கனவை ச் சுமந்து சென்ற 72 பேர் பிணமாக த் திரும்பிய பரிதாபம்
தினமலர்
திருச்சி: ஆயிரம் கனவுகளுடன் வெளிநாடு சென்றவர்களில், ஆறு மாதத்தில்,
72 பேர் சடலமாக விமானத்தில் திருச்சிக்கு திரும்பியுள்ளனர். விவசாயிகள்,
விவசாயத் தொழிலாளிகள், அன்றாடங் காய்ச்சிகளின் ஒரே கனவு வெளிநாட்டில் வேலை.
சினிமாவில் ஒரே பாடலில் கதாநாயகன் கோடீஸ்வரனாகி விடுவதை போல அதில் அதீத
நம்பிக்கை. மிச்ச, சொச்சம் இருக்கும் நிலம், வீடு, நகைகளை விற்று
வெளிநாடுகளுக்கு விமானம் ஏறுகின்றனர். வானில் பறக்கும்போதே அவர்கள் கொஞ்சம்
கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். நாம் இதே விமானத்தில் பிணமாக
திரும்புவோம் என்பதை. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த மாதம் வரை
வெளிநாடுகளில் இருந்து, திருச்சி விமானநிலையத்தில் வந்திறங்கிய பிணங்களின்
எண்ணிக்கை, 72 என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொடரும் சோகம்: தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுதா, அரபு
நாட்டில் வீட்டு வேலைக்கு சென்றிருந்தார். சில நாளில், தன் கணவரை தொடர்பு
கொண்டு, "என்னை பாலியல் தொந்தரவு செய்கின்றனர். உடனே நாடு திரும்ப ஏற்பாடு
செய்யுங்கள்' என்று போனில் கதறினார். அதற்கடுத்து இரண்டு நாட்களில்
அங்கிருந்து பேசிய டிரைவர் ஒருவர், சுதா இறந்துவிட்டதாக செல்வராஜுக்கு
தெரிவித்துள்ளார். நான்கு மாத அலைச்சலுக்கு பிறகு, சுதாவின் உடல் திருச்சி
விமான நிலையம் வழியாக அவரது சொந்த ஊருக்குச் சென்றது.
திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டையை சேர்ந்த காளிமுத்து, 24, கட்டுமானப்
பணியின் போது இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையுடன் உடல் திருச்சி
விமானநிலையம் வந்தது. துபாய் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்
கொண்டிருந்தபோது, அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம்
மீனவர் சேகரின் உடல், கடந்த மாதம் 26ம் தேதி, திருச்சி விமானநிலையம் வழியாக
சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருச்சி வருவது ஏன்? திருச்சி விமான நிலைய அதிகாரி ஒருவர்
கூறியதாவது: நன்றாக படித்துவிட்டு குறிப்பாக வெல்டர், பிட்டர், இன்ஜினியர்
போன்ற தொழிற்கல்வி படித்தவர்களுக்கு வெளிநாடுகளில் ஏராளமான நல்ல வேலைகள்
உள்ளன. படிக்காதவர்களுக்குதான் சிக்கல். வெளிநாடுகளுக்கு வேலைக்கு
செல்பவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
அவர்களுக்கு வழங்கப்படும் விசாவில் என்ன வேலை? என்பது தெளிவாக
குறிப்பிடப்பட்டிருக்கும். அரபு போன்ற தெரியாத மொழியில் இருக்கும் விசாவை
தகுந்த நபர்களிடம் கொடுத்து, வேலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இது
தெரியாத குக்கிராமங்களை சேர்ந்த இளைஞர்களை ஏஜன்ட்கள் எளிதாக ஏமாற்றி
விடுகின்றனர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கட்டடத்தொழில்
வாய்ப்பு அதிகமுள்ளது. உடலுழைப்பு அதிகமுள்ள இவ்வேலைகளை நகர்ப்புறத்தில்
இருந்து வெளிநாடு கனவில் செல்லும் இளைஞர்கள் ஒருநாள் கூட செய்யமுடியாது.
பெரிய நிறுவனத்தில் வேலை என்று ஆசைப்பட்டு செல்பவர்கள், பாலைவனத்தின் நடுவே
நாடோடிகள் போல தன்னந்தனியாக ஒட்டகம் மேய்த்து பைத்தியம் பிடித்து, தற்கொலை
செய்து கொள்கின்றனர். இந்தியாவில் சிறிய தவறுகள் என, மன்னிக்கப்படும்
குற்றங்களுக்கு கூட, அரபு நாடுகளில் கடுமையான தண்டனைகள் உள்ளன. அவர்களின்
சட்டத்திட்டங்கள் தெரியாமல், தவறுகளை செய்து தண்டனை பெறுகின்றனர்.
உண்மையில், அரபு நாடுகளில் இறந்து போனவர்களை விட சிறையில் கொடுமை
அனுபவிக்கும் இந்தியர்கள் அதிகம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற
பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்வர்.
தென்மாவட்டங்களை பொறுத்தவரை திருச்சி விமான நிலையம் தான் சவுகரியம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் திருச்சியில் இருந்து
குறைந்தபட்சம், ஆறு மணி நேரத்துக்குள் விரைவாகவும், எளிதாகவும்
சென்றுவிடலாம். இதனால் தான் வெளிநாடுகளுக்கு சம்பாதிக்கும் கனவோடு
விமானத்தில் ஏறுபவர்கள், சென்ற வேகத்தில் சடலமாக திருச்சி விமான
நிலையத்துக்கு திரும்பி இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக