சனி, 8 செப்டம்பர், 2012

ஏழைகளுக்கு இலவசப் பண்டுவம் செய்யும் கண் மருத்துவர்: இன்று தேசிய கண் கொடை நாள் - free eye operation by Dr.Parikumar

ஏழைகளுக்கு இலவசப் பண்டுவம்  செய்யும் கண்  மருத்துவர்: இன்று தேசிய கண்  கொடை நாள்
தர்மபுரி: மருத்துவ துறையில், சேவை மனப்பான்மை குறைந்து வரும் நிலையில், தர்மபுரியில், தனியார் கண் மருத்துவர், ஏழைகளுக்கு, இலவச கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்தவர் கண் மருத்துவர் பாரிக்குமார், 45. திருப்பத்தூரில் பள்ளி படிப்பையும், செங்கல்பட்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பும், சென்னையில் கண் மருத்துவத்துக்கான உயர் படிப்பையும் படித்துள்ளார். படிக்கும் போதே சேவை மனப்பான்மை கொண்ட பாரிக்குமார், 2000ம் ஆண்டு கண் மருத்துவர்கள் குறைவாக இருந்த தர்மபுரியில், கண் மருத்துவமனை தொடங்கி ஏழைகளுக்கு தொடர்ந்து இலவச சிகிச்சை அளித்து வருகிறார். தர்மபுரி கண்தான மையத்தினருடன் இணைந்து இறந்தவர்களின் கண்களை இலவசமாக ஆப்ரேஷன் செய்து, கண் இல்லாதவர்களுக்கு கண் ஒளி கொடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இது வரை, இறந்த, 240 பேரின் கண்களை இலவசமாக ஆப்ரேஷன் மூலம் தானமாக பெற்று, பெங்களூரு மற்றும் கோவை கண் மருத்துவ மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், கண் அலர்ஜி மற்றும் பிறவி குறைபாடு, கிருமிகளால் கண் பார்வை பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, கண் பரிசோதனை, அறுவை சிக்சைகளை, 12 ஆண்டாக இலவசமாக செய்து வருகிறார். இவர் இது வரை, 15 ஆயிரம் கண் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதில், 7,000 சிகிச்சை இலவசமாக செய்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட, 300 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்திருப்பது குறிப்பிடதக்கது. இவரது மருத்துவமனையில், 2008ம் ஆண்டு முதல் ஏழைகளுக்கு மட்டும் முழு நேர இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

மனித நேயத்துடன் மருத்துவ பணிக்கு பெருமை சேர்க்கும் கண் மருத்துவர் பாரிக்குமார், கண் தான தினத்தில், கண் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என வலியுறுத்தி கூறியதாவது: மனிதனுக்கு, கண் மிகவும் முக்கியமான உறுப்பு. இதை மனிதர்கள் தங்கள் இருக்கும் வரை பாதுகாக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சோதனை செய்து கண்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். மதுவினால் கண்பார்வை பாதிக்கும் நிலையுள்ளதால், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவில் ஆண்டுக்கு, ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு, கண்கள் தேவைப்படுகிறது. பொதுமக்கள் கண்தானம் வழங்க முன் வர வேண்டும். இதன் மூலம் நாம் மண்ணை விட்டு மறைந்தாலும், நம் கண்கள் பார்வையற்ற பலருக்கு ஒளியாய் அமையும், மண்ணில் தொடர்ந்து வாழும். இவ்வாறு அவர் கூறினார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பாரிவள்ளல் பெயர் கொண்டவர் பெயருக்கேற்ப வாழ்வதற்குப் பாராட்டுகள்.  அனைத்து மருத்துவர்களும் இவரைப் பின்பற்ற வேண்டும்.  கண்கொடைச் செய்தியை இவர் தொண்டு மூலம் விளக்கி உள்ள தினமலருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக