ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

சமையல் அரசியும் தேனீ வளர்ப்பும்







 
சமையல் இராணி! 

சவேரா ஓட்டலின் தலைமை செப், "மால்குடி' கவிதா: என் சொந்த ஊர், கடலூர் மாவட்டம், விருத்தாசலம். அப்பா ராமச்சந்திரன், ஐகோர்ட் வழக்கறிஞர். எங்கள் வீட்டில் என்னுடன் சேர்த்து மொத்தம், 10 பிள்ளைகள். என் அம்மா அமுதா, சமையலறையில் எப்போதும், "பிசி'யாக இருப்பார்; சமைப்பதில் கைதேர்ந்தவர். தினமும், ஒவ்வொரு வேளைக்கும், 15 பேருக்கு சளைக்காமல் சமைப்பார். அவரின் அடுப்புச் சூட்டிலேயே வளர்ந்ததால், சமையல் மேல் எனக்கும் இயல்பாகவே ஈடுபாடு ஏற்பட்டது. பிளஸ் 2 முடித்ததும், உணவு தயாரிப்பு மற்றும் ஓட்டல் மேலாண்மை படித்தேன். படிப்பை முடித்ததும், வேலை கிடைக்கவில்லை. எதிர்பார்க்கும் வேலை கிடைக்கும் வரை, உள்ளூர் பத்திரிகையில் நிருபராக வேலை பார்த்தேன். அது, எந்த சூழலையும் சந்திக்கும் தைரியத்தை எனக்குக் கொடுத்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு ஸ்டார் ஓட்டலில் வேலை கிடைத்தது. நிருபர் வேலையை விட்டுவிட்டு, மகிழ்ச்சியாக, ஸ்டார் ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். ஸ்டார் ஓட்டல் சமையலறையில், பெரும்பான்மை ஆண்கள் தான். அங்கு ஒரு பெண்ணாக, பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், வைராக்கியத்துடன் நின்றேன். தினமும் ஒரு புதுவகையான உணவு சமைத்துப் பார்ப்பேன். என் உழைப்பு பன்மடங்கானது. என் அனுபவம், நான் செய்யும் உணவின் சுவையை கூட்டியது. நான் செய்யும் உணவு வகைகளில், ஓட்டலின் பெயரும், அடங்கி இருக்கும் என்ற பொறுப்புடன், பக்குவத்துடன் புதிய யோசனைகளை புகுத்தி, உணவு வகைகளை செய்தேன். என் முயற்சி வீண் போகவில்லை. "மால்குடி' என்ற பட்டத்தையும், தலைமைப் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. பரபரப்பாக வாழ்க்கை நகர்வதால், திருமணம் பற்றி, யோசிக்கவேயில்லை. அக்டோபர் மாதம், தொடர்ந்து, 30 மணி நேரம், 1,000 வகை தமிழக உணவுகளை சமைத்து, "லிம்கா' சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும். அது தான் என் இப்போதைய இலக்கு.

தேனீ வளர்க்கலாம் வாங்க! 
 தேனீ வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பார்த்திபன்: நான் சிறுவனாக இருந்த போது, தோட்டத்திற்குப் போகும் போதெல்லாம், என் தாத்தா, தேனீப் பெட்டி மூலம் சேகரித்து வைத்திருந்த, தேனை எனக்குக் கொடுப்பார். ஆனால், அந்த வயதில் தேனீ வளர்ப்பு குறித்து விவரம் தெரியாது. நடத்துனர் வேலை கிடைத்ததும், தேனீ வளர்ப்பை ஓய்வு நேரத்தில் செய்யலாமே என்ற யோசனை வந்தது. தேனீக்களின் முக்கியத்துவம் எனக்கு புரியத் துவங்கியதும், நான் மட்டும் செய்வதை விட, மற்றவர்களுக்கும் இதைக் கற்றுக் கொடுத்தால் என்ன எனத் தோன் றியது. அதற்காக, என் வேலை போக, மீதமிருக்கும் நேரங்களில் விவசாயிகளிடம் தேனீ வளர்ப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த முயற்சிக்கு, இப்போது தான் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. தேனீக்கள், இயற்கை அளித்த வன தேவதைகள். தற்போதைய சூழ்நிலையில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அயல் மகரந்தச் சேர்க்கையில், முக்கியப் பங்கு வகிக்கும் தேனீக்கள் குறைந்தால், அதிக மகசூல் என்பது கனவுதான். தேனீக்கள் வளர்க்கும் போது, அயல் மகரந்தச் சேர்க்கை அதிகரித்து, மகசூலும் பெருகும் என்பதை நிரூபித்தேன். ஆரம்பத்தில் நம்ப மறுத்த விவசாயிகள், தற்போது தேனீ வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ள ஆர்வத்துடன் வருகின்றனர். இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ, கொசுத் தேனீ என, மூன்று வகை தேனீக்கள் உள்ளன. தேனீப் பெட்டிகளில் மாதந்தோறும் குறைந்தபட்சம், ஒரு கிலோ தேன் கிடைத்துவிடும். கொசுத் தேனீயில் மாதத்திற்கு, 300 கிராம் மட்டுமே கிடைக்கும். இந்தியத் தேனீக்களின் தேன், கிலோ, 400 ரூபாயிலிருந்தும்; இத்தாலிய தேனீக்களின் தேன், 600 ரூபாயிலிருந்தும்; கொசுத் தேனீயின் தேன், 2,000 ரூபாய் வரை விலை போகின்றன. விவசாயிகளுக்கு மகரந்தச் சேர்க்கை மூலம், மகசூல் அதிகரிப்பதுடன் சுத்தமான தேனும் கிடைக்கிறது. தொடர்புக்கு: 94421-71818.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக