ஒரு முத்திரை விழுந்து விட்டால அம் முத்திரையின் சாயலிலேயே பிறவற்றையும் நோக்குவதே மக்கள் இயல்பு். சமூக நீதிக்காக என்பது உண்மையாக இருப்பினும் தலைவரின் குடும்பச் சமூக நீதிக்காக, தலைவரின் குடும்பச் சம நீதிக்காகப் பாடுபடும் கட்சி என்றே அனைவரும் கருதுகின்றனர். எல்லாக் கட்சித் தலைவர்களுமே தம் பரம்பரையினரை ஆட்சிப் பீடத்திலும் கட்சிப் பொறுப்பிலும் ஏற்றி அழகு பார்த்தாலும் கலைஞருக்கு மட்டுமே இந்த அவப் பெயர் ஏன்? தமிழுக்காகக் குரல் கொடுக்கும் கடந்த காலப் பாதையில் இருந்து தடம் புரண்டு குடும்பத்திற்காகக் குரல் கொடுக்கும் கோமானாக மக்களைக் கருதச் செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது? சிந்திப்பின் விடை கிடைக்கும். விடை கிடைப்பின் தெளிவு பிறக்கும். தெளிவு பிறப்பின் தவறு திருத்தப்படும். திருத்தப்படின் உண்மைச் சமூக நீதி பிறக்கும். அவ்வாறாயின் கறை களையப்படும். மாறாகப் பழி பாவங்களுக்கு அஞ்சாமல் தூற்றுவோர் தூற்றட்டும் எனக் குடும்பச் சமூக நீதி மட்டும் காக்கப்படின் எப் பேச்சிற்கும் மதிப்பிருக்காது.
உரிய மதிப்புயர்வை விரும்பும்
இலக்குவனார் திருவள்ளுவன்
2/28/2010 3:33:00 AM