வெள்ளி, 5 மார்ச், 2010

ஊனமுற்றோருக்கு பெருந்திட்டம்: முதல்வர் கருணாநிதி



திருச்சி, மார்ச் 3: அடுத்ததாக மாற்றுத்திறன் படைத்தோருக்கு (ஊனமுற்றோருக்கு) பெருந்திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம் என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி.திருச்சியில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை புதன்கிழமை இரவு தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியது:இங்கே பேசியவர்கள் பலரும் இத்தனை பெரிய திட்டங்களுக்கெல்லாம் எங்கே பணம் இருக்கிறது என்று ஜாடைமாடையாகக் கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் சொல்கிறேன். வேடிக்கையாக, வினையமாக அல்ல- பணத்துக்கு பஞ்சமில்லை. திருச்சி மாவட்ட ஆட்சியரின் பெயர் சவுண்டையா. அரசிடம் பணம் "சவுண்ட்' அய்யா. பணம் இருக்கிறது.1957-ல் திருச்சியில்தான் நான் எனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினேன். நான் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை "நம்நாடு' இதழில் தெரிந்து கொள் என்றார் அண்ணா. "நம்நாடு' அலுவலகத்தில் சென்று பார்த்த போது "குளித்தலை' என்று போடப்பட்டிருந்தது. நாகை அல்லது வேறொரு தொகுதியில் போட்டியிட நினைத்திருந்தேன். குளித்தலையில் நின்றேன்; வென்றேன்.அண்ணா கட்டளையால், அறிமுகமில்லாத பழக்கமில்லாத தொகுதியில் வென்றேன். அருகில் உள்ள பேட்டைவாய்த்தலை, நங்கவரம் பகுதிகள்தான் நான் போர்க்களம் அமைத்த இடங்கள். அந்த நன்றியுணர்ச்சியுடன் நான் வரும்போதெல்லாம் திருச்சி மக்கள் என்னை உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள்.பணம் முக்கியமல்ல, இந்த ஜனம் இருந்தால் போதும். அரசின் எண்ணம், லட்சியம் ஆகியவற்றை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.வீடு கட்ட தொகை அதிகரிக்கும்:எதிர்க் கட்சியினராக இருந்தாலும் அவர்கள் சொல்லும் கருத்தை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். ஆளும் கட்சியின் திட்டத்தை முற்றிலுமாக எதிர்க்காமல், எதிர்க்கட்சி என்ற முத்திரையை வைத்து கருத்தைச் சொல்ல வேண்டும். அதுதான் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான இலக்கணம்.திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அந்தந்தக் கட்சிகளுக்கு லாபம். ஆனால், வேண்டாம் என்றால் இரண்டு பேருக்குமே லாபம் இல்லை; பயனைத் தராது.எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது, சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அப்போது நான் எதிர்க்கட்சித் தலைவர். அந்தத் திட்டத்தில் சில கருத்துகளைத் தெரிவித்தேன். பள்ளிகளில் ஆயாக்களிடம் பணம் கொடுத்து உணவுப் பொருள்களை வாங்கி அவர்களே சமைத்துப் போடும் வகையில் கருத்தைச் சொன்னேன்.ஆதரிக்கவும் முடியாது; ஆதரிக்காமல் இருக்கவும் முடியாது. இது எதிர்க் கட்சிக்கு உள்ள சங்கடம். வேறு ஆட்சியாக இருந்தால், "நீ யார் சொல்ல, நான் யார் கேட்க' என்று இருந்து விடுவார்கள். இந்த ஆட்சி அப்படியல்ல. எனவே, இத் திட்டத்தில் வீடு கட்டும் தொகையை அதிகரிக்க வேண்டும், அகலப்படுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் யோசனையை, நல்லெண்ணத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். எந்த வகையில் இதைச் செயல்படுத்த வேண்டும், பயன்படுத்த வேண்டும், அறிவிக்க வேண்டுமோ நான் அறிவிப்பேன்.மாற்றுத்திறன் படைத்தோர்: மாற்றுத்திறன் படைத்தோருக்கான ஐநா ஒப்பந்தத்தில் இந்தியா 7-வது நாடாக கையெழுத்திட்டிருக்கிறது. ஆனாலும், இதுவரை ஊனமுற்றோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஊனமுற்றோருக்கு நன்மை செய்யும் வகையில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், அதற்கானவற்றை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், வரும் பட்ஜெட் உரையில் கேட்டுக்கொள்வோம். இது மத்திய அரசுக்கு நெருக்கடி தருவதாகப் பொருள் அல்ல.தொடர்ந்து ஊனமுற்றோருக்கான பெருந்திட்டம் ஒன்றை நாடு முழுவதும் செயல்படுத்தவுள்ளோம். இதைவிட அது பெரிய திட்டம். ஊனமுற்றோர் கேட்க வழியில்லாதவர்கள், பலமில்லாதவர்கள். ஆனாலும், அவர்களும் மனிதர்கள்தான். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பால்தான் இத்தனை பெரிய திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது. இந்த ஆல மரம் (மேடை) மன்னனுக்கான நிழலாக இல்லாமல், மக்களுக்கான நிழல் தரும் ஆலமரமாக இருக்கும்' என்றார் கருணாநிதி.
கருத்துக்கள்

ஊனமுற்றவர்களுக்கான பெருந்திட்டம் வர இருப்பது பாராட்டிற்குரியது. பார்வயைற்றவர்கள் தொடர்ந்து சில கோரிக்கைகளுக்காக எல்லா ஆட்சியிலும் போராடி வருகிறார்கள். ஆனால், வெற்றி அடையவில்லை. இது போல் ஊன முற்றவர்களும் அவ்வப்பொழுது போராடி வருகிறார்கள். இப் போராட்டங்களுக்கெல்லாம் இனித் தேவை யில்லாதபடி நலத்திட்டங்களைச் செயற்படுத்த வேண்டுகிறேன். பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/5/2010 3:22:00 AM

போர்குற்றங்களின் சாட்சியங்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை இந்திய உளவுத்துறை! தமிழ்நாட்டு ஊடகங்கள்! இலங்கை போர் குற்றங்களை அறிந்தவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறி அவர்களை அழிக்க ஒரு குழு தமிழகம் வந்துள்ளது. இலங்கை உள்நாட்டு போருக்கு பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்த ஈழத் தமிழர் சிலர், அன்மையில் கடத்தப்பட்டது அவர்கள் நேரில் கண்ட போர் குற்றங்களை வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று அடக்கி வைப்பதற்காகத்தான் என்று சென்னை ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஒரு மாதத்தில் கொழும்பு வதை முகாமில் இருந்து ஒரு சிறப்புக்குழு தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சில குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட கூறியிருந்த இக்குழுவில் முன்னாளில் தமிழ் ஈழ நிர்வாகத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் காவல்துறையினர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற தமிழர் சிலரைப் பற்றியும், தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களுடன் தொடர்பு கொண்டும் மற்றும் இலங்கை ராணுவத்தினரின் போர்க்குற்றங்களை நேரில் கண்டறிந்த மருத்துவப் பணியாளர்களையும் சந்தித்து தகவல் பெறுவதற்காகவே என்று கூறப்படுகிறது.

By AlsoTamil
3/5/2010 1:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக