புதன், 3 மார்ச், 2010

இதுதானே சட்டத்தின் ஆட்சி!



வள்ளைக்காரன் நமக்குச் செய்த நன்மைகளில் தலையாயது அவன் நமக்கு வழங்கிய "சட்டத்தின் ஆட்சி முறை' என்று சொல்வார்கள். எழுதி வைக்கப்பட்ட சட்டம் என்றால் எல்லோருக்கும் ஒன்றுதான் என்பதால் அந்தச் சட்டத்தின்படி தீர்ப்புச் சொல்லும்போது இன்னார் இனியார் என்னும் பாகுபாடு அற்றுப் போகிறது என்றும் அதைப் புகழ்வார்கள்.குற்றம் செய்கிறவர்கள் யார்? அவர்கள் ஆட்சியாளர்களின் குடும்பமா? பெரும் பண வசதி உடையவர்களா? இவை குறித்து நீதிதேவதை அறிந்து கொள்ள விரும்புவதில்லை என்பதனாலேயே அவள் தன் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறாள் என்றும் பாராட்டுவார்கள்.நீதியும் நிர்வாகமும் பிரிக்கப்பட்டதன் நோக்கமே நீதி பாதிக்கப்படக் கூடாது என்பதால்தான் என்பது அவர்களின் உச்சகட்டப் பாராட்டு.ஆனால் காரல் மார்க்ஸ் இவற்றுக்கு நேர்மாறாகச் சொல்லுவார். ஒரு முதலாளித்துவச் சமூகத்தில் சட்டம் என்பது வசதியுடையவர்களின் பாதுகாப்பு அரண். மேட்டுக்குடியினருக்குக் கைகட்டிச் சேவகம் செய்வதுதான் சட்டத்தின் தலையாய பணி. நீதி, சட்டம், காவல், ஆட்சி என்று எல்லாமே ஒற்றை நோக்கமுடையவைதாம் என்பார் பேரறிஞர் மார்க்ஸ்.வசதியுடையவர்கள் கொலை செய்து விட்டால், காவல்துறையை வளைத்துக் கொள்ளலாம். அதற்கு அடுத்த கட்டமாகத் தேவைப்பட்டால், அரசு வழக்கறிஞரை வளைத்துக் கொள்ளலாம். கொலை செய்யப்பட்டவர் பெரிய ஆளாக இருந்து, பெரிய அளவில் கூச்சல் எழுமானால், அந்த வேகம் தணிகிறவரை காத்திருந்து ஆட்சியாளரையே வளைத்துக் கொள்ளலாம். நீதிபதிகளை வளைப்பவர்களும் உண்டு; ஆனால், நீதித்துறை மற்றவற்றின் அளவுக்கு மோசமாகப் போய்விடவில்லை.தா. கிருட்டிணன் ஓர் அமைச்சராய் இருந்தவர்; உள்கட்சி விவகாரத்தால் கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் மகன் கைது செய்யப்பட்டார். காவல்துறை முனைப்பாகச் செயல்பட்டது. கொலைத் திட்டம் தீட்டியவர்கள்; அதனை நடைமுறைப்படுத்திய கூலிக் கொலையாளிகள்; அந்தக் கொலை யாருடைய தூண்டுதலின் பேரில் அரங்கேற்றப்பட்டதோ, அவர்கள்! இப்படி யாருமே விட்டுவைக்கப்படவில்லை. குற்றப் பத்திரிகை தயாரானது; ஏறத்தாழ எண்பது சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டது; முன்னாள் முதலமைச்சர் இந்நாள் முதலமைச்சரானார். அவருடைய ஆட்சி எல்லைக்கு வெளியிலுள்ள நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இவையெல்லாம் ஆட்சியாளரின் அதிகாரத்துக்கு உள்பட்டதன்று நீதி என்று காட்டுவதற்காகத்தான்.வழக்கு அடுத்தடுத்த நாளில் துரிதகதியில் நடத்தப்பட்டது. ஏறத்தாழ எண்பது சாட்சிகளில் ஒரே ஒரு சாட்சி நீங்கலாக, மற்ற சாட்சிகள் 79 பேரும் பல்டி அடித்துவிட்டார்கள். பிறழ் சாட்சிகளாய் மாறியவர்களில் தா. கிருட்டிணன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உண்டு. இறந்தவர் இறந்து போய்விட்டார்; வாழ்கிறவர்கள் வாழ வேண்டுமே என்பது காலம் கற்பித்த ஒரு புதிய தத்துவம்.அரசுத் தரப்பு வழக்கறிஞர் வழக்கைத் தகுந்த சாட்சியங்களுடன் மெய்ப்பிக்கத் தவறி விட்டார் என்று அந்த ஆந்திர நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். கொலையாளிகள் என்று வரிசைப்படுத்தப்பட்ட பதினாறு, பதினேழு பேரும் ஒருவர் பாக்கி இல்லாமல் விடுதலை ஆகிவிட்டார்கள்.இவர்கள் கொலையாளிகள் இல்லை என்று சொல்வதோடு நீதிமன்றத்தின் வேலை முடிந்துவிட்டது. ஒருவேளை தா. கிருட்டிணன் தன்னைத்தானே வெட்டிக் கொண்டு செத்தாரா என்பதை ஆராய்வது நீதிமன்றத்தின் வேலையில்லை.நீதிதேவதை கண்ணைக் கட்டிக் கொண்டிருப்பது நியாயமானதுதானே! இந்தக் கொடுமைகளை எல்லாம் நீதிமன்றத்தில் நின்று கொண்டு நேருக்கு நேர் ஏன் பார்க்க வேண்டும்?நீதியையும் நிர்வாகத்தையும் பிரித்து விடுவதனாலேயே நீதி மேலோங்கி விட முடியுமா? அறத்தின் ஆட்சி நடைபெற்றபோது அரசன் தன்னைத்தானே தண்டித்துக் கொண்ட வரலாறுகள் உண்டு. சட்டத்தின் ஆட்சியில் பெருமைப்பட என்ன இருக்கிறது?காவல்துறைதானே புலன் விசாரணை செய்ய வேண்டும்; சாட்சியங்களைக் கண்டறிய வேண்டும். அரசுத் தரப்பு வழக்கறிஞர்தான் அவற்றை வைத்து வழக்கை முன்னின்று நடத்த வேண்டும்.இவர்களை எல்லாம் பதவியில் நியமிக்கவும், அரசின் விருப்பத்துக்கு மாறாக நடந்தால் அவர்களை இடமாற்றம் செய்து தூக்கி வீசவும் வல்லது அரசுதானே!ஆட்சியாளருக்கு அந்தக் குறிப்பிட்ட வழக்கில் சுயநோக்கம் எதுவும் இல்லை என்றால் ஒருவேளை நீதி பிழைத்துக் கொள்ளவும் கூடும்.இப்போதைய அமைச்சர் கோ.சி. மணிமீது மாற்றுக் கட்சி ஆட்சியில் ஊழல் வழக்குத் தொடுக்கப்பட்டது. சொந்தக் கட்சி ஆட்சிக்கு வந்ததும், அந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் மெய்ப்பிக்கத் தவறிவிட்டதுதான் காரணம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது!முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் வழக்கு அவர் ஆளுங்கட்சிக்கு மாறியவுடன் ஊற்றி மூடப்பட்டது. அரசு வழக்கறிஞர் மெய்ப்பிக்கத் தவறி விடுவது வாடிக்கைதானே!அதேபோல் முன்னாள் அமைச்சர் இந்திர குமரி ஆளுங்கட்சிக்கு மாறி ஊழல் வழக்கிலிருந்து விடுதலையாகி விட்டார். அனிதா ராதாகிருஷ்ணன் ஆளுங்கட்சிக்கு மாறியதற்கும் அதுதான் காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.இதிலே மிகப்பெரிய வியப்பு என்னவென்றால், இவர்களெல்லாம் விடுதலையானவுடன், "நீதி வென்றது' என்று வேறு சொல்லிக் கொண்டார்கள். நீதிதேவதை தன்னுடைய கண்ணை மறைக்கும் துணிக்குக் கூடுதலாக இன்னொரு முடிச்சு போட்டுக் கொண்டிருப்பாள்!மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் அந்த உரிமையாளர்மீது கொண்ட கோபம் காரணமாக அங்கே வேலைபார்க்கும் மூன்று பேரை உயிருடன் எரித்துக் கொன்று விட்டார்கள். காவல்துறை அதிகாரிகள் அந்தக் கொடுஞ்செயல் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் நிறைவேறுவதற்குப் பாதுகாப்பு வேறு வழங்கினார்கள்.அந்தப் பத்திரிகை உரிமையாளர் மத்திய அமைச்சர் என்பதால் அவர் குடியரசுத் தலைவரிடம் போகப் போவதாகச் சூளுரைத்தார். மறுநாள் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சர் பதவியின் மகிமை மூன்று உயிர்களைவிடக் கூடுதலானது என்பது அவருக்கு உணர்த்தப்பட்டது. அவருடைய கேபிள் நிறுவனத்துக்கு எதிராக அரசு கேபிள் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டது. அவ்வளவுதான்; இன்னும் பத்துப் பேரைத் தன்னுடைய செய்தி அலுவலகத்தில் காவு கொண்டாலும் தகும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். அதன்பிறகு அவர் வாயை மூடிக் கொண்டுவிட்டார்.ஆனால், இதிலே ஒரு பெரிய வியப்பு அந்த மூவர் எரிப்பு வழக்கும் முறைப்படி விசாரிக்கப்பட்டது. நம்முடைய காவல்துறை அரசுக்குக் கட்டுப்பட்டது என்று மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய புலனாய்வுத் துறை இந்திரலோகத்திலிருந்து இறங்கி வந்ததா? அதுவும் ஓர் அரசுக்குக் கீழேதானே இருக்கிறது.நாய்களில் வேறுபாடு இல்லை; வளர்ப்பவன் அரசனா, ஆண்டியா என்பதற்குத் தக அதன் பழக்கவழக்கங்கள் அமைகின்றன.ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் மூவரும் இணைந்து செயல்பட்டால்தான் நீதி நிலை பெற முடியும். ஆட்சியாளர்கள் தவறானவர்களாக இருந்தால், தவறான அதிகாரிகளே முன்னிலைப்படுத்தப்படுவார்கள். இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்துவிட்டால், நீதி தனித்திருந்து செய்யப்போவது என்ன?ஒரு கட்டடம் கட்டுவதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் அவற்றை நகராட்சியினரே இடித்து விடுவார்கள்.சென்னை தி.நகரில் ஒரு வணிக நிறுவனம் ஒரு சின்னஞ்சிறிய சந்தில் அனுமதிக்கப்பட்டதற்கு மேல் இரண்டு மாடி கூடுதலாகக் கட்டி, அக் கட்டடத்தில் தீப்பிடித்து, தீயணைப்பு வண்டி உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, அங்கு வேலை பார்ப்பவர் இறந்து, அதற்குப் பின்பு நீதிமன்றம் சட்டமீறல் பகுதிகளை இடிக்கச் சொல்லி ஆணையிட்டது.நம் வீட்டுக்கு முன்னால் மணல் கொட்டப்பட்டிருந்தால் நகர்மன்ற உறுப்பினரும், நகர்மன்ற அலுவலரும் காசு வாங்க வந்து விடுகிறபோது, இரண்டு மாடி ஊருக்கு நடுவில் விதிமுறை மீறிக் கட்டப்பட்டிருப்பது தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தெரியாமலா இருக்கும்?இதுபோன்ற செல்வச் சீமான்களின் விதி மீறிய கட்டடங்கள் சென்னை முழுவதும் விரவிக் கிடக்கின்றன. தீப்பிடித்த பிறகும், 2 பேர் கதிமோட்சம் அடைந்த பிறகும், நீதிமன்றம் குறுக்கிட்டு இடிக்கச் சொன்ன பிறகும்கூட, பிற விதி மீறிய கட்டடங்களை நீதிமன்றக் குறுக்கீட்டிலிருந்து காப்பதற்காக, நாம் தவமிருந்து பெற்ற அரசு 2007-க்கு முன்பு விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்களைக் காப்பதற்காக ஓர் அவசரச் சட்டம் பிறப்பித்துக் கொண்டிருக்கிறது. இனி நீதிமன்றம் குறுக்கிட முடியாது. எவ்வளவு அசிங்கமான முடிவுகள் வெளிப்படையாகவே எடுக்கப்படுகின்றன பாருங்கள்.கிழக்குக் கடற்கரையில் 500 மீட்டருக்குள் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது என்பது விதி. அது காற்றைத் தடுக்கும் என்பதனால் மட்டுமன்று; ஆழிப் பேரலை வந்து தாக்கினால் பேரழிவு ஏற்படும் என்பதுங்கூட! கண்ணுள்ளவர்களுக்கெல்லாம் கிழக்குக் கடற்கரை கான்கிரீட் காடுகளாகிவிட்டது தெரியாதா?உதகமண்டலத்தில் விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள்தாம் வெள்ளத்தை அதன் போக்கில் ஓடவிடாமல் தடுத்து, பெரிய நிலச்சரிவை உண்டாக்கி ஏராளமான ஏழைபாழைகள் இறந்து போனார்கள்!ஒவ்வொரு முறையும் இதுபோன்ற மனித அழிவுகள் நிகழும்போது, தொடர்புடைய அமைச்சர், அதிகாரிகள் ஆகியோர் நீதியின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டால் அறிவு வரும். ஆனால் இதற்கு முன்பு எவரைத் தண்டித்திருக்கிறது நீதி? இவர்களைத் தண்டிப்பதற்கு!விதி மீறிய கட்டடங்களிலிருந்து படுகொலைகள் வரை, அனைத்துமே அரசியலின் ஒரு பகுதி என்று சாதாரணமாக நினைப்பவர்கள் ஆட்சிக் கட்டிலில் இருக்கும்போது, நீதியும் நிர்வாகமும் பிரிந்திருந்தாலென்ன? சேர்ந்திருந்தாலென்ன? நிர்வாகம் அனுமதித்தால்தானே நீதி மூச்சுவிட முடிகிறது!சட்டத்தின் ஆட்சி என்பது என்ன? அரச குடும்பத்தில் பிறந்தவர்கள், அரசின் கையை நனைப்பவர்கள், அரசுக்கு ஆதரவாய்த் திகழ்கிறவர்கள் மட்டும் சட்டத்தை வளைத்துக் கொள்ளலாம் என்பது சட்டத்தின் ஆட்சி!அப்படியானால், சாமானியனுக்கு நீதி எப்படி, எப்போது கிடைக்கும்? சாமானியன் கையில் ஆட்சி, அதிகாரம் வந்துவிட்டால் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் பொய்த்துவிட்ட நிலையில், நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பதன் காரணம் புரிகிறது...!
கருத்துக்கள்

இன்னார்,இனியார் (வேண்டியவர், வேண்டாதவர்) என்ற பாகுபாடின்றி அறம் வழங்கும் முறை பழந்தமிழகத்தில இருந்தது; இப்பொழுது மடிந்து போனது. எனவேதான் மேற்குறித்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஒரு வழக்கில் போதிய ஆதாரமின்மையால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் அதற்குரிய தீர்ப்புரையிலேயே உரிய ஆதாரங்களளைத் தரவேண்டிய கடமையைச் செய்யத் தவறிய காவல்துறையினர், தக்க முறையில் வாதிடாத அரசு வழக்குரைஞர் ஆகியோருக்கும் தண்டனை வழங்க வழி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீதி நிலைக்க வழி பிறக்கும்.அது சரி! ஏன் பழ.கருப்பையா அவர்கள் பரத்தமை கொலை வழக்குக் குற்றவாளியான மடத்தலைவர் பற்றி ஒன்றும குறிப்பிடவில்லை. குறை கூறுவதிலும் நேர்மை வேண்டுமல்லவா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/3/2010 5:55:00 AM

கண்ணீர் வழிகிறது.

By பாலா
3/3/2010 4:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக