உயர்நீதிமன்றத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா: காலனை வென்ற நீதிமன்றம்!
ஜெர்மனியின் எம்டன் போர்க் கப்பலின் பீரங்கி
குண்டு வீச்சில் தப்பிய சென்னை உயர் நீதிமன்றம் காலனை வென்று இன்று
லட்சக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்கிக் கொண
காலனான
எமதர்ம ராஜனின் பாசக் கயிற்றை சிவ பெருமான் மீதான அதீத பக்தியால் பக்தன்
"என்றும் பதினாறு' மார்க்கண்டேயன் வென்றது புராணம். ஆங்கிலேய கப்பல்
படைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜெர்மனியின் எம்டன் போர்க் கப்பலின்
பீரங்கி குண்டு வீச்சில் தப்பிய சென்னை உயர் நீதிமன்றம் காலனை வென்று இன்று
லட்சக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்கிக் கொண்டிருப்பது வரலாறு.சென்னையில்
நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் என்ற பெயரில் 1801-ம் ஆண்டு தொடங்கியது. முதல்
தலைமை நீதிபதி சர் தாமஸ் ஆண்ட்ரூ ஸ்ட்ரேஞ்ச். இதுதான் பின்னர் உயர்
நீதிமன்றமாக்கப்பட்டது. 1862-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை
சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது. துறைமுகத்துக்கு எதிரே உள்ள ஒரு
கட்டடத்தில் இது இயங்கியது. முதல் தலைமை நீதிபதி சவால்டர் ஹார்மென்
ஸ்காட்லேண்ட் என்ற ஆங்கிலேயர். பிற நீதிபதிகளும் வெள்ளையரே.பாரிமுனையில்
ஓங்கி உயர்ந்து நிற்கும் சென்னை உயர் நீதிமன்றக் கட்டடம் கட்டும் பணி
1888-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1892 ஜூலை 12-ம் தேதி திறக்கப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதியாக சர் ஆர்தர் காலின்ஸ் இருந்தார். "இந்தோ}சராசனிக்'
எனும் கட்டடக் கலை நுட்பத்தை பயன்படுத்தி இக் கட்டடம் உருவானது.
கலைநுணுக்கங்களுடன் கருங்கல்லில் அமைக்கப்பட்ட வளைவுகள், வட்ட வடிவில் கலை
அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கும்ப கோபுரங்கள் காண்போரை இன்றும்
வியப்பில் ஆழ்த்தும். இத்தகைய அழகான கட்டடத்தை கட்ட அந்தக் காலத்தில் ஆன
செலவு ரூ.13 லட்சம் மட்டுமே என்பது மூக்கில் விரலை வைக்கச் செய்யும்
செய்தி. இன்று ரூ.500 கோடிக்கு மேல் இதற்குச் செலவாகும் என்று கட்டட
நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.சென்னை உயர் நீதிமன்றத்துக்கு
கூடுதல் கட்டடம் 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது. இருப்பினும், வெயில், மழை,
குளிர் என காலம் எதுவாக இருந்தாலும் பழைய கட்டடத்தில் இருப்பதுபோல் இல்லை
என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இதுவே பழைய கட்டடத்தின் கட்டுமானச்
சிறப்புக்குச் சான்றாகும்.சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய
நீதிபதி என்ற பெருமையை அடைந்தவர் திருவாரூர் முத்துசாமி ஐயர். வசதியற்ற
குடும்பத்தில் பிறந்த இவர் தெரு விளக்கில் படித்து வாழ்க்கையில் உயரிய
இடத்தைப் பிடித்தவர். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இந்தியர்
வரும் வாய்ப்பு நாடு சுதந்திரம் பெற்ற பின்புதான் கிடைத்தது. 1948-ம் ஆண்டு
பி.வி.ராஜமன்னார் இந்த முதல் மரியாதையைப் பெற்றார்.உயர் நீதிமன்ற
வளாகத்தின் கிழக்குப் பகுதியில் 1844-ல் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம்
புராதன சின்னமாக இன்றும் உள்ளது. இதனை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக
அரசு மேற்கொண்டுள்ளது.முதல் உலகப் போரின்போது சென்னை உயர்
நீதிமன்றக் கட்டடத்துக்கு வந்த ஆபத்து "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு
போயிற்று' என்பது போல் விலகியது. எம்டன் கப்பலில் இருந்து வீசப்பட்ட குண்டு
உயர் நீதிமன்ற வளாக கிழக்குப் பகுதி காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதியை
தகர்த்து சேதப்படுத்தியது. குண்டு 500 அடி உள்ளே தள்ளி விழுந்திருந்தால்
உயர் நீதிமன்றமே உருக்குலைந்து போயிருக்கும்.இரண்டாம் உலகப் போர்
தீவிரம் அடைந்த 1942-43ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் சில காலம்
தியாகராய நகரில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் இயங்கியது.சென்னை உயர்
நீதிமன்ற தலைமை நீதிபதியாக 1992-ம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த காந்தகுமாரி
பட்நாகர் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி
வகித்த பெண் இவர் ஒருவரே. சென்னை உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி என்ற
பெருமையைப் பெற்றவர் பத்மினி ஜேசுதுரை. 1962-ம் ஆண்டில் சென்னை உயர்
நீதிமன்றம் தனது 100 வயதை எட்டியது. அப்போது நடைபெற்ற விழாவில் அப்போதைய
குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். 1988-ல் 125-ம்
ஆண்டு விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவரான ஆர். வெங்கட்ராமன் கலந்து
கொண்டார்.சென்னை உயர் நீதிமன்ற 150-வது ஆண்டு நிறைவு விழா
செப்டம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. தற்போதைய
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விழாவில் பங்கேற்கிறார். வழக்கு மொழியாக
தமிழ் விரைவில் அறிவிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றம் மேலும் பல்லாண்டு
நீதி வழங்க வாழ்த்துகிறோம்.இந்த நல்ல நேரத்தில் நமது ஆதங்கம்
ஒன்றையும் வெளியிடாது இருக்க முடியவில்லை. கொல்கத்தா, மும்பை உயர் நீதிமன்ற
150-வது ஆண்டு விழாக்களின்போது சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
சென்னைக்கு ஏனோ அந்த மரியாதை தரப்படவில்லை. பொதுநல வழக்கு தொடரப்பட்ட
பின்னரே சிறப்பு அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசு உத்தரவிட வாய்ப்பிருப்பதாக
மத்திய அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற விஷயத்திலேயே
காலதாமதமான நீதியா? இதில் வடக்கு, தெற்கு பேதம் ஏதும் இருக்காது என்று
நம்புவோமாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக