, மிக வருந்தத்தக்க நிலையாகும். மிகத் துணிவாக, பாரதியின் முழு தமிழ்ப் பாடல்களை மட்டுமே உள்ளடக்கிய இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு வேளை, மகாகவி பாரதியின் வீரம் செறிந்த பாடல்கள் காரணமாக இந்த ஏற்பாடா எனத் தெரியவில்லை.

மல்லிகா ரமணன் நிகழ்ச்சியின் துவக்கத்தில், மகாகவி பாரதியின் விநாயகர் நான்மணி மாலையில் இருந்து, கற்பக விநாயக கடவுளைப் போற்றி (கல்யாணி) என்று மதுரமாகப் பாடி, தொடர்ந்து பாருக்குள்ளே (ஜோன்புரி) - மற்றும் இமயமலை (மோகனம் - சண்முகப்ரியா - பெகாக்) ராகங்களில் பாடியது, குறிப்பாக சங்கதிகளில் வல்லினம், மெல்லினம் தெரிந்து இதமாகப் பாடியது, கேட்க பரவசமாக இருந்தது.

நிகழ்ச்சியில், மகாகவி பாரதியின் அருமையான பாடல்களாக செந்தமிழ் நாடெனும் (செஞ்சுருட்டி), எந்தையும் தாயும் (இந்தோளம்), "வாழ்க நீ எம்மானிந் (சுருட்டி) கானடா - மோகனம் - தன்யாகி, (மத்யமாவதி) காந்திஜி மீது அவர் பாடிய வரிகளில், மனம் நெகிழ்ந்துருகியது. வெள்ளைத் தாமரை (பீம்ப்ளாஸ்) கலைமகளின் சிறப்பு சங்கதிகள் அருமை. தீராத விளையாட்டுப் பிள்ளை (ராகமாலிகை) உச்சரிப்பு தெளிவுடன், அமரர் டி.கே.பியை நினைவு படுத்தியது. ரமணனின் குரலில், நவரச உணர்வுகளையும் கேட்டு மகிழ முடிந்தது. வாழிய செந்தமிழுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. மோகனம் - இந்தோனம் ராகங்களில் விரிவுகளை அநாயாசமாக, குறிப்பாக மேல்ஸ்தாயி படு துல்லியமாக கேட்க பரவசமூட்டியது. டாக்டர் பாலமுரளியிடம் பயின்றவர் என்று அறியப்பட்ட, இப்படிப்பட்ட இசைக் கலைஞர்களின் பாடல்களை இந்த மேடையிலாவது கேட்டு மகிழும் வாய்ப்பு கிடைத்ததற்காக, அப்புசாமி - சீதாபாட்டி இசைக்கூடலை வாழ்த்தலாம். மல்லிகா ரமணனுக்கு பக்கவாத்தியம் படு அமர்க்களம். வயலினில் சிவகாமி நாராயணனின் அடக்கமும், நயமுமான வாசிப்பு மனதை விட்டகலவில்லை. மிருதங்கத்தில் மதுரமான நாதத்துடன், நயமாக வாசித்த கலைஞர் லட்சுமி கணேஷ், ஒரு பெரிய லயசிம்மத்தின் புதல்வர். கும்பகோணம் நாராயணசாமி அய்யர் லயத்தில் ஒரு ஆலவிருட்சமாக திகழ்ந்தவர் மட்டுமின்றி, பல லய வேர்களை உருவாக்கியவர். லட்சுமி கணேஷ் இந்த நிகழ்ச்சியில் வாசித்த விதம், மிக உயர்வானது; பாராட்டத்தக்கது.

- மாளவிகா