ராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக்கதை ஒன்று உண்டு. கங்கைக் கரை ஓரமாக உள்ள ஒரு கிராமத்தில் வாழும் யாதவகுலப் பெண்கள் சிலர் தினமும் தலையில் மோர், தயிர் மற்றும் வெண்ணெயைக் கலயங்களில் சுமந்து கொண்டு கங்கையின் மறுகரையிலுள்ள கிராமங்களில் விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தனர். தினமும் காலையில் ஓடத்தில் கங்கையைக் கடப்பதும், மாலையில் அதேபோல ஓடத்தில் ஏறித் தங்கள் கிராமத்துக்குத் திரும்புவதும் வழக்கம்.ஒருநாள் மாலையில் மறுகரையில் இருந்த ஓடத்துக்காகக் காத்திருந்த அந்த யாதவப் பெண்களை அருகிலிருந்த கிருஷ்ணன் கோயிலில் நடந்து கொண்டிருந்த உபந்நியாசம் கவர்ந்திழுத்தது. அந்தப் பெண்களும், பக்தர்கள் கூட்டத்துடன் அமர்ந்து கேட்டனர்.ஓடத்தில் ஏறித் தங்களது வீட்டுக்கு வந்த பிறகும், அந்தப் பெண்களின் மனதிலிருந்து உபந்நியாசகர் சொன்ன ஒரு கருத்து அகலவில்லை. நமது பக்தி அப்பழுக்கில்லாததாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்குமேயானால், நமக்கு அளப்பரிய சக்தி ஏற்பட்டுவிடும். உதாரணத்துக்கு, "கிருஷ்ணா' என்று மனதை ஒருமுகப்படுத்தி வேண்டினால், கங்கையைக்கூட நடந்து கடந்து விடலாம்...' என்பதுதான் அந்த மோர் விற்கும் யாதவப் பெண்களை மிகவும் பாதித்த கருத்து.அடுத்த நாள் அதிகாலையில் கங்கைக்கரையில் கூடிய அந்தப் பெண்கள் தாங்கள் ஏன் உபந்நியாசகர் சொன்னதைச் செய்து பார்க்கக்கூடாது என்று நினைத்தனர். கள்ளங்கபடமற்ற அந்தப் பெண்கள் கண்களை மூடி, மனதை ஒருமுகப்படுத்திக் கண்ணனை நினைத்தபடி, தயிர்க் கலயங்களுடன் நடக்கத் தொடங்கினர். என்ன அதிசயம்? நிஜமாகவே அவர்கள் கங்கையை நடந்து கடந்துவிட்டனர்.அன்றுமுதல் தினமும் கண்ணனை நினைத்தபடி கங்கையை நடந்து கடக்கத் தொடங்கிய அந்தப் பெண்கள் ஓடக்காரனுக்குக் கொடுத்து வந்த கூலியை ஓர் உண்டியலில் சேர்த்து வைத்தனர். தங்களுக்கு இறையுணர்வை ஏற்படுத்திய, கங்கையை நடந்து கடக்க வழிவகை செய்த மகானான உபந்நியாசகரைத் தங்களது கிராமத்துக்கு அழைத்து வந்து கௌரவிக்க வேண்டும் என்கிற அவர்களது ஆசையை கிராமத்தவர்களும் ஆமோதித்தனர்.உபந்நியாசகரும் ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட நாளும் வந்தது. அந்தப் பெண்கள் உபந்நியாசகரை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்தனர். மறுகரையில் தெரிவதுதான் தங்களது கிராமம் என்று உபந்நியாசகருக்குக் காட்டினார்கள். உபந்நியாசகர் கேட்டார்-""எங்கே ஓடம்?''""ஓடமா?, நீங்கள் சொல்வதுபோல நாங்கள் "கிருஷ்ணா' என்றபடி நடந்துதான் போகிறோம்'' என்றபடி அந்தப் பெண்கள் கங்கையின் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் நடக்கத் தொடங்கினர். உபந்நியாசகர் விட்டால் போதும் என்று பிடித்தார் ஓட்டம்.ராமகிருஷ்ண பரமஹம்சரின் இந்தக் கதைதான் நாளும் பொழுதும் அரங்கேறிய வண்ணம் இருக்கிறது. பரமஹம்ச நித்யானந்தர் போன்ற சில ஆன்மிகவாதிகளின் செயல்பாடுகள் மட்டுமல்ல, நமது முன்னணி அரசியல் மற்றும் சமுதாய வழிகாட்டிகளின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கின்றன. அரசியல் அசிங்கம் ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் அரங்கேறியது. ஆன்மிக அசிங்கம் ஆசிரம அறையில் அரங்கேறி இருக்கிறது. மேலைநாடுகளில் தனிமனித ஒழுக்கம் என்பது அறவே இல்லை என்கிற நிலைமைதான். ஆனால் அவர்கள் தங்களது தலைவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். இங்கே நிலைமை தலைகீழ். தனிமனிதர் ஒழுக்கமாக இருக்கிறார். அவரது அரசியல் மற்றும் ஆன்மிக வழிகாட்டிகள் ஒழுக்கக்கேடின் ஒட்டுமொத்த உருவங்களாகத் தொடர்கிறார்கள்.தவறு அவர்கள் மீதல்ல. நம் மீதுதான். இவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களது வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் உரிமையை நமக்குச் சுதந்திரம் அளித்திருக்கிறதே. நாம் ஏன் தொடர்ந்து தவறானவர்களை மட்டுமே தேடிப்பிடித்துத் தேர்ந்தெடுக்கிறோம்?இப்படி எல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்த ஒரே ஒரு தீர்க்கதரிசி அண்ணல் மகாத்மா காந்தி மட்டுமே. பொதுவாழ்வில் இருப்பவர்கள் மக்களுக்கு வழிகாட்டினால் மட்டும் போதாது, வாழ்ந்தும் காட்ட வேண்டும் என்பதை வற்புறுத்திய மகான் அவர். அந்த மாமனிதரின் வழிகாட்டுதலைப் புறந்தள்ளியதால் இந்திய சமுதாயம் அடைந்திருக்கும் பின்னடைவுதான் இது.கடந்த கால் நூற்றாண்டு காலமாக நம்மை ஓர் "ஆக்டோபஸ்' போலப் பிடித்திருக்கும் கார்ப்பரேட் கலாசாரத்தின் கோர முகங்களில் ஒன்றுதான் காளான்கள்போல உருவாகி இருக்கும் சாமியார்களும், யோகா குருக்களும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அளப்பரியது. அவர்களது மூளை கசக்கிப் பிழியப்படுகிறது. அந்த அழுத்தத்தைக் குறைக்கிறோம் என்கிற பெயரில் பல யோகா மற்றும் தியான ஆசிரியர்கள் காவி உடை தரித்துக் களம் இறங்கி இருக்கிறார்கள்.இவர்களை முற்றும் துறந்த முனிவர்களாகவும், தேவதூதர்களாகவும், சாப விமோசனம் தரும் ஜீவன் முக்தர்களாகவும் கருதினால் அது யாருடைய தவறு? காவி உடையில் நடமாடும் போலிகளை யோகிகள் என்று நம்பி யார் ஏமாறச் சொன்னது?அது ஒருபுறம் இருக்கட்டும். தவறுகளை மக்களுக்கு அடையாளம் காட்டி சமுதாயம் சீர்கெடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு என்பதில் மாறுபட்ட கருத்து நமக்கு இல்லை. அதேநேரத்தில், மீண்டும் மீண்டும் தவறை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம் என்கிற பெயரில் ஆபாசப் படத்தை ஒளிபரப்பி மக்கள் மனதில் அருவருப்பை ஏற்படுத்தியதை எப்படி ஏற்றுக்கொள்வது?தமிழகத்திலுள்ள பெருவாரியான பெற்றோர்கள் தங்களது வீட்டிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்து விடலாமா என்கிற அளவுக்கு ஆத்திரமடைந்தனரே, என்ன கொடுமை? குழந்தைகள் பார்த்து விடுவார்களோ என்று பயந்தனரே, இது என்ன நியாயம்? இதற்குப் பெயர் சமுதாயப் பொறுப்பா? இதன் மூலம் தனது டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்த நினைக்கும் கீழ்த்தரமான வியாபாரத் தந்திரம் குமட்டலை ஏற்படுத்துகிறதே...ஒரு புலனாய்வுப் பத்திரிகை, சாமியாரின் களியாட்டக் குறுந்தகடைத் தனது இணையதளத்தில் வெளியிட்டு, கட்டணம் வசூலித்தது. சுமார் 20 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்ததாம். வெட்கக்கேடு...""பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ காட்டப்படும் செய்திகளும், படங்களும் அளவுக்கு அதிகமாக இருந்தால், அவை இளையோர் நெஞ்சங்களில் மோசமான மாறுதல்களை ஏற்படுத்தும். அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது'' என்கிற தமிழக முதல்வரின் அறிக்கை பொறுப்புணர்வுடன் வெளியிடப்பட்ட ஆதங்கம்.நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!சகிக்கவில்லை...
கருத்துக்கள்
முதல்வரின்அறிக்கை பொறுப்புணர்வுடன் வெளியிடப்பட்ட ஆதங்கம் என்றால் தன் குடும்பத் தொலைக்காட்சியிடம் உடனே இதை நிறுத்துமாறு ஏன் தெரிவிக்கவில்லை? தன் குடும்ப இதழிடம் இது குறித்த படத்தை வெளியிட வேண்டா என ஏன் தடுக்கவில்லை? தினமணி ஆழ்ந்து சிந்திக்காமல் எதையும் எழுதக் கூடாது. இப்படக்காட்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் நிலத்தகராறு ஒன்று இதனை இப்பொழுது வெளியிடச் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறதே!உண்மையா? எவ்வாறிருப்பினும் போலிச் சாமியார்களின் பொய்வேடத்தைத துகிலுரித்துக் காட்டிய ஊடகத்தைப் பாராட்ட வேண்டியதுதான். ஆனால் இது போன்ற நீலப்படங்களை ஒளி பரப்புகையில் நீலப் படம் வரப்போகிறது; பிள்ளைகளை வேறு அறைக்கு அனு்ப்பி விட்டுப் பாருங்கள் என எச்சரிக்கலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/6/2010 4:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்3/6/2010 4:16:00 AM