எம் பிள்ளையைப் படிக்க வையுங்கள் ஐயா!..
தினமலர்
கல்வி உதவித்தொகை கேட்டு நின்று கொண்டிருந்த அந்த நீளமான வரிசையில்
காணப்பட்ட ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்தவுடனேயே தெரிந்தது,
வாழ்க்கையில் ரொம்பவே அடிபட்டவர் என்பது. அவரது முறைவந்து உள்ளே
அழைக்கப்பட்டதும், "எம் புள்ளை என்ஜினியர் படிக்க தேர்வாகியிருக்கான்யா,
படிக்க உதவுங்கய்யா'' என்று தனது வேண்டுகோளை வைத்தார்.
"அம்மா...இது
அரசாங்க பள்ளியில் படிக்க ஆயிரம், இரண்டாயிரம் தேவைப்படும்
குடும்பத்திற்கு உதவுவதற்கான அறக்கட்டளை, உங்க புள்ளைக்கு நாற்பாதாயிரம்
ரூபாய் வரை செலவாகும், அந்த அளவிற்கு உதவுவதற்கு எங்களால முடியாதும்மா''
என்று சொல்லி திருப்பியனுப்பினர். "ஐயா, தயவு செய்யுங்கய்யா, எம் புள்ளை
ரொம்ப ஆசைப்படறான்யா, எப்படியாவது படிக்க வையுங்கய்யா '' என்று
கேட்டுக்கொண்டிருந்தார்; இல்லையில்லை கெஞ்சிக்கொண்டிருந்தார்.
யார் இவர்
அன்றாடம்
வயிற்றுப்பாட்டிற்கே அல்லல்பட்டாலும், தான் பெற்ற பிள்ளைகளை படிக்க வைத்து
ஆளாக்க நினைக்கும் கனவுகளுடன் வலம் வரும் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பத்து
தாய்மார்களின் பிரதிநிதி இவர்.
பெயர் பிருந்தா
தற்போது
சென்னை திநகர் பகுதியில் குடியிருக்கும் இவர் திண்டுக்கல் மாவட்டம்
பண்ணைக்காட்டை சொந்த ஊராகக் கொண்டவர், விவசாய தொழிலாளர் குடும்பத்தில்
பிறந்து எட்டாம் வகுப்பு வரை படித்தவர், அதற்கு மேல் படிக்க
ஆசைப்பட்டாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் சென்னையில்
உள்ள ஒரு ஒட்டல் தொழிலாளிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டவர்.
குடிசை
வீட்டில் அன்புக் குறைவில்லாமல் குடும்பம் நடத்தியவருக்கு மூன்று
குழந்தைகள், மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும்
என்பதுதான் பிருந்தாவின் ஆசை. இதற்காக தனது கணவரின் ஊதியம் (மாதம் 3 ஆயிரம்
ரூபாய்) போதாது என்பதால் இவர் நாலைந்து வீடுகளில் வேலை செய்து வரும்
சம்பாத்தியம் மூலம் படிப்பிற்கு செலவிட்டு வந்தார். பெற்றவளின் சிரமம்
பார்த்து பிள்ளைகளும் நன்கு படித்துவருகின்றனர்.
இதில் மூத்தவன்
கோகுல் இந்த ஆண்டு பிளஸ் டூவில் 938 மார்க்குகள் எடுத்துள்ளான்.
கவுன்சிலிங்கில் இவன் கேட்ட சென்னை குன்றத்தூர் ஸ்ரீமுத்துக்குமரன்
என்ஜினியரிங் கல்லூரியே கிடைத்துவிட்டது. இதுவரை பிரச்னையில்லை. எவ்வளவு
பணம்கட்ட வேண்டும் என்ற கேள்வி வந்தபோதுதான் எல்லா சலுகையும் போக
வருடத்திற்கு 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்
என்று சொல்லியிருக்கின்றனர். அவ்வளவு பணத்தை மொத்தமாக பார்த்தேயிராத
பிருந்தாவிற்கு என்ன செய்வது என்பது இன்றுவரை புரியவில்லை. உறவுகள்,
நட்புகள் அனைத்தும் கைவிரித்துவிட்ட நிலையில்தான் வேலை பார்த்துவரும்
வீடுகளில் கடன் கேட்டுவருகிறார். இப்போதே காலை 4 மணிக்கு எழுந்து இரவு 10
மணிவரை இடுப்பொடிய வேலை செய்பவர், "இன்னும் இரவெல்லாம் கூட வேலை
செய்கிறேன்' என் புள்ளை படிச்சசா போதும் என்கிறார் கண்கள் கலங்க.
இந்த
நிலையில் இவரது கணவர் பார்த்து வந்த வேலையும் எதிர்பாரதவிதமாக
போய்விட்டது, இது ஒரு பக்கம் என்றால் வரும் 14ம்தேதிக்குள் பணம்
கட்டாவிட்டால் மகன் என்ஜினிரிங் படிக்க முடியாமல் போய்விடக் கூடிய
சூழ்நிலை. என்ன செய்வது என்று தெரியாமல் மகனின் மார்க் பட்டியலுடன் உதவி
கேட்டு பலரது வீட்டு கதவை தட்டி வருகிறார். பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது.
இந்த
கட்டுரையை படிக்கும் வாசகர்கள் முடிந்தளவு உதவலாம், நேராக கல்லூரிக்கே
பணத்தை கட்டிவிடலாம், இதனால் ஒரு ஏழை மாணவன் தானும் படித்து தன்
தம்பிகளையும் படிக்க வைப்பான் என்பதைவிட, ஒரு ஏழை, எளிய தாயின் கனவை
நனவாக்கலாம் அவரது கண்களில் ஆனந்த கண்ணீரை பார்க்கலாம். அவருடன்
தொடர்புகொள்ள விரும்புபவர்களுக்கான மொபைல் எண்: 9445427673 (பிருந்தாவிடம்
போன் கிடையாது, அவர் வேலை செய்யும் வீட்டில் உள்ளவரின் போன் இது). நன்றி!
- எல்.முருகராசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக