புத்தரின் பொருள்களை இலங்கைக்கு அனுப்பாதீர் : தலைமையமைச்சருக்கு வைகோ கடிதம்
சென்னை,
செப்., 05 : புத்த பெருமானின் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லாத, கொலைகார
மகிந்த ராஜபக்சே ஆட்சி செய்யும் இலங்கைக்கு புத்தரின் புனிதப் பொருட்களை
அனுப்ப வேண்டாம் என்று கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர்
மன்மோகன்சிங்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வைகோ அனுப்பியுள்ள
கடிதத்தில், உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை வேதனைக்கு உள்ளாக்குகின்ற ஒரு
செய்தியைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விழைகின்றேன். தில்லியில் உள்ள
தேசிய ஆவணக்காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ள, புத்த பெருமானின்
எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் நாள்
முதல், செப்டெம்பர் மாதம் 5 ஆம் நாள் வரையிலும், இலங்கை முழுவதும்
காட்சிப் பொருளாக வைப்பதற்காகக் கொண்டு செல்வது என, இந்திய அரசும், இலங்கை
அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வெளியாகி
உள்ளன. தில்லி தேசிய ஆவணக்காப்பகத்தின் பொது இயக்குநர்
பிரவீண் ஸ்ரீ வத்சவா, இலங்கை அரசின் புத்தசாசனம் மற்றும் சமயங்கள் துறையின்
அமைச்சகச் செயலாளர் கேஷியன் ஹெராத் ஆகிய இருவரும், கொழும்பு நகரில், மே 18
ஆம் நாள், இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு உள்ளனர்.இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் வேண்டுகோளை ஏற்று, இந்திய அரசு இம்முடிவை மேற்கொண்டு இருப்பதாகத் தெரிகின்றது. இந்திய
அரசின் முடிவு, வெந்து போன தமிழர்களின் நெஞ்சில் வேல் கொண்டு குத்துவதாக
இருக்கின்றது. மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை
செய்தது, சிங்கள இனவாத அரசு. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச்செயலாளரால்
நியமிக்கப்பட்ட மூவர் குழு அளித்த அறிக்கை அதை உறுதிப்படுத்துகின்றது.
அப்பாவித் தமிழர்கள், குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோரை, சிங்கள
இராணுவம் ஈவு, இரக்கம் இன்றிக் கொன்று குவித்தது. இப்போது, உலகநாடுகளின்
மனசாட்சி விழித்துக் கொள்ளத் தொடங்கி இருக்கின்றது. கொலைகார மகிந்த
ராஜபக்சேவையும், அவனது கூட்டாளிகளையும், பன்னாட்டுக் குற்றவியல்
நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு
வருகின்றார்கள். ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
குழுவில், இலங்கையின் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட
தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு, இந்திய அரசு முனைப்போடு
முன்நின்று பணியாற்றியது. இலங்கை அரசு செய்த இனப்படுகொலைகளை மறைத்து,
அவர்களைப் பாதுகாக்க முயன்றது. எனவே, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்திட,
இலங்கைக்கு ஆயுதங்கள், இராணுவ உதவிகளை வழங்கிய இந்தியாவும் ஒரு கூட்டுக்
குற்றவாளியே என்பதை நான் மிகுந்த வேதனையோடு குறிப்பிடுகின்றேன். 2009
ஆம் ஆண்டு, மே மாதத்தில் மட்டும் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை,
சிங்கள இராணுவம் படுகொலை செய்தது. ஆனால், அதற்குப்பிறகுதான், இந்தியா
மகிந்த ராஜபக்சேவை பலமுறை இந்தியாவுக்கு அழைத்து, சிவப்புக் கம்பள
வரவேற்புக் கொடுத்து, விருந்து அளித்துச் சிறப்பித்தது. இப்போது,
இலங்கையில், தமிழர்களின் இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும், பௌத்த
விகாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இலங்கைத் தீவு முழுமையுமே, ஒரு பௌத்த
சிங்கள நாடாக மாற்றுவதற்கு, இலங்கை அரசு வெறித்தனமாகச் செயல்பட்டு
வருகின்றது. இரத்தவெறி பிடித்த மகிந்த ராஜபக்சே கூட்டம்,
புத்தரின் பெயரைச் சொல்லுவதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்கள். மே 17,18
ஆகிய நாள்களில், படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களை
நினைவுகூர்ந்து, உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்கள் வேதனையோடு கண்ணீர்
அஞ்சலி செலுத்திக் கொண்டு இருக்கின்ற வேளையில், மே 18ஆம் நாள், இந்தியா
இப்படி ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு இருக்கின்றது. இந்திய அரசு,
தமிழர்களுக்கு இழைக்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் இது. தில்லி
தேசிய ஆவணக்காப்பகத்தில் உள்ள புத்த பெருமானின் புனிதப் பொருள்கள்,
இன்றைக்கு உலகில் மிகவும் மதிக்கத்தக்க, பழமையான பொருள்களுள் ஒன்றாகும்.
இந்தியத் தொல்பொருள் துறையின் முதலாவது பொது இயக்குநரான, அலெக்சாண்டர்
கன்னிங்ஹாம் அவர்கள், பிகார் மாநிலத்தில் பிப்ரவா என்ற இடத்தில், 18 ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியில் நடத்திய அகழ்வு ஆராய்ச்சிகளின்போது, இந்தப்
பொருள்கள் கண்டு எடுக்கப்பட்டன. அந்த பிப்ரவாதான், பண்டைக்காலத்தில்
கபிலவஸ்து என்று அழைக்கப்பட்டது. புத்தர் இயற்கை எய்தியபோது, அவரது
சாம்பலும், எலும்புத் துண்டுகளும், எட்டுக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, எண்
திசையைச் சார்ந்த எட்டுக் குழுக்களிடம் பாதுகாப்பதற்காகக் கொடுத்து
வைக்கப்பட்டது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாபரிணிப்ப சுத்தா
எழுதிய குறிப்புகளில், அத்தகைய ஒரு கூறு, கபிலவஸ்துவின் சாக்கியர்களிடம்
வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புனிதம் நிறைந்த அப்பொருள்களை
இலங்கைக்குக் கொண்டு செல்லக்கூடாது.எனவே, புத்த பெருமானின்
புனிதப் பொருள்களை, இலங்கைக்குக் அனுப்புவதற்காகச் செய்து கொள்ளப்பட்ட
ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று
கேட்டுக் கொள்கின்றேன் என்று வைகோ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக