தில்லித் தமிழ்ச் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தில்லித் தமிழ்ச் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மொழி ஆய்வுக்குப் பன்மொழி அறிவு:பாப்பையா

மொழி ஆய்வுக்குப் பன்மொழி அறிவு கட்டாயத்தேவ‌ை: சாலமன் பாப்பையா









மொழி ஆய்வுக்கு பன்மொழி அறிவு மிகவும் அவசியம் என்றும் அப்போதுதான் நம் மொழி பற்றி தெளிவைப் பெற முடியும் என்றும், பேராசிரியர் சாலமன் பாப்பையா கேட்டுக் கொண்டார்.
தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில், திருக்குறள் ஆராய்ச்சி மையத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திருக்குறள் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கிவைத்து சாலமன்
பாப்பையா ஆற்றிய உரை:
தில்லிவாழ் மக்கள் திருக்குறள் பற்றி அறிந்து கொள்ளும் புதிய வேள்வியாக தில்லி தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடங்கிவைப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
திருக்குறளில் ஆராய்ச்சி என வரும் போது, மிக நுணுக்கமாக ஆய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணி. அக்காலத்தில் திருக்குறளை வீதியோர சாதாரண மனிதருக்கும் கிடைக்கச் செய்ய மு. வரதராசனார் போன்றோர் முயற்சிகள் மேற்கொண்டனர். அவருக்கு முன்பாக வீரமாமுனிவர் 250 குறள்களுக்கு உரை எழுதி, படிப்பறிவற்ற மக்களும் படித்துப் பயன்பெற வழிகண்டார்.
திருக்குறள் போன்ற இலக்கிய நூல்களை அனைவரும் பயன்பெறும் வகையில் பதிப்பித்து வெளியிடுவதில் திருப்பனந்தாள் திருமடம் போன்ற அமைப்புகளின் பணி போற்றத்தக்கது.
மொழி ஆய்வுக்கு பன்மொழி அறிவு மிகவும் அவசியமாகிறது. அப்போதுதான் நம் மொழி பற்றி தெளிவைப் பெற முடியும். ஆய்வையும் தெளிவாகச் செய்யும் முடியும் என்றார் சாலமன் பாப்பையா.
தில்லி தமிழ்ச் சங்கத் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி ஆற்றிய தலைமையுரை: தில்லி தமிழ்ச் சங்கத்தைப் பொருத்தமட்டில், எனக்கு 6 கனவுகள் இருந்தன. அதில் நான்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. திருக்குறள் ஆராய்ச்சி மையம் அமைப்பது குறித்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
மேலும், சங்கத்தில் இசை, நாட்டியக் கல்லூரி அமைக்கும் கனவு நிறைவேற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, தில்லிவாழ் தமிழர்களும் தங்களுக்குள்ள கருத்து வேறுபாடு, மனமாச்சரியங்களை மறந்து தில்லி தமிழ்ச் சங்கப் பணிக்கான வளர்ச்சியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அக்கனவும் நிறைவேறும். இதற்கான முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும்.
ஏழாவது கனவாக தற்போது எனக்கு ஒன்று ஏற்பட்டுள்ளது. அது திருவள்ளுவர் போன்று கம்பனுக்கும் விழா எடுப்பதாகும். ஒவ்வொரு ஆண்டும் தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் கம்பன் விழா எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னதாக, தில்லி தமிழ்ச் சங்கச் செயற்குழு உறுப்பினர் எம். ஆறுமுகம் தொடக்கவுரையாற்றினார். அவர் பேசுகையில், "புதிய கருத்துகளை உள்ளடக்கி, எழுதப்பட்ட திருக்குறள் சிந்தனைப் பெட்டமாகத் திகழ்கிறது. இந்த ஆராய்ச்சி மையத்தைத் தொடர்ந்து, விரைவில் இசைக் கல்லூரியும் தொடங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
தில்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் மாரியப்பன், தில்லி தமிழ்ச் சங்க முன்னாள் துணைத் தலைவர் புலவர் ரா. விஸ்வநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
சங்கச் செயற்குழு உறுப்பினர் பி. சங்கர் நன்றி கூறினார். விழாவில் சாலமன் பாப்பையாவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திருக்குறள் செம்மல் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகளும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
"திருக்குறளை குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும்'
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காசிமடம், இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் வாழ்த்திப் பேசியது:
எந்த ஓர் இனம் சிந்தனை உடையதாக இருக்கிறதோ, அந்த இனத்தின் மொழி வளமுடையதாகிறது. அந்த மொழி வளம்பெறும் போது சிந்தனையும் மேலும் வளம்பெறும்.
1,000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களின் சிந்தனை பெற்றவர்களாக விளங்கினர். அதனால், தமிழும் வளமுடையதாக விளங்குகிறது. திருக்குறளில் இல்லாத கருத்துகளே இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு திருக்குறள் படிக்க ஆர்வம் பெறச் செய்ய வேண்டும். தாங்களே திருக்குறளை ஆர்வமுடன் படிப்பதுடன், குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும். திருமடத்தின் திருக்குறள் அறக்கட்டளை மூலமும், திருமடத்தின் மூலமும் திருக்குறளை அடக்க விலைக்கே பதிப்பித்து வழங்கி வருகிறோம் என்றார் தம்பிரான் சுவாமிகள்.

சனி, 8 செப்டம்பர், 2012

பாரதி போன்ற ஒரு போராளி தேவை: திருமாவளவன்




பாரதி போன்ற ஒரு போராளி தேவை: திருமாவளவன்


தில்லித் தமிழ்ச் சங்கத்தில், "பாரதியின் தொலைநோக்கு' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். (வலது படம்)
புது தில்லி, செப். 7: பாரதி போன்ற போராளி இன்றைய இந்தியாவின் தேவை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.தில்லி தமிழ்ச் சங்கத்தில், "பாரதியின் தொலைநோக்கு' என்ற தலைப்பில் வியாழக்கிழமை அவர் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதில் அவர் பேசியதாவது:நம் நாட்டில் சுதந்திரப் போராட்டத்தை பல தலைவர்கள் தீவிரப்படுத்தும் முன்பே அதன் தாக்கத்தை உணர்ந்தவர் மகாகவி பாரதி. 1882-1921-ம் ஆண்டுவரை அவர் வாழ்ந்தார். அவரது காலச் சூழல் சாதியம், பார்ப்பனியம், வெள்ளையர் ஆதிக்கம் நிறைந்தவையாக இருந்தது. அந்த காலகட்டத்திலும் சமூக விழிப்புணர்வு, பெண் விடுதலை, சுதந்திரம், தொழில்நுட்பம், அறிவியல், உலக நாடுகளின் வளர்ச்சி போன்றவற்றையெல்லாம் பாரதியால் சிந்திக்க முடிந்தது. ஒரு கவிஞனாகவும் சமூகப் போராளியாகவும் வாழ்ந்தவர் பாரதி. ஆணுக்குப் பெண் சமம், சாதிய ஒழிப்பு போன்ற அவரது நூற்றாண்டுக்கு முந்தைய கனவுகள் இன்று நிஜங்களாகி வருகின்றன. சுதந்திரத்துக்கு வித்திட்ட மகாத்மா காந்தியடிகள், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் படித்துவிட்டு வந்து, தாய் நாட்டில் சுதந்திர தாக்கத்தை ஏற்படுத்தினர். சமூகச் சீர்திருத்தவாதியான பெரியார், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி நீதிக் கட்சியைத் தொடங்கி மொழிச் சுதந்திரத்துக்காகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். ஆனால், எந்தப் பின்னணியும் இல்லாமல் சாதிய அடக்குமுறை நிறைந்த சூழலில் தேச விடுதலை, சமூகச் சீர்த்திருத்தங்கள் ஆகியவை குறித்து கனவு கண்டு அதைத் தனது கவிப் புலமையால் வெளிப்படுத்த பாரதியால் மட்டுமே முடிந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர் இந்த நாட்டில் பிரதமராக வர முடியுமா?அதை அக்காலத்திலேயே சிந்தித்த பாரதி, "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்றார். சந்திர மண்டலத்தில் அடி எடுத்து வைத்த முதல் மனிதன் நீல் ஆர்ம்ஸ்டிராங் 82 வயதில் அண்மையில் காலமானார். நீல் ஆம்ஸ்டிராங் சந்திர மண்டலத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதை 1960 ஜூலை 20-ம் தேதிதான் அறிந்தார்.ஆனால், சந்திர மண்டலத்துக்கு நீல் ஆர்ம்ஸ்டிராங் செல்லும் முன்பே "வானை அளப்போம், விண்மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என கவிதை படைத்தார் பாரதி. அவரைப் போன்ற போராளி எங்கள் இயக்கத்துக்கு இல்லை. இன்று அவர் இருந்திருந்தால் எங்கள் இயக்கத்துக்குத் தலைவராகியிருப்பார். அவ்வாறான போராளி இன்றைய இந்தியாவின் தேவை என்றார் திருமாவளவன்.நிகழ்ச்சிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் எம்.என். கிருஷ்ணமணி தலைமை வகித்தார். ஆன்மிகச் சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்றார். பொருளாளர் பி. அறிவழகன் நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர் எம். ஆறுமுகம் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தில்லித் தமிழ்ச் சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள்

தில்லி தமிழ் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள்

First Published : 30 Sep 2011 03:41:29 AM IST


சங்கத் தலைவர் கிருஷ்ணமணி, செயலர் முகுந்தன்.
 புது தில்லி, செப்.29: தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:  தலைவர் : எம்.என். கிருஷ்ணமணி.  பொதுச் செயலாளர் : ஆர். முகுந்தன்.  துணைத் தலைவர்: ரமாமணி சுந்தர்.  இணைச் செயலர்கள்: கெளரி இளங்கோவன், பி. ராகவன் நாயுடு.  பொருளாளர்: பி. அறிவழகன்.  இணைப் பொருளாளர்: எஸ். நரசிம்ம மூர்த்தி  செயற்குழு உறுப்பினர்கள்: வி.அனுராதா, உமா பிரபாகர், எம். ஆறுமுகம், கே.ஆர். இளங்கோ, சு. லட்சுமணன், ப. ராமமூர்த்தி, சேதுராமன், பி.சங்கர், டாக்டர் எம். சுந்தரராஜன், அ. வெங்கடேசன்.  பேனல் உறுப்பினர்கள் (காத்திருப்பு உறுப்பினர்கள்): பி. குமார், எஸ். பெரியசாமி.