வெள்ளி, 7 செப்டம்பர், 2012

"முதலிடம் நான் எதிர்பாராதது!'


சொல்கிறார்கள்


"முதலிடம் நான் எதிர்பாராதது!' 

 ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ள சித்ரா: நான், 1993ல், இளங்கலை வேதியியல் முடித்தேன். அந்த ஆண்டே, திருமணம் நடந்தது. கணவர் திருப்பதி, ஆசிரியர். அடுத்தடுத்து, இரண்டு பெண் குழந்தைகள் பிறக்க, அவர்களை வளர்ப்பதற்கும், குடும்பத்தைக் கவனிப்பதற்குமே, நேரம் சரியாக இருந்தது. பின், 2008ம் ஆண்டு, பி.எட்., படிக்குமாறு என் கணவர் ஊக்குவித்தார். வேதாரண்யம் ராமச்சந்திரா கல்வியியல் கல்லூரியில், பி.எட்., முடித்தேன். அதிலிருந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளுக்காக, தொடர்ந்து தயாராகி வந்தேன்; அடுத்தடுத்து தேர்வுகள் எழுதியதில், தோல்வியே கிடைத்தது. தேர்வில், வெற்றி பெற்றவர்கள் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை வாங்கி, அனைத்தையும் தொகுத்துப் படித்து வந்தேன். ஆசிரியர் தகுதித் தேர்விற்காக, எந்தத் தனிப் பயிற்சியும் பெறவில்லை. பழைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கடினமான கணக்குகளைப் போட்டுப் பார்ப்பேன். இதனால், தேர்வில் குறைந்த நேரத்திலேயே, கணிதம் சார்ந்த வினாக்களுக்கு விடையளிக்க முடிந்தது. என் மூத்த மகளுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை வீட்டில் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். தற்போது, பிளஸ் 1 படிக்கும் என் இளைய மகளுக்கு, நான் தான் டியூஷன் ஆசிரியர். அதனால், அவர்கள் பாடங்கள் எனக்கு அத்துப்படி ஆகிவிட்டன. இந்த வெற்றிக்கு என் கணவருக்கும், மகள்களுக்கும் தான், நன்றி சொல்ல வேண்டும். அனைத்திற்கும் மேலாக, வீட்டிற்குள்ளேயே இருந்து, எனக்கு "போர்' அடித்து விட்டது. எப்படியாவது, இந்தத் தேர்வில் வெற்றி பெற்று, நாமும் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவராக உலா வர வேண்டும் என்ற உத்வேகத்தில் தான், காலை, 4.00 மணிக்கு எழுந்து படித்தேன்; அதன் பலனாக, 150க்கு, 142 மதிப்பெண் பெற்றேன். அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்வாகி விடுவேன் எனத் தெரியும். ஆனால், தமிழகத்தில் முதலிடம் பெற்றது, நான் எதிர்பாராதது; மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குடும்பப் பெண்களும், முயற்சி செய்தால் சாதிக்கலாம் என்பதற்கு, நானே உதாரணம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக