செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

நாடகம் நடத்த விட மாட்டேன் என்கிறார்களே! விலைஞரின் ஆதங்கம்

நாடகம் நடத்த விட மாட்டேன் என்கிறார்களே! விலைஞரின் ஆதங்கம்

நட்பு  : பதிவு செய்த நாள் : 07/08/2012

விலைஞரின் கடிதம், கவிதை என எதுவாக இருந்தாலும் தவறாமல் படிப்பவன் நான். உரசொலியிலேயே வேலை பார்ப்பதால் அச்சிற்கு முன்னதாகவே படித்து விடுவேன், பத்திரிகையில் வெளியான பின்பு மீண்டும் மீண்டும் படிப்பேன்.இன்று விலைஞரின் கண்களில் கண்ணீரும் கையில் தாளுமாகப் பார்த்து எனக்கும் அழுகை வந்து விட்டது. ஏதோ எழுதி வைத்து விட்டு வெளியிடலாமா வேண்டாமா எனக் குழப்பத்தில் இருக்கிறார் எனப் புரிந்தது. எனவே, அவர் கண்களை மூடிச் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது அதனை எடுத்துப் படித்துப் பார்த்தேன். படித்து முடித்ததும் விலைஞர் படும் வேதனையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. யாரிடமாவது சொன்னால்தான் ஆறுதலாக இருக்கும் என்பதால் நான் படித்ததை அப்படியே உங்களிடம் தெரிவிக்கின்றேன்.


உடன் பிறப்பே!

என் உள்ளம் படும் வேதனையை என்னாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை. உன்னிடம் சொல்லி ஆறுதல் பெறலாம் என்றால் அதற்கும் வழியில்லை. ஆக உனக்கு எழுதுவதுபோல் எழுதி எனக்கு நானே படித்து ஆறுதல் பெறுகிறேன்!தேறுதல் அடைகிறேன்! உள்ளம் மாறுதல் கொள்கிறேன்!

நான் என்ன அறிவித்தேன்? தெசோ மாநாடு நடைபெறும் என்றுதானே அறிவித்தேன். இதனை எதற்காக அறிவித்தேன்?சொக்கத் தங்கம் சோனம்மா மீதும் அவருடன் சேர்ந்த பத்தரைமாற்றுத் தங்கமான என் மீதும் நம் உடன்பிறப்புகள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச் சாட்டைப் போக்குவதற்காக  - நம் மீது ஏற்பட்ட பழியை நீக்குவதற்காக - உலகத் தமிழர்கள் ஆதரவை ஆக்குவதற்காக  - அறிவித்த நாடகம்தான் அது எனக் கோங்கிரசாருக்குத் தெரியாதா?

ஈழத்தில் எரி குண்டுகள் மேலும் வீசப்படும்! அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழர்கள் கொத்து கொத்தாகச் சாகடிக்கப்படுவார்கள் என அறிவித்த பொழுதும் நான் உண்ணாநோன்பைக் கைவிடவில்லையா? ஏதோ அண்ணல் சதுக்கத்தில் காற்று வாங்கினோம்;  அண்ணல் சொன்னார் எனச் சொல்லி ஏதோ அறிக்கை விடுவோம்; என்று படுத்திருந்த என்னை அவசர அவசரமாக  அந்த இடத்தைக் காலி செய்யக் கோங்கிரசு சொன்னதும் நான் என்ன செய்தேன் என்பது உனக்கே தெரியுமே! இந்த ஊருக்கே தெரியுமே! அதனால் நான் நாடகமாடியதாக உலகிற்கே புரிந்ததே! நான் அடாவடி பண்ணாமல் என் கண்மணி பொன்மணி நன்மணி  கவி மணி புவிமணி தனிமொழி தப்பித்தால் போதும் என்பதற்காக உண்ணா நோன்பை உலகச்சாதனையாக்கி முடிக்கவில்லையா?

இதுவரை கோங்கிரசின் ஊழலைப்பற்றியோ  தேர்தலில் ஊழல் புரிந்தால் அமைச்சர் பதவி  முன்னாள் இராணுவத்தினருக்கான குடியிருப்பில் ஊழல் புரிந்தால் மந்திரி பதவி படுகொலைத் திட்டங்களைத் தீட்டித் தந்தால் தலைவர் பதவி என்றெல்லாம் கோங்கிரசு வாரி வழங்குகிறதே அதைப் பற்றியோ நான் கேள்வி கேட்டதுண்டா?

சோனம்மா, இராகையா, திரியங்கா என ஒரு குடும்பத்தின் ஆட்சி தில்லியிலே கோலோச்சுகிறதே  அதைப்பற்றி நான் வாய் திறந்ததுண்டா?

கோங்கிரசார் அணி அணியாகப் பிரிந்து அக்கட்சியை நாறடிக்கிறார்களே அதைப்போல் நான் செய்ததுண்டா?இப்படியும் ஒரு நல்ல அடிமை உண்டா என உலகே வியக்கும் அளவிற்குப் பெட்டிப்பாம்பாக அடங்கவில்லையா? நான் மட்டுமா அடிமையானேன்! மேலும் சில நல்ல அடிமைகளை அவர்களுக்குத் தரவில்லையா? நான் மட்டும் கட்டிப் போட வில்லை என்றால் இனமான ஆசிரியர் அந்தப் பக்கம் என்றோ தாவியிருப்பாரே! கோங்கிரசைக் கிழி கிழி என்று கிழித்திருப்பாரே! நான் மட்டும்அடக்கி வைக்கவில்லை என்றால் தம்பி பேராசிரியர் ஆண்டி வீர உரை ஆற்றிக் கோங்கிரசைத் தோல் உரித்திருப்பாரே! நான் மட்டும் அதிகாரப்பகிர்வில் இணையமைச்சராகவாவது ஆகலாம் என அடக்கி வைக்கவில்லை என்றால் தம்பி அளவன்  வளவள என்று காங்கிரசிற்கு எதிராகப்போட்டுத் தள்ளி இருக்கமாட்டாரா? இவ்வளவு  ஏன் ? நம் கழகப் புலவர்களும் அறிஞர்களும் பாட்டுப்பாடியே கோங்கிரசை இல்லாமல் ஆக்கி இருக்க மாட்டார்களா?
இதை எல்லாம் அறிந்தும் கோங்கிரசிற்காக உதவவே தெசோ மாநாடு நடத்துகிறேன் எனத் தெரிந்தும் அதைக் கோங்கிரசு எதிர்க்கலாமா? கோங்கிரசு சொல்லும் அறிக்கையைத்தான் நான் வெளியிடுகிறேன் அல்லது கோங்கிரசாருக்கு என் அறிக்கையை அனுப்பி அவர்கள் திருத்தித் தந்தபின்புதான் அறிக்கையை விடுகிறேன் என அவர்களுக்குத் தெரியாதா?அவர்களுக்குத் தெரியாமல் நான் ஏதும் தீர்மானம் கொண்டுவர  விடுவேனா?

இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வுத்திட்டங்களைத் தீட்டிச்செயல்படுத்தும் சொக்கத்தங்கம் சோனம்மாவினைப் பாராட்டி நன்றி தெரிவிக்கும் தீர்மானம் போடுவேன் என்பதை அவர்களால் ஊகிக்க முடியாதா? அல்லது தீர்மான வரைவுகளைத் தரும்வரை பொறுமை காக்கக் கூடாதா?

நான் நானாக இருந்திருந்தால் தலைவர் தேர்தலில் ஆரிய முகரைக்கு வாக்களிக்காதீர்! படுகொலை புரிந்த திராவிடப் பகைவனுக்கு வாக்களிக்காதீர்! என்றெல்லாம் பரப்புரை மேற்கொண்டு தோற்கடித்திருக்கமாட்டேனா? சோனம்மா சொல்லே வேதம்! கோங்கிரசு கட்டளையே மந்திரம்! என ஆதரிக்கவில்லையா?

ஏழரைக்கோடித் தமிழர்களின் தலைவனான என்னைச் சில்லறைத் தலைவர்கள் மதிப்பதில்லை என்பதால் - உலகத் தமிழர்கள் எட்டப்பனுக்குப் பதிலாக என் பெயரைப் பயன்படுத்துவதால் - இங்கிருக்கும் உடன் பிறப்புகளையாவது தக்க வைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறதா இல்லையா? அவர்களை எப்படி நான் என் பக்கமே வைத்திருப்பது?இப்படி ஏதும் மாநாடு நடத்தி ஏமாளித் தொண்டர்களிடம் என்னை உண்மைத் தமிழனாகக்காட்டிக் கொண்டால்தானே முடியும்? இது கோங்கிரசாருக்குத் தெரியாதா?  நான், இதுவரை கோங்கிரசு தலைவர்களும் அதிகாரிகளும் இலங்கையில் என்ன பேசி வந்தார்கள் என்று சொல்லியது உண்டா? இந்தியா வழங்கிய குண்டுகள் எண்ணிக்கையைப் பட்டியல் போட்டதுண்டா? அல்லது படைக்கருவிகள் பட்டியலைத்தான் வெளியிட்டதுண்டா? பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் வாய்மூடிமௌனம் காக்கவில்லையா?  அது மட்டுமல்ல உலக நிலையாமை என்று சொல்லி கோங்கிரசின் பழியைத் துடைக்க முயலவில்லையா?
இத்தனையும் பொறுத்திருக்க
இஃதென்ன தமிழ்நாடா அல்லது
இடுகாடா? சுடுகாடா?

எனப் பொங்கி எழுந்தேனா?
விடுதலை வேண்டா வெனும் வெறும் உபதேசம்
நரிகளின் ஊளை
நாட்டு வெறிபிடித்த காளைகளே
கிலி பிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்
புலி வாழ்வின் உச்சியிலே
புதுமைதனைப் பொறித்திடுவோம்
என்றுதான் உங்களைத் தட்டி எழுப்பினேனா?

நீ வருவதற்கு முன்பே
வரலாறு இருந்தது தமிழர்க்கு
ஆனால், நீ வந்தபின்தான் வகையாகத்
தமிழன் வரலாற்றை உணர்ந்தான்
. . .    . . .    . . .
தமிழன் தமிழனானான்
என்று புகழ்ப்பரணி பாடினேனா? கைது செய்தால் எப்படி நடத்த வேண்டும் என்று சொல்வதன் மூலம் கோங்கிரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்புதானே தந்தேன். (என்னைத் தவிர வேறு யாரையும் தலைவன் என்று சொல்ல மாட்டேன் என்பதை அறியாதவர்களா? அப்படிப்பட்டவன் தலைவியின் அடி பணிகிறேன் என்றால் என்னைப் புரிந்து கொள்ள வேண்டாமா?)

நான் என்னதான் செய்ய வில்லை? இன்னும் ஏதும் செய்ய வேண்டும் என்றாலும் நான் செய்திருப்பேனே அதை விட்டு விட்டு ஏதோ பொழுது போக வேண்டும் என்றும் என்னை நம்பியிருக்கின்றவர்களிடமாவது தமிழர் தலைவனாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக வருகின்ற தேர்தலில் காங்கிரசிற்கு வாக்களிக்கச் செய்ய மக்களைத் திசை திருப்ப வேண்டும் என்றும் நான் திட்டம் தீட்டியிருந்த நாடகத்தைக் கோங்கிரசார் எதிர்ப்பதேன்?

அவர்களுக்குத்தான் தன்னாலும் தெரியாது சொன்னாலும் புரியாது. சொக்கத் தங்கம் சோனம்மாவும் தேர்தலில் தோற்றும் அமைச்சராக உள்ள தசிம்பரமும் எனக்கு நெருக்கடி தரலாமா? என்றாலும் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த நாடகத்தை அவர்கள் விருப்பத்திற்கேற்பவாவது நடத்த அனுமதித்ததற்காக.

‘தலைவர் சொல்லியாச்சு ஈழம்வந்தாச்சு’ என்னும் முழக்கத்திற்குப் பொருள்தெரியுமா? கண்மணியே, ஈழம் என்றால் தங்கம் அப்பா தங்கம். குடும்பத்தினர் மூலமாகக் குவித்து வைத்த தங்கத்தின் ஒரு பகுதி கோங்கிரசிற்குத் தந்ததை நினைவு படுத்தவே இந்த முழக்கம்.  வந்தாச்சு என்பது முக்காலத்தையும் குறிக்கும். எனவே, இனியும் பங்களிப்பு தொடரும் என்பதன் இரகசியக் குறியீடுதான் இது.  இதைப் புரிந்து கொள்ளாமல் உடன் பிறப்புகள் உள்ளனர் என்றால் எல்லாம் வல்ல சொக்கத் தங்கம் சோனம்மா புரிந்து கொள்ளாமல் போனதுதான் வேதனையாக உள்ளது. ‘ஈழத்தைக் காணாமல் சாக மாட்டேன்’ என்று சொன்னதுகூட ஓர் எச்சரிக்கைதான். எச்சரிக்கை என்றால் மத்திய அரசிற்கோ கோங்கிரசிற்கோ என எண்ணக்கூடாது. எனக்குவந்து சேர வேண்டிய பங்குத் தங்கம் வராததால் கொடுத்த எச்சரிக்கை.  என் அடிமைத்தனத்தைப் புரிந்து கொள்ளாமல், அதைப்போய் வேறு வகையாக எண்ணியதைக் கண்டு உள்ளம் அழுகிறது உடன்பிறப்பே உன் அண்ணனின் உள்ளம் அழுகிறது!
   என்றாலும் நான் உறுதி அளிக்கின்றேன். ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் காயங்களுக்கும் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற சொக்கத் தங்கம் சோனம்மாவிற்கு நன்றி தெரிவித்து நான் உரையாற்றத் தவற மாட்டேன். மொழி பெயர்ப்பவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். வடுமாறன்கள் எல்லாம் ஈழம் என்று சொல்லவே அஞ்சி இலங்கைத் தமிழர்கள் என்று சொல்லும் பொழுது  நான் ஈழம் எனப் பயன்படுத்துவது அவர்களைக் காட்டிலும்  கோங்கிரசு கூட்டணி ஈழத்தமிழர்களை ஆதிரிப்பதில் முனைப்பாக உள்ளது எனக் காட்டுவதற்காகத்தான். இங்கே நான் போர் என்றோ இனப்படுகொலை என்றோ  ஒரு சொல் கூடச் சேர்க்கவில்லை என்பதைப் பின்குறிப்பாகக் குறிப்பிட வேண்டும். “போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்  எம் கடன் குடும்பத்தினருக்குச் செல்வம் சேர்ப்பதே உம் கடன்  அதில் மகிழ்ந்து எமக்குப் பணி செய்து கிடப்பதே” என்பதை உணர்ந்து அருமை உடன்பிறப்புகளே! அன்பு உடன்பிறப்புகளே! அண்ணன் அழைக்கிறேன்!தெசோ மாநாட்டைச் சிறக்கச் செய்ய அணிஅணியாகக் கூடுவீர்!

தனி மொழிக்கு இல்லாத அமைச்சர் பதவி யாருக்கும் வேண்டா என நான் மத்திய அமைச்சர் பதவிகளை வாங்காதிருப்பதை அறிவீர்கள்.  நம் செல்வாக்கைப் பார்த்து அருமை மகள் பெருமை மகள் சிறை மீண்ட செல்வ மகள் தான் பட்ட  துயரங்களுக்கு மருந்தாக  மத்திய மந்திரியாக வேண்டும். அதை நான் பார்த்து மகிழ வேண்டும்.  அப்பொழுது வேறு சிலருக்கும் மத்திய மந்திரிப் பதவிகள் வாங்கித் தர வேண்டும். இதனால் உடன் பிறப்புகள் நன்மைஅடைய வேண்டும்.எனவே,  ஈழம் கண்டெடுத்த தமிழ்ச்செல்வி தனி மொழிக்காகவாவது தெசோ மாநாட்டிற்குத் திரள் திரளாக வருக! ‘இப்படை தோற்பின் எப்படை வெல்லும் ’ என்பதைக் காட்ட வருக !
அண்ணன்
 கு.க.

என்ன இருந்தாலும் தலைவர்தலைவர்தான்.  வேதனையில் தொடங்கினாலும் வீரத்தில் முடித்துவிட்டாரே. என்றாலும் தலைவரைப் புரிந்து கொள்ளாமல் அவர் எதிரியாக இருந்தாலும் அடிமையாக இருந்தாலும் விடாப்பிடியாக உறுதியாக இருப்பார் என்பதை உணர்ந்து கொள்ளாமல் தொந்தரவு கொடுக்கும் கோங்கிரசு மீது கோபம் வந்தது. தலைவர் அழுது எழுதி உள்ளாரே என நினைத்து என் கண்களில் கண்ணீர் பெருகியது.

“டேய் தூங்கு மூஞ்சி என்ன, தூக்கத்தில் அழுது கொண்டிருக்கிறாய் “ என யாரோ தட்டி எழுப்பியதும்தான்  நான் கண்டது கனவு எனப் புரிந்து கொண்டேன். தலைவராவது அழுவதாவது எனத் தேற்றிக் கொண்டேன். என்றாலும் கனவில் படித்த வரிகள் என்னைத் தொந்தரவு செய்து கொண்டுள்ளன என்பது மட்டும் உண்மைதான்.

- தூங்கு மூஞ்சி

வாசகர் கருத்துகள்

  • K..Sundaram says:
    கனவுதான் கற்பனை என்றால் கவிதையைக்கூடக் கற்பனையாக எழுதத் தெரியவில்லையா? தலைவரின் கவிதையைக் குறிப்பிட்டு இருக்கிறாரே! சொந்தமாக எழுதத் தெரியாதவரெல்லாம் எதற்குக் கனவு காண வேண்டும்? போகட்டும்! தூங்குமூஞ்சிக்கு ஆணாக இருந்தால் சொப்பன சுந்தரம் என்றும் பெண்ணாக இருந்தால் சொப்பன சுந்தரி என்றும் பட்டம் அளிக்கிறேன்.
  • இது பகல் கனவா? அல்லது இரவுக் கனவா? கனவு கண்டதுதான் கண்டார் – ஈழம் மலர்ந்ததாகக் கனவு கண்டிருக்கக்கூடாதா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக