திங்கள், 6 ஆகஸ்ட், 2012

திருமணத்திற்கு த் தேவை ஆற்றுப்படுத்தல் !

சொல்கிறார்கள்  தினமலர்


                                           திருமணத்திற்கு த் தேவை ஆற்றுப்படுத்தல் !
மன நல ஆலோசகர் லட்சுமணன்: பல திருமண வாழ்க்கை, தளிர் நிலையிலேயே கருகிப் போவதற்கு காரணம், பரஸ்பரம் புரிதல் இல்லாமை தான். அதனால் தான், காதல் திருமணமோ, பெரியோர் நிச்சயித்த திருமணமோ, எதுவானாலும், "கவுன்சிலிங்' அவசியம். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகள், திருமணத்திற்கு பிந்தைய ஆலோசனைகள் இரண்டையும், பெற வேண்டியது அவசியம். நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், பெண்ணும், பையனும் பேசி, ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வது ஆரோக்கியமான விஷயம். ஆனால், அப்போது இருவரும் தங்களின் குணங்களையும், குறைகளையும் வெளிப்படையாக பேசுவதில்லை. தன்னை தியாகியாகவும், உதவும் குணமுடைய ஆளாகவும் காட்டிக் கொள்வர். திருமணத்திற்குப் பின், இயல்பான வாழ்க்கைச் சூழலால், மெல்ல அவர்களின் உண்மையான குணத்தையும், குறைபாடுகளையும் வெளிப்படுத்த ஆரம்பிப்பர். கணவனின் முன்கோபம், புது மனைவியை நிலைகுலைய வைக்கும்; அடிக்கடி சந்தேகப்படும் மனைவியின் குணம், புதுக் கணவனை கதிகலங்க வைக்கும். இப்படி ஆரம்பிக்கும் விரிசல், திருமண வாழ்க்கையில், மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும். அப்போது தடுமாறாமல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள, திருமணத்திற்கு முந்தைய, "கவுன்சிலிங்' அவசியம். திருமணத்திற்கு பிந்தைய, "கவுன்சிலிங்'கில், தாம்பத்தியம் பற்றிய அலசல் மிக மிக முக்கியமானது. காரணம், திருமண வாழ்க்கையில், அதனால் ஏற்படும் தகராறு, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், இருவரிடமும், "செக்ஸ்' பற்றி அவர்களின் கருத்தை, எதிர்பார்ப்பை அலசுவோம். "செக்ஸ்' பற்றி புரிதலே இல்லாமல் இருப்பவர்களுக்கு, "கவுன்சிலிங்'கும், பிரச்னைகளைப் பொறுத்து, மருத்துவத் தீர்வுகளையும் கொடுப்போம். திருமண பந்தத்தின் எந்த நிலையில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட தம்பதியால், தங்களுக்குள் பேசி பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்ற கட்டத்தில், தாமதிக்காமல் ஒரு குடும்ப நல ஆலோசகரை அணுக வேண்டும். இதனால், வாழ்க்கையை அழகாகவும், பத்திரமாகவும் மாற்றலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக