திங்கள், 1 மார்ச், 2010

செம்மொழி மாநாடு: மலிவு விலையில் நூல்கள் விற்கப்படுமா?



கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மலிவு விலையில் செம்மொழி இலக்கிய நூல்கள் விற்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய நிலையில், பல்வேறு துறைகளில் தமிழைப் புகுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அந்தந்தத் துறை தொடர்பான கருத்துகள், படைப்பாளிகளின் அறிவுக் களஞ்சியங்கள் புத்தக வடிவில் தமிழில் செம்மையாக வரும்போது மொழியானது வளர்ச்சியடைகிறது. இதன் மூலம் கடந்த கால வரலாற்று நிகழ்வுகள், ஒவ்வொரு காலகட்டங்களின் மொழி வளர்ச்சி, சமூகத்தின் மீதான படைப்பாளர்களின் சிந்தனைகளை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும். பல துறைகள் குறித்த நூல்களும், அறிஞர்களின் அறிவுக் களஞ்சியங்களும், தொழில் முன்னேற்ற வழிகாட்டி நூல்கள் என அனைத்தையும் ஓரிடத்தில் வாங்கிச் செல்ல வாய்ப்பாக இருக்குமிடம் புத்தகக் கண்காட்சிகள்தான். தமிழகத்தில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சிகளில் செம்மொழி இலக்கிய நூல்கள் இடம்பெறுவது மிகக் குறைவே. இதற்கு நூல்களின் கூடுதல் விலையும் ஒரு காரணம். சென்னையில் அண்மையில் நடைபெற்ற 33-வது புத்தகக் கண்காட்சியில்கூட தமிழக அரசு முயற்சி எடுத்தும், செம்மொழி இலக்கிய நூல்கள் குறைவாகவே இடம் பெற்றன. நூல்களின் விலை கூடுதலாகும்போது அவற்றை சாதாரண பள்ளி, கல்லூரி மாணவர்களால் வாங்கிப் படிக்க முடிவதில்லை எனக் கூறுவதில் உண்மை இருக்கிறது. செம்மொழியான தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் கோவையில் வரும் ஜூன் 23-27-ம் தேதிவரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டையொட்டி நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மூலம் கோவை நகரம் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. குடியிருப்பு வளாகங்கள், மாநாட்டு அரங்கங்கள், சாலைச் சீரமைப்புப் பணிகள், ரயில், விமான நிலையங்கள் சீரமைப்பு எனக் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீட்டில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மகிழ்ச்சிகரமாக இந்தப் பணிகளை வரவேற்போம். ஓர் உலகப் புகழ் பெற்ற மொழி பற்றிய மாநாடு என்கிறபோது, அந்த மொழியில் உருவான அடிப்படை நூல்களை அனைவரும் வாங்கிப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் தலையாய கடமைகளில் ஒன்று. இந்த நிலையில், மாநாட்டில் மலிவு விலையில் சங்க இலக்கிய பதினென் மேல்கணக்கு நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென் கீழ்கணக்கு நூல்களான திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, நாலாயிரத் திவ்ய பிரபந்தம், திரிகடுகம், ஆசாரம், திருக்கோவை உள்ளிட்ட நூல்களின் மொத்தத் தொகுப்பு மலிவு விலையில் கிடைக்குமாறு விற்பனை செய்தால் மாநாட்டில் பங்கேற்கவுள்ள ஆயிரக்கணக்கானோர் பயன்பெற வாய்ப்பாக இருக்கும். தமிழ் படித்துவிட்டு வேலை தேடும் மாணவர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் செம்மொழி மாநாட்டையொட்டி, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளில் இதையும் ஒரு பணியாகக் கருதி, ஒரு தொகையை ஒதுக்கி மலிவு விலை புத்தகக் கண்காட்சியை தமிழக அரசு நடத்த வேண்டும். இதன்மூலம் லட்சக்கணக்கானவர்களின் வீடுகளில் செம்மொழி இலக்கியங்களின் மணம் வீசும். இந்த நிலையை உருவாக்கினால்தான் செம்மொழி மாநாட்டின் முழுப் பயனும் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும். அதுமட்டுமல்ல, சமையல் குறிப்பு, சோதிடம், சுயமுன்னேற்ற நூல்கள், வாஸ்து போன்றவைகள் விற்கப்படுவது கட்டுப்படுத்தப்படவும் வேண்டும். இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டும் வகையில், முதல்வர் அண்மையில் எழுதிய செம்மொழி மாநாட்டுக் கவிதை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவரவும் ஏற்பாடாகியுள்ளது. அதில் வரும் இலக்கியச் செய்திகள் யாவும்கூட நூல் வடிவம் பெற்று அனைவரின் கைகளிலும் தவழ வேண்டும்.
கருத்துக்கள்

நல்ல கட்டுரை. வரவேற்கத்தக்க கருத்து. உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் ப்ல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித் துறை,பிற அமைப்புகளுக்கு நிதியுதவி நல்கி மலிவு விலையில் தரமான முறையில் தரமான நூல்கள் வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/1/2010 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக