ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

சீவா என்றொரு மாறுபாடான கலைஞர்

சீவா என்றொரு வித்தியாசமான கலைஞர்



 உலகம் எவ்வளவோ ஒவியர்களையும், சிற்பிகளையும் பார்த்தும் இருக்கிறது, பார்த்துக் கொண்டும் இருக்கிறது. வித்தியாசமான ஒவியர்களையும், சிற்பிகளையும் அடையாளம் காணும் போது பெருமைப்பட்டுக்கொள்கிறது. அப்படிப்பட்ட ஒவியர் மற்றும் சிற்பிதான் ஜீவா

சென்னை கோடம்பாக்கத்தில் ஜீவா கலைக்கூடம் என்ற பெயரில் இவர் நடத்திவரும் கலைக் கூடத்தில் இடம்பெற்றுள்ள சிற்பங்களை பார்த்த போது ஏற்பட்ட வியப்பு இன்னமும் கூட குறையவில்லை. படாக் மரத்தின் பலகையில் இருந்து மெல்லிய ரம்பத்தின் உதவி கொண்டு தேவையற்ற பகுதிகளை நீக்கியபடி மிக நுண்ணிய முறையில் இவர் உருவாக்கும் கடவுள், மகான்கள், பெரியவர்கள், பிரமுகர்கள் மற்றும் சாதாரணமானவர்களின் உருவங்கள் யாவும் பார்த்தவுடனேயே பிரமிக்கதக்கதாகும். எந்த படம் கொடுத்தாலும் அந்த படத்தை மர சிற்பமாக்கி விடுவார். ரோமத்தின் அளவில் மரங்களை லாவகமாக செதுக்கி முகங்களின் பாவங்களை உருவாக்கியுள்ளதை பார்க்கும் போது, இன்றைய இளைஞர்களின் வார்த்தையில் சொல்வதானால் "சான்ஸே இல்லை' என்றுதான் சொல்லவேண்டும்.

இது போன்ற மர சிற்பங்களை இதுவரை யாரும் முயற்சித்தது கூட கிடையாது என்பதுதான் இந்த புதுமையான சிற்பத்திற்கு உள்ள பெருமை. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சித்தமல்லி கிராமத்தில் பிறந்தவரான ஜீவா தனக்குள் ஒரு ஓவியர் இருப்பதை உணர்ந்தபோது வயது பத்து. ஆனாலும் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கமுடியாத சூழ்நிலையில் வேலை தேடி திருப்பூர் போனவருக்கு வேலை கிடைத்தாலும், ஏதோ சம்பாதித்தோம், சாப்பிட்டோம் என்று இருப்பதற்கு நாம் ஒரு சராசரி மனிதனல்ல என்று உள்ளூணர்வு கூற சென்னை கிளம்பினார்.

இங்கே நிறைய ஏற்றங்கள் அதைவிட நிறைய இறக்கங்கள், இதனால் சோர்ந்துபோய் வாழ்வின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் மதர் தெரசா மற்றும் காஞ்சி பெரியவரின் ஒவியங்கள் இவரது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திவிட்டது. அந்த படங்களை பார்த்து அச்சு , அசலாக இவர் உருவாக்கிய மர சிற்பங்களை பார்த்தவர்களை மிரளவைத்தது, யார் இதன் பிதாமகர் என்று கேட்கவைத்தது.

நிறைய விசாரிப்புகள், அதைவிட நிறைய வியாபாரங்கள் என்று மனிதர் தற்போது மிகவும் பிசியாக இருந்தாலும், எளியையான தோற்றத்துடன், இனிமையான பேச்சுடன் ஆன்மிகம் பொங்கும் மனதுடன் அமைதியாக பேசுகிறார், வருமானத்தை முக்கியமாக நினைக்காமல் மர சிற்பத்தின் அடுத்த நிலையை நோக்கிய ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளார்.

"நமது மகான்கள்' என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி நடத்த விரும்புகிறார். இந்த கண்காட்சியில் இடம் பெறுவதற்காக நூற்றுக்கும் மேலான மகான்களின் உருவத்தை செதுக்க உள்ளார். இதற்கு கொஞ்சம் பணம் தேவை. உதவக்கூடியவர்கள் (ஸ்பான்சர்) கிடைத்து விட்டால் உடனே களத்தில் இறங்கிவிடுவார். நீங்கள் அந்த "ஸ்பான்சராக' இருக்க விரும்பினால் இவரை தொடர்பு கொள்ளலாம். (போன் எண்:9551565775).

(இவர் உருவாக்கிய மர ஒவியங்களை பார்க்க இவரது படத்திற்கு கீழ் சிவப்பு பட்டையில் காணப்படும் போட்டோ கேலரி என்ற பகுதியை கிளிக் செசய்யவும்)

- எல்.முருகராசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக