சனி, 6 மார்ச், 2010

தனியார் டி.வி. மீது மார்க்சிஸ்ட் ஆதரவாளர் தாக்குதல்; மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பதில் தாக்குதல்



சென்னை, மார்ச் 5: மார்க்சிஸ்ட் தலைவர் உ.ரா. வரதராஜன் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பி ஒளிபரப்பான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். அப்போது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் 101 பேர் கைது செய்யப்பட்டனர்.இதன் எதிரொலியாக தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இது தொடர்பாக மாநகராட்சி பாமக கவுன்சிலர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.இது குறித்த விவரம்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உ.ரா. வரதராஜனின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பும் வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வியாழக்கிழமை இரவு செய்தி ஒளிபரப்பானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநகரப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனர்.டி.வி. அலுவலகம் மீது தாக்குதல்: இதே சமயத்தில் காலை 11 மணி அளவில், வரதராஜன் குறித்த செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சி அலுவலகம் அருகில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் திரண்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் கே. சண்முகம், தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் பீம்ராவ், மாநில நிர்வாகிகள் கே. பாலகிருஷ்ணன், பி. செல்வின் உள்ளிட்டோர் தலைமையில் திரண்ட இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் திடீரென கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் காவலாளி உள்பட தொலைக்காட்சி நிறுவன அலுவலர்கள் 3 பேர் காயமடைந்தனர்.அங்கிருந்த 3 கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அலுவலக ஜன்னல் மற்றும் கதவுகளில் இருந்த கண்ணாடிகளும் உடைந்தன. அங்கு விரைந்த போலீஸôர், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 15 பெண்கள் உள்பட 92 பேரைக் கைது செய்தனர். மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல்: இச் சம்பவத்தைத் தொடர்ந்து தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி மாநில அலுவலகத்தில் கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற உள்ளதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.தொலைபேசி தகவல் குறித்து கட்சி அலுவலக நிர்வாகிகள் போலீஸôருக்குத் தகவல் தெரிவித்தனர். அதற்குள் கட்சி அலுவலக வளாகத்துக்குள் 60 பேர் கொண்ட கும்பல் புகுந்தது.கட்சி அலுவலக வளாகத்தில் இருந்த 2 கார்கள் 5 மோட்டார் சைக்கிள்கள், கண்ணாடி ஜன்னல்களை அந்தக் கும்பல் அடித்து நொறுக்கியது. அங்கிருந்த கட்சிக் கொடிக் கம்பத்தை வீழ்த்தினர். அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த தலைவர் பி. ராமமூர்த்தியின் உருவப்படத்தில் இருந்த கண்ணாடியும் நொறுக்கப்பட்டது.தகவல் அறிந்து போலீஸôர் அங்கு வருவதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் வெளியேறினர். அப்போது கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில அலுவலக செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் உள்ளே இருந்தனர்.""இது தொடர்பாக 131}வது வார்டு பாமக கவுன்சிலர் எஸ். வெங்கடேசன், 120}வது வட்ட செயலாளர் ரவி, தென் சென்னை மாவட்ட பாமக நிர்வாகி குமார் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டதாக தியாகராய நகர் துணை கமிஷனர் கே. பெரியய்யா தெரிவித்தார்.கைதான மார்க்சிஸ்ட் கட்சியினரில் 85 பேர் எழும்பூரில் உள்ள 14}வது பெருநகர மாஜிஸ்திரேட் முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். ராமதாஸ் கண்டனம்: தொலைக்காட்சி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.மார்க்சிஸ்ட் மறுப்பு: தொலைக்காட்சி அலுவலகம் மீது தங்கள் கட்சியினர் தாக்குதல் நடத்தவில்லை என்று தமிழ்நாடு மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.தொலைக்காட்சி அலுவலகம் எதிரே தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து தங்கள் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கருத்துக்கள்

மார்க்சிய ப் பொதுவுடைமை தாக்கப்பட்டதாக விரிவான படங்களுடன் செய்தி தனியே வெளியிட்டுள்ள தினமணி, இங்கும் அச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், மக்கள் தொலைக்காட்சி தாக்கப்பட்டது குறித்து பதில் தாக்குதலுடன் இணைத்துச் சுருக்கமாக இங்கு வெளியிட்டுள்ளது. தினமணியின் நிடுநிலை இதுதானா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
3/6/2010 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக