ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010


பிரான்சு : பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா, செந்தமிழ்க் காவலர் முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா ஆகியன ஜனவரி 14ம் தேதியன்று பரி நகரின் புற நகராம் கார்ழ் லே கொனெசு நகரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. மார்க் தம்பி, தனசெல்வி மார்க் தம்பி (இருவருமே பேரா. பெஞ்சமின் லெபோவின் மாணாக்கர்கள்) மங்கல விளக்குக்கு ஓளி ஊட்டினர். பிரான்சு கம்பன் கழகத்தின் நிறுவனரும், தலைவருமான கவிஞர் பாரதிதாசன் இறை வணக்கம், தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார். சிறப்பு விருந்தினர்கள் பேரா. ப. தசரதன், பரி நகரில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நாராயணன், கார்ழ் லே கொனெசு நகரின் நகரத் தந்தை மெளரைஸ் லெஃபேவிரிவ் மேடையில் அமர்ந்தனர். பிரான்சு கம்பன் கழகத்தின் பிரஞ்சுப் பிரிவுச் செயலர் செவாலியே சிமோன் யூபர்ட் எழுதி அனுப்பிய வரவேற்பு உரையைக் கம்பன் கழகப் பொருளாளர் தணிகா சமரசம் படித்து அனைவரையும் வரவேற்றார்.

தலைமை தாங்கிய பேரா. ப. தசரதன், நகரத் தந்தையையும் இந்தியத் தூதரக அதிகாரியையும் பிரஞ்சு மொழியில் அறிமுகம் செய்தார். பிறகு பொங்கலைப் பற்றிப் பிரஞ்சிலும் தமிழிலும் தலைமை உரையாற்றினார். பின், நகரத் தந்தை கழகத்தை வாழ்த்திப் பிரஞ்சு மொழியில் பேசினார். அம்மொழி அறியாதோர் புரிந்துகொள்வதற்காக அதனை மொழி பெயர்த்தவர் பேரா. ப. தசரதன். நகரத் தந்தைக்குப் பொன்னாடை போர்த்திப் பரிசளித்து மரியாதை செய்தனர். அதன்பின் தமிழிசை பொழியத் தொடங்கியது வசீகரக் குரல் எடுத்து வண்ணத் தமிழ்ப் .பாடல்களைப் பாடி மகிழ்வித்தவர் இராதா சிரீதரன். நூற்றாண்டு விழா நாயகர் செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார் 'புலவரில் சிறந்தவர் ' என்று பாராட்டி எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எனச் சிறப்பாக இசைப் பாடல் எழுதி அனுப்பி இருந்தார் புதுவைக் கவிஞர் தே. சனார்த்தனன். இவர் கவிஞர் பாரதிதாசனுக்குத் தந்தையார். இப்பாடலைத் இராதா பாடிய இனிமையைக் கேட்டு அவையே கிறங்கிப் போனது. சிறப்பாக இசை விருந்து அளித்த இராதா சிரீதரனுக்குப் பொறுப்பாகப் பொன்னாடை கம்பன் கழகத்தின் சார்பாகப் போர்த்தியவர் ஜெசிந்தா சந்தானா.

குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, பெரியவர்களுக்கான கோலப் போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டன. கோலப் போட்டியில் முதல் பரிசை வென்ற பூங்குழலி பெருமாளுக்கு இந்தியத் தூதரக அதிகாரி நாராயணன் பொன்னாடையும் பரிசும் அளித்தார். இரண்டாம் பரிசு பெற்றவர் சரோசா தேவராசு. அவருக்குப் பொன்னாடை, பரிசு அளித்தவர் பேரா. ப. தசரதன்.'செந்தமிழ்க் காவலர்' என்ற தலைப்பில் விழா நாயகர் பற்றிச் சிறப்புரை ஆற்றத் தென்றலாய் வந்தார் பேரா. பெஞ்சமின் லெபோ. தமக்கே உள்ள பைந்தமிழை இழைத்துப் பகை இல்லா நகைச் சுவையைக் குழைத்துக் கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்பப் பேசிய பேச்சால், அருவி எனப் பெருகி வந்த அருந்தமிழ்ச சொல் வீச்சால் அவையைக் கவர்ந்தார். புறநானூறு ஏன் படிக்க வேண்டும் என்பதை விளக்கிய அவர், அதே காரணங்களுக்காகவே செந்தமிழ்க் காவலர், இலக்கணச் செம்மல் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார் வாழ்க்கை பற்றியும் தமிழர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். இலக்குவனார் ஆற்றிய அரும் பணிகளைப் பற்றித் தென்றலாய்ப் பேசினார்;

பேரா. பெஞ்சமின் லெபோ. சிறப்பாசிரியராகவும் கவிஞர் பாரதிதாசனை ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் கம்பன் இலக்கிய, இலக்கணத் திங்கள் இதழ், முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா மலர் ஒன்றை வெளியிட ஏற்பாடு செய்து இருந்தது. அந்த மலரை கம்பன் கழகச் செயற்குழு உறுப்பினர் அசோகன் வெளியிட, சிவப்பிரகாசம் , இலங்கை வேந்தன் பாண்டுரங்கன், ஆதி ஞானவேல், குமார் அமல்ராசு, முசாவித் முகமத், செயசீலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து 'தைமகள் வருகவே, தமிழ் நலம் தருகவே' என்ற தலைப்பில் கவிமலர் நிகழ்ச்சி நடைபெற்றது.

சார நாயகி கோபாலக் கிருட்டிணனின் பரத நாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. கம்பன் கழகத்தின் பிரஞ்சுப் பிரிவுச் செயலர் செவாலியே சிமோன் யூபர்ட், சார நாயகி கோபாலக் கிருட்டிணனுக்குப் பொன்னாடை அணிவித்தார். பின்னர் பிரான்சு கம்பன் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான கவிஞர் பாரதிதாசன் நடுவராக அமரப் பட்டி மன்றம் தொடங்கியது. 'தமிழர், தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கிறார்களா? குலைகிறார்களா?' என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. வளர்க்கின்றார்கள் என்ற அணியில் சிமோன் இராசேசுவரி, சரோசா தேவராசு, எலிசபெத் அமல்ராசு வாதிட்டனர். குலைக்கின்றார்கள் என்ற அணியில் எதிர்வாதம் செய்தவர்கள்: லூசியா லெபோ, ஆதிலட்சுமி வேணுகோபால், பூங்குழலி பெருமாள். நடுவர் கவிஞர் பாரதிதாசன், பண்பாடு என்றால் என்ன, தமிழ்ப் பண்பாடு என்பது என்ன என்று நன்கு விளக்கினார். பின் இரு தரப்பும் சூடும் சுறுசுறுப்புமாக நகைச்சுவை கலந்து வாதிட்டனர். இறுதியாக, தமிழர்கள் தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கத்தான் செய்கிறார்கள் என்று தீர்ப்பு கூறிக் கைத் தட்டல்களை அள்ளிச் சென்றார் கவிஞர் பாரதிதாசன். கழகத்தின் பொருளாளர் தணிகா சமரசம் நன்றி உரை கூறினார்.

இறுதி நிகழ்ச்சியாகக் குலுக்கல் நடைபெற்றது. வெற்றி பெறாதவர்கள் கை தட்ட வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியோடு பரிசுகளை வாங்கிச் சென்றனர். முன்னின்று குலுக்கலை நடத்தித் தந்த பேரா. பெஞ்சமின் லெபோ. முதல் பரிசு தங்கக் காசு என்று அறிவித்துவிட்டு, உடனடியாக இல்லை இல்லைஅது தங்கக் காசு இல்லை என்று சொன்னதும் அவை அமைதி ஆனது. அவர் தொடர்ந்தார்: 'ஆம் அது தங்கும் காசு இல்லை. விற்பதற்காகக் கடையில் வைத்திருந்தவரிடம் அது தங்கவில்லை, அதனை வாங்கி வந்தவரிடமும் அது தங்கவில்லை, பரிசு பெற்றவரிடமும் அது தங்கப் போவது இல்லை... அப்படி இருக்கையில் அதனைத் தங்கும் காசு, தங்கக் காசு என்று எப்படிச் சொல்வது? எனவே அது எங்கும் தாவும் காசு! ' என்றவுடன் கைதட்டல்கள் அரங்கை அதிர வைத்தது. விழாவும் இனிதே நிறைவடைந்தது.

- தினமலர் வாசகர் புதுவை எழில்



பிரான்சு கம்பன் கழகத்தாரின் அனைத்து வகைத் தமிழ்ப் பணிகளும் பாராட்டிற்கு உரியவனவாக உள்ளன. தந்தை பெரியார் அவர்களால் தமிழர் தளபதி என அழைக்கப்பெற்ற செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கடல் கடந்தும் சிறப்பாக நடத்தியுள்ளமை உண்மைத் தமிழுணர்வு உலகில் இன்னும் அழியவில்லை என்பதைக் காட்டுகிறது. செய்திகளை நமக்கு அளித்த வாசகர் புதுவை எழில் அவர்களுக்கும் செய்திகளையும் படங்களையும் வெளியிட்ட தினமலருக்கும் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக