ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

பூமியை ப் பிரிந்த நிலா மனிதன்








பூமியை ப் பிரிந்த நிலா மனிதன் 


" நிலா, நிலா, ஓடி வா... நில்லாமல் ஓடி வா...' என நாம் பாட்டு பாடிக்கொண்டிருந்த நேரத்தில், நிலவில் நடந்து, உலகையே வியக்க வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்.
1930 ஆக., 5ம் நாள் அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் நீல் ஆல்டென் ஆம்ஸ்ட்ராங். தனது 6ம் வயதிலேயே முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டார். கார் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பே, "பைலட்' உரிமம் பெற்றவர். தொடர்ந்து "கடற்படை பைலட்' உரிமமும் பெற்றார். 1950ல் கொரிய போரின் போது, அமெரிக்க கடற்படை ஜெட் வீரராக பணியாற்றினார். 1955ல் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1958ல் நாசாவின் "விமானவியல் ஆலோசனை குழு'வில் சேர்ந்தார். உலகின் சிறந்த "சோதனை விமானி,' என பெயர் பெற்றார்.

நிலவில் மனிதன்: முதலில் நிலவில் மனிதனை இறக்குவது யார் என்பதில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போட்டி இருந்தது. இந்நிலையில், "அப்போலோ' என்ற விண்கலத்தை அமெரிக்கா தயாரித்து, அதில் பயணம் செய்ய ஆம்ஸ்ட்ராங்கை தேர்வு செய்தது. 1969, ஜூலை 16ம் தேதி நிலவுக்கு "அப்போலோ' பயணமானது. இதில் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் கொலின்ஸ், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய வீரர்கள் பயணமாகினர். நான்கு நாட்கள் பயணம் செய்து, ஜூலை 20ம் நாள் இரவு 8.17 மணிக்கு நிலவில் விண்கலம் இறங்கியது. விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் முதல் காலடி வைத்தார், நீல் ஆம்ஸ்ட்ராங். 20 நிமிடங்கள் கழித்து எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். அப்போது, ஆம்ஸ்ட்ராங், ""மனிதனுக்கு இது சிறிய காலடி; மனித இனத்துக்கு மிகப்பெரிய பாய்ச்சல்'' எனக் குறிப்பிட்டார். இந்த வாசகம், பிற்காலத்தில் பிரபலம் அடைந்தது. தொடந்து பாறைகளை புகைப்படம் எடுத்தனர். பாறைகளின் மாதிரிகளை சேகரித்தனர். நிலவில் 2 மணி 32 நிமிடங்கள் இருந்த ஆம்ஸ்ட்ராங், சாதனையின் அடையாளமாக, அமெரிக்க தேசியக் கொடியையும் நட்டு வைத்தார்.

பூமி திரும்பிய ஆம்ஸ்ட்ராங், பேட்டி அளிக்கும்போது, ""நிலவில் நடந்தது, குழந்தை தவழ்வது போன்று இருந்தது,'' என்றார். ஆல்ட்ரின் கூறுகையில், ""நிலவில் இருந்தது பெரிய நிகழ்வாகவும், பெருமைக்குரிய தருணமாகவும் இருந்தது,'' என்றார். தொடர்ந்து, நாசாவில் ஆராய்ச்சி பிரிவில் ஆலோசகராக பணியாற்றினார். பின் நாசாவிலிருந்து விலகி சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். அனைத்து நாட்டு மக்களையும் கவர்ந்த "நிலா மனிதன்' ஆர்ம்ஸ்ட்ராங், ஆக.25ம் தேதி, 82வது வயதில் இறந்தார். இவரது பிரிவு, மனித இனத்துக்கு பேரிழப்பு தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக