திங்கள், 3 செப்டம்பர், 2012

மதியிறுக்கம் (ஆட்டிசம்) பாதித்த பெண்ணின் இயல் மிகைத் திறமை







சென்னை:"ஆட்டிசம்' எனப்படும் உளவியல் ரீதியிலான குறைபாடு உள்ள பெண் ஒருவர், 1,500 துண்டுகள் புதிர் விளையாட்டு அட்டைகளை ஒன்று சேர்க்கும் திறன் பெற்றிருக்கிறார்.

"ஆட்டிசம்' எனப்படும் உளவியல் ரீதியிலான குறைபாடு, நோயாக கருதப்படவில்லை. குழந்தை பிறந்த மூன்றாண்டுகளுக்குள் இதற்கான அறிகுறிகள் தெரியும். இந்த குறைபாடு உள்ள குழந்தைகளிடம் உள்ள குணங்கள் பலவகையாக இருக்கும். இதை நிறப்பிரிகை குறைபாடு என்கின்றனர். அதாவது, இந்த குறைபாடு உள்ள ஒரு குழந்தையிடம் உள்ள குணங்கள், இதே குறைபாடு உள்ள மற்றொரு குழந்தையிடம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
சிறப்பு திறன்

இன்று, 166 குழந்தைகளில் ஒரு குழந்தை வீதம் இந்த குறைபாடு பரவி வருவதாகத் தெரிகிறது. அதேநேரம் குழந்தைகளை மட்டுமல்லாமல், வயதுக்கு வந்தவர்களையும் இந்தக் குறைபாடு தாக்க வாய்ப்புள்ளது. இவ்வகையில் பாதிக்கப்பட்டவர் தான்ஐஸ்வர்யா,30. அவரிடம் உள்ள சிறப்புத் திறன், புதிர் விளையாட்டு அட்டைகளை ஒன்று சேர்ப்பதுதான்.பொதுவாக, சராசரியான குழந்தைகள், 50 துண்டுகள் வரை ஒன்று சேர்ப்பர். அதற்கே மணிக்கணக்கில் ஆகிவிடும். ஆனால் "ஆட்டிசத்தால்' பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, 1,500 துண்டுகளை ஒன்று சேர்க்கும் திறன் பெற்றிருக்கிறார்.

ஆசிரியர் பயிற்சி

இவரது தாயார் கிரிஜா, இதுபற்றிக் கூறியதாவது:"ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் ஐஸ்வர்யாவை சேர்த்தேன். அங்கு சொல்லிக் கொடுக்கும் செயல்களை இவள் வீட்டிலும் செய்ய வேண்டும். அதற்காகவே நானும், சிறப்பு ஆசிரியர் பயிற்சி எடுத்தேன். இவளுக்கு, 10 வயது இருக்கும் போது, பள்ளியில் ஒரு நாள் புதிர் அட்டை பெட்டி கீழே விழுந்து விட்டது. பயந்து அழத்துவங்கியவள் பின், மெதுவாக ஒவ்வொரு புதிர் வடிவங்களுக்கான அட்டைகளையும் சரியான ஒழுங்கில் அடுக்கியிருக்கிறாள்.பத்து, இருபது அட்டை என துவங்கியவள் இன்று, 1,500 புதிர் அட்டைகளை சேர்த்து விடுகிறாள். தினமும் சிலமணி நேரம் இதற்காக செலவு செய்வாள். அது எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். திடீரென்று, இரவு 2 மணிக்கு எழுப்புவாள். நாங்களும் கண்விழிப்போம். 500 அட்டைகளை இரண்டு நாளிலும், 1,000த்தை ஐந்து நாளிலும், 1,500 ஐ ஏழு நாளிலும் முடிக்கிறாள்.அதிக அக்கறை வேண்டும்ஏதாவது வேலை சொன்னால் செய்வாள். காய்கறிகளை ஒரே வடிவத்தில் வெட்டுவாள். ஆனால், அவளுக்கு தோன்றும்போது செய்வாள். ஐந்து குழந்தைகளை வளர்ப்பதும், இவளை வளர்ப்பதும் சமம். எப்போதும்ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒரு நாள் கையில் வெட்டுப்பட்டது. துணி, மருந்து எடுத்து வந்தாள். ஆனால், எப்படி கட்டுவது எனத் தெரியவில்லை. இதுதான் இவளது குணம். "ஆட்டிசம்' குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றோர்தான், அதிக பொறுமையுடன் அக்கறை எடுத்து கவனிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக