வெள்ளி, 5 மார்ச், 2010

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு குறித்து இந்தியா வலியுறுத்தாதது ஏன்?



சென்னை, மார்ச் 4: இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என இலங்கையை இந்திய அரசு வலியுறுத்தாதது ஏன்? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவர் வியாழக்கிழமை பேசியதாவது:இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் இல்லை. அரசியல் தீர்வு வேண்டும் என்று இந்தியா ஏன் வலியுறுத்தவில்லை.அதேபோல் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து பாதுகாப்பது குறித்து பல முறை பேசியுள்ளோம். ஆனால் எந்தத் தீர்வும் காணப்படவில்லை. கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தாதது ஏன்?இந்திய மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கச் செய்வதிலும் இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டிய நேரமிது.134}வது இடத்தில் இந்தியா: இந்தியாவில் துரிதமான பொருளாதார வளர்ச்சி, இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பற்றியெல்லாம் பேசப்படுகிறது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவின் பெரும்பான்மையான ஏழை எளிய, தலித், பழங்குடியின மக்களுக்கு வளர்ச்சியின் பலன் எதுவுமே கிடைக்காத நிலையில் இது எவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க முடியும்?மத்திய அரசால் அமைக்கப்பட்ட சென்குப்தா குழு, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதாகக் கூறியுள்ளது. நாட்டின் மொத்த தலித் மக்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே உயர் வருவாய் பிரிவில் உள்ளனர். 88 சதவீத தலித் மற்றும் ஆதிவாசி மக்களின் வாழ்நிலை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.உலக நாடுகளில், மனித ஆற்றல் வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 134}வது இடத்தில் உள்ளது. ஆனால், இலங்கை நமக்கும் மேலே 102}வது இடத்தில் உள்ளது. பிரேசில் 75}வது இடத்திலும், சீனா 92}வது இடத்திலும் உள்ளன.சந்திராயன் விண்கலம் நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதுதான். ஆனால் அந்த பெருமை மட்டுமே போதுமா? மனித ஆற்றல் வளர்ச்சிக் குறியீட்டில் நாம் ஏன் 134}வது இடத்தில் உள்ளோம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? இது நமது நாட்டுக்கு பெருமை தரக்கூடியதுதானா?நமது நாட்டு மக்களின் உண்மையான கோரிக்கைகளை புரிந்து கொள்வதில் இந்த அரசு தோல்வியடைந்து விட்டது. துன்பப்படும் மக்களின் பிரச்னைகளை இந்த அரசு அறிந்து கொள்ளவில்லை.நமது நாட்டு பிரச்னைகள் அனைத்துக்கும் நவீன தாராளமய கொள்கைகள் மூலம் தீர்வு கண்டுவிட முடியும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்புகிறது. பிரதமர் மன்மோகன் சிங் 1990}ம் ஆண்டுகளில் நிதியமைச்சராக இருந்தபோதுதான், இந்த கொள்கைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இன்றைய இந்தியாவின் பிரச்னைகள் அனைத்துக்கும் இந்த கொள்கைகள்தான் காரணம்.விலைவாசி:அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு, வறட்சியைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள இந்த அரசு முயல்கிறது. ஆனால், ஒரு அரசு என்ற முறையில் விலைவாசியைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொண்டோம் என்பதைப் பற்றி நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.உள்நாட்டுப் பாதுகாப்பு:உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்னைகளுக்கு இடதுசாரி தீவிரவாதம்தான் காரணம் என்று இந்த அரசு மேலோட்டமாகப் பார்க்கிறது. தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. மக்கள் பிரச்னைகளை அரசியல் ரீதியான போராட்டங்கள் மூலம்தான் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.ஆனால், மத்திய அரசு நக்ஸல் ஒழிப்பு என்ற பெயரில் ஆதிவாசி மக்களை துன்புறுத்துகிறது. ஆதிவாசி மக்களுக்காக கல்வி, மருத்துவ சேவை செய்வோரை தீவிரவாதிகளாக சித்திரிக்கிறது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஆதிவாசி மக்களை அவர்களின் சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்கிறது. அரசின் இந்த அணுகுமுறை மாற வேண்டும்.நாட்டில் உணவுப் பாதுகாப்பு, கல்வி பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு போன்றவற்றை அரசு உறுதிப்படுத்துவதன் மூலமே, உள்நாட்டுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும் என்றார் ராஜா.
கருத்துக்கள்

இந்திய அரசு ஒரு புறம் வேட்டைக்காரன் போலவும் மறுபுறம் சிங்களத்தின் கைக்கூலி போலவும் செயல்பட்டிருக்கும பொழுது எவ்வாறு ஈழத்தில் அமைதி திரும்பவும் ஈழத் தமிழர்கள் உரிமை வாழ்வு வாழவும் இந்தியா குரல் கொடுக்கும்? எனினும் இவர போன்று ஒவ்வொருவரும் நாடாளுமன்றத்தில் பேசி பிற மாநில மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/5/2010 3:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக