+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலூர் : ""தமிழகத்தில், ஏற்கனவே இருந்த காங்., அமைச்சர்களால் முடியாத தொழிற்சாலைகளை, மத்தியமைச்சராகி கொண்டு வந்துள்ளேன்,'' என மத்தியமைச்சர் மு.க.அழகிரி குறிப்பிட்டார்.
மதுரை மாவட்டம், அட்டப்பட்டியில் புதிய சமத்துவபுரம் திறப்பு விழா மற்றும் தும்பைபட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர்(பொறுப்பு) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார். சமத்துவபுரத்தை திறந்து மத்தியமைச்சர் மு.க.அழகிரி பேசியதாவது: இப்பகுதியில் பல தொழிற்சாலைகள் அமையவுள்ளன. ஏற்கனவே, மத்திய அமைச்சர்களாக காங்கிரசார் இருந்த போது கூட கொண்டு வராததை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நான், மத்தியமைச்சரானதும் இந்தோனேசியா சென்று, அங்குள்ளவர்களை தொழிற்சாலை துவங்க வருமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களும், முதல்வர் கருணாநிதியுடன் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி, அம்பலக்காரன்பட்டியில் டிராக்டர் தொழிற்சாலை 2,000 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்படவுள்ளது. இரண்டாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். மேலூரில், பல ஆண்டுகளாக மூடிக் கிடந்த நூற்பாலை திறக்க, நான் மத்திய அமைச்சரானதும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசியுள்ளேன். அங்கு கிரானைட் பாலீஷ் தொழிற்சாலை ஓராண்டிற்குள் வரவுள்ளது. ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
முதல்வரிடம் பேசியதன் பயனாக அண்ணா பல்கலை, மதுரையில் அமையவுள்ளது. மார்ச் 6ல் இடையப்பட்டியில் பிளாஸ்டிக் பொறியியல் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. மருத்துவ கம்பெனி விரைவில் வரபோகிறது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டை மாட்டுத்தாவணிக்கு மாற்ற பணிகள் நடக்கின்றன. இப்படி எண்ணற்ற சாதனைகளை ஆறு மாதங்களில் செய்துள்ளோம். அடுத்த பட்ஜெட்டிலும் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்படும். மதுரையில் மேலும் ஒரு பாலிடெக்னிக் வரவுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன், மத்தியமைச்சர் ஜெய்பால்ரெட்டி இரண்டாவது வைகை கூட்டுக் குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார். தற்போது, இப்பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் 296 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மதுரையில் மற்ற சில பகுதிகளையும் சேர்த்து, குடிநீர் கிடைக்கும் வகையில் 714 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க, துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.
ஸ்டாலின் பேச்சு: பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கியும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இவ்விழாவில், மூவாயிரம் குழுக்களுக்கு 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பல துறைகள் சார்பில் 42 கோடி ரூபாய் மதிப்பில் 12 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. மேலக்கோட்டையில் 1997ல் முதல் சமத்துவபுரத்தை கருணாநிதி திறந்தார். பிறகு, 2001 - 2006 வரை அ.தி.மு.க., ஆட்சியில் சமத்துவபுரங்கள் துவங்கப்படாததுடன், இருந்த சமத்துவபுரங்களையும் கண்டுகொள்ளவில்லை. கடந்த 2006ல் கருணாநிதி மீண்டும் முதல்வரானதும் 95 சமத்துவபுரங்கள் அமைக்க 16 கோடி ரூபாய் ஒதுக்கினார். அதன்படி, முதற்கட்டமாக 29 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவி குழுவினர் ஒன்றிரண்டு பேருக்கு மட்டும் இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு செல்ல மாட்டேன். அனைவருக்கும் வழங்கி விட்டு தான் செல்வேன். இதை சுமையாக கருதவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் இரண்டு கோடியே 11 லட்சத்து 689 சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் இந்தியன் வங்கி மூலம், மகளிர் குழுக்களுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 132 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இதில், தமிழகத்தில் மட்டும் 2,174 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தேசிய அளவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கியதில் 48 சதவீத கடன் தமிழகத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்கள், கடனை 99 சதவீதம் திருப்பி செலுத்துவதால், போட்டி போட்டு வங்கிகள் கடனை வழங்குகின்றன. அந்தளவுக்கு பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், யார் தயவையும் பொருட்படுத்தாமல் தனித்து நிற்கும் திறமையையும் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது. இன்னமும் வளர வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். விழாவில், 12 ஆயிரத்து 66 பேருக்கு 42 கோடியே ஒன்பது லட்சத்து 41 ஆயிரத்து 867 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை நன்றி கூறினார். மூர்த்தி எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக