சொல்கிறார்கள்
சுப்பையா மருத்துவக் கல்விக் குழு' என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஏழை
மாணவர்களுக்கு உதவும் ஆதம் ஷேக் அலி: நான் படித்த பள்ளி மாணவன் அதிக மார்க்
எடுத்ததில், சந்தோஷப்பட்டேன். என் மகளின் மருத்துவக் கல்லூரி
சேர்க்கைக்காக, விண்ணப்பம் வாங்கி, நிரப்பிக் கொண்டிருக்கையில், சுப்பையா
என்ற மாணவர் வந்தார். "ஐயா, நான் அதிக மார்க் எடுத்து இருக்கிறேன். நானும்
டாக்டர் ஆகி, சேவை செய்ய வேண்டும்' என்றான். என் மகளுக்கு நான்
இருக்கிறேன்; அவனுக்கு செலவு செய்ய, யாருமே இல்லையோ எனத் தோன்றியது. அவன்
ஆர்வத்தைக் கண்டு, என்ன செய்வது என யோசித்தேன். களக்காடு, கே.ஏ.எம்.பி.,
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து,
"சுப்பையா மருத்துவக் கல்விக் குழு'வை ஏற்படுத்தினோம். அப்போது, "எங்கள்
மாணவனை டாக்டராக்குவோம்' என, அவன் ஆசிரியர்கள், பள்ளியில் உள்ள அனைத்து
ஆசிரியர்களும் சேர்ந்து, 2.35 லட்சம் ரூபாய் கொடுத்தனர். இதில், 10
ஆசிரியர்கள், அவன் படிப்பு முடியும் வரை, ஆண்டுக்கு, 10,000 ரூபாய்
தருவதாகக் கூறி இருக்கின்றனர். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் முதல்,
பிளஸ் 2 மாணவர்கள் வரை, அவர்களது, "பாக்கெட் மணி'யைச் சேர்த்து, 10,000
ரூபாய் கொடுத்தனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட சுற்று வட்டார கிராம
மக்கள் அனைவரும், தங்களால் இயன்ற உதவியைச் செய்துள்ளனர். இப்படி, சிறுகச்
சிறுகச் சேர்த்து, 5.60 லட்சம் ரூபாய், சுப்பையாவின் அப்பா மற்றும்
பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர் என, இருவரும் இணைந்து இயக்கும் விதத்தில்,
"ஜாயின்ட் அக்கவுன்ட்' தொடங்கி உள்ளனர். அவனை மருத்துவராக்குவது, இனி பள்ளி
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொறுப்பு.
மாணவன் சுப்பையா: மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தில்,
அதிகமாகப் படித்தேன். தினமும், வீட்டில் இருந்து, ஏழு கி.மீ., சைக்கிள்
மிதித்து பள்ளி செல்வேன். கால் வலி தெரியாமல் இருக்க, பாடங்களைச் சத்தமாகச்
சொல்லிக் கொண்டே செல்வேன். எனக்கு எல்லாரும் உதவுகின்றனர்; அனைவருக்கும்
நன்றி. என் படிப்பு, கண்டிப்பாக ஏழைகளுக்கு உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக