சென்னை, மார்ச் 4: தாங்கள் இருவரும் அதிமுகவில் தொடர்வதாக, கோவில்பட்டி ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை அண்மையில் தனித்தனியே சந்தித்தனர். இதைத் தொடர்ந்து, திமுக பொதுக்குழுவில் இருவரும் பங்கேற்றனர்."ஒரு கட்சியின் எம்.எல்.ஏ.க்களாக இருந்து கொண்டு, மற்றொரு கட்சியின் பொதுக்குழுவில் கலந்து கொண்டதால் அவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் மனு அளித்திருந்தார்.இதுகுறித்து, மார்ச் 8}ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இரு எம்.எல்.ஏ.க்களுக்கும் பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.இதனிடையே, கோவில்பட்டி ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் ஆகிய இருவரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக சட்டப் பேரவைச் செயலரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.விளக்கம் அளிப்பு...:இந்த நிலையில், இரு எம்.எல்.ஏ.க்களும் பேரவைத் தலைவரிடம் வியாழக்கிழமை தங்களது விளக்கத்தை அளித்தனர்.இதுகுறித்து, செய்தியாளர்களுக்கு பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் அளித்த பேட்டி:""சட்டப் பேரவை அதிமுக கொறடா அளித்த மனு குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் 23}ம் தேதி ஆய்வு செய்யப்பட்டது. இரு எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. இப்போது, விளக்கம் அளித்துள்ளனர்.அதில், "தாங்கள் இன்னும் அதிமுகவில் தொடர்வதாகவும், தொகுதியில் உள்ள பிரச்னைகள், குறைபாடுகளைத் தெரிவிக்க அமைச்சர், முதல்வரைச் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், உட்கட்சி பூசல் காரணமாக தங்கள் மீது அதிமுகவினர் மனு அளித்துள்ளதாகக் கூறியுள்ளனர். கட்சியில் சேரும் எண்ணத்துடனோ அல்லது கட்சி மாறும் வகையிலோ திமுக பொதுக் குழுவில் பங்கேற்கவில்லை' எனத் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியுள்ள விளக்கம் எனது ஆய்வில் இருக்கிறது. அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். எனது முடிவுக்குப் பிறகு, புதிய சட்டப் பேரவையில் அவர்களுக்கு இடம் அளிக்கப்படும்'' என்று பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் தெரிவித்தார்.இதன்பின், செய்தியாளர்கள், ""பொதுவாக ஒரு கட்சியில் இருந்து கொண்டு மற்றொரு கட்சியின் பொதுக் குழுவில் பங்கேற்கலாமா?'' என்று கேள்விக்கு பதிலளித்த பேரவைத் தலைவர், ""உங்கள் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டதால் உங்களது கட்சியில் சேர்ந்து விட்டதாக அர்த்தம் ஆகி விடாதே'' என்றார்.
கருத்துக்கள்
திருமணத்தில் கலந்து கொள்வது வேறு; கட்சிப் பொதுக் குழுவில் கலந்து கொள்வது வேறு. தி.மு.க. ச.ம.உறுப்பினர்கள் மாற்றுக் கட்சிப் பொதுக் குழுவில் கலந்து கொண்டால் என்ன நடவடிக்கை எடுப்பார்களோ அதைத்தான் அதிமுக வும் எடுக்கிறது. இதனை ஆளும் கட்சி ஊக்கப்படுத்தவும் அதற்குச் சட்டமன்றப் பேரவைத்தலைவர் துணை நிற்கவும் கூடாது. பே.த. கூற்று கட்சி மாறிகளுக்குத் தனி இடம்கொடுக்கப் போவது போல் அமைந்துள்ளது. நடுநிலையுடன் நடந்து இருவரின் பதவிகளையும் பறிக்க வேண்டும். இல்லையேல் கட்சித்தாவல் தடைச்சட்டத்தைத் தமிழ்நாட்டில் இல்லாமல் ஆக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/5/2010 3:15:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/5/2010 3:15:00 AM