திங்கள், 5 நவம்பர், 2018

தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் தேர்வாணையத்தை இழுத்துமூடுங்கள்! – மரு.இராமதாசு

அகரமுதல

 தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால்

தேர்வாணையத்தை இழுத்துமூடுங்கள்

– மரு.இராமதாசு

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில்  தமிழில் நடத்த முடியாது என்று த.ந.அ.ப.தேர்வாைணயம் அறிவித்துள்ளது. இரண்டாம் தொகுதித் தேர்வுகள் அடுத்தவாரம் இதே நாளில் தொடங்கவிருக்கும்  நிலையில்,  இந்த அறிவிப்பு பெரும்  அதிர்ச்சியளிக்கிறது. இரண்டாம் தொகுதித் தேர்வு எழுதும் 6.26 இலட்சம் பேரில் 4.80 இலட்சம் பேர் பொது அறிவு மற்றும் தமிழையும், 1.45 இலட்சம்பேர் பொது அறிவு மற்றும் ஆங்கிலத்தையும் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கான முதனிலைத் தேர்விலோ முதன்மைத் தேர்விலோ அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான வினாக்கள் தமிழில் கேட்கப்படாமல், ஆங்கிலத்தில்  மட்டும் கேட்கப்பட்டால் அது தமிழில் தேர்வெழுதுபவர்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும். தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படாததற்காகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்  தேர்வாணையம் கூறியுள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்பது மட்டுமின்றி, மிகவும் அபத்தமானதும் ஆகும்.
தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் மட்டும் வினாத்தாள் வழங்கப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறுவது இயல்பான ஒன்றாகத்  தெரியவில்லை. தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  செயலாளர் நந்தகுமார் கூடத் தமிழில் தேர்வெழுதி இ.ஆ.ப.(ஐஏஎசு அதிகாரி ஆனவர்தான். அவ்வாறு இருக்கும் போது மாநில மொழியில்  தேர்வெழுதுவதற்கான வினாத்தாள்களைத் தயாரிக்க முடியாதது அவமானம் ஆகும். தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் போட்டித்தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதற்குத் தமிழ்நாடு தேர்வாைணயம்(TNPSC) வெட்கப்பட வேண்டும். தமிழில் வினாத்தாள்களைத் தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தையே மூடிவிடலாம். இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படாவிட்டால் பாமக மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்  நடத்தப்படும். இதற்கான நாள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு  மரு.இராமதாசு அறிக்கை மூலம்தமிழர்களின் உணர்வுகளை எதிரொலித்துள்ளார்.

ஞாயிறு, 4 நவம்பர், 2018

சங்கத்தமிழ் நகரம் முசிறியே கேரளாவில் உள்ள ‘பட்டணம்’

அகரமுதல

சங்கத்தமிழ் நகரம் முசிறியே

கேரளாவில் உள்ள ‘பட்டணம்’

“சங்க இலக்கியங்களில் புகழப்படும் துறைமுக நகரம் முசிறி. அதுதான், தற்போது, கேரளாவில் உள்ள பட்டணம்,” என்கிறார், அங்கு அகழாய்வு செய்தவர், கேரளாவின், ‘பாமா’ தொல்லியல் கல்வி நிறுவன இயக்குநர், முனைவர் பி.செ.செரியன். அவர், ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:
உங்களைப்பற்றியும், உங்கள் அகழாய்வுபற்றியும் கூறுங்கள்?
நான், கேரளாவில் உள்ள, ‘பாமா’ என்ற, தொல்லியல் சார்ந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளேன். 2006இல், மத்தியத் தொல்லியல் துறையிடம், அகழாய்வு செய்வதற்கான இசைவு பெற்றேன். ஏற்கெனவே, 2004இல், நான் செய்த கள ஆய்வில், கொடுங்கலுார், பரனுார், பட்டணம் முதலான அமைதியான ஊர்களில், சங்கக் காலச் சான்றுகள் கிடைத்தன. அதனால்தான், பட்டணத்தில் அகழாய்வு செய்யத் தீர்மானித்தேன்.பட்டணத்தில், 2006 முதல், 2016 வரை, 10 முறை, அகழாய்வு செய்துள்ளேன்.
இந்தியப் பல்கலைகள் மட்டுமின்றி, ஆக்சுபோர்டு, உரோம் முதலான, உலகின் புகழ்பெற்ற பல்கலைகள்-அருங்காட்சியக வல்லுநர்களுடன் இணைந்து, அகழாய்வில் ஈடுபட்டேன்.
பட்டணத்துக்கு, நீங்கள் இவ்வளவு முதன்மை தரக் காரணம் என்ன?
உலகில் மிகவும் வளமான நாடுகளாக கருதப்பட்ட, உரோம்  முதலான அனைத்து நாடுகளுடன், வணிகத் தொடர்புடைய துறைமுக நகராக, முசிறி இருந்துள்ளது. இதற்குச், சங்க இலக்கியங்களிலும், உரோமானிய இலக்கியங்களிலும் சான்றுகள் உள்ளன. இது, இப்போதைய கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தின் மேற்குக் கடற்கரை, பெரியாற்றின் டெல்டா பகுதியில், பரவூருக்கு அருகே, 2 புதுக்கல் தொலைவில் உள்ளது.
சரி, அதை மெய்ப்பிக்கும் வகையில், நீங்கள் கண்டெடுத்த தொல்பொருட்கள் எவை?
உரோமானியர்கள், கிரேக்கர்கள், பழமது(ஒயின்) போன்ற மதுபானங்களைக் கெடாமல் சேமித்து வைக்க, ‘ஆம்போரா’ என்ற, மண் குடுவைகளைப் பயன்படுத்தினர். அந்தக் குடுவைகள், பட்டணம் பகுதியில் அதிகம் கிடைத்துள்ளன.
பெரிய மனிதர்களின் சமூகத் தகுதியை வெளிப்படுத்த, அழகு சாதனமாக வைக்கப்பட்ட மண்பாண்டங்கள், நறுமணப்புகை பரப்பும் சாடிகளும் கிடைத்தன. மேலும், சீன மட்பாண்ட(செராமிக்கு)  வகைப் பாத்திரங்கள், தாவர விலங்கியல் பரவலுக்கான மரபுச்சான்றுகள், சங்கக்கால சேர, உரோமானிய நாணயங்கள், பானை ஓடுகள்(‘டெர்ரா சிகிலேட்டா’), பலவித மணிகள் எனப், பல ஆயிரம் தொல்பொருட்கள் கிடைத்து உள்ளன. கீழடியில் கிடைத்தது போல், செங்கல் அமைப்புடன் கூடிய கட்டடங்கள், கூரை ஓடுகள், செம்பு, தந்தம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் கிடைத்துள்ளன.
பட்டணத்தில் கிடைத்த, பொருட்களின் கால அளவைக் கணித்தீர்களா?
ஆம். அவை, கி.மு., 300 முதல் 500 வரை இருக்கலாம் என, கணிக்கப்பட்டுள்ளது. அவை, அனைத்துக்குமான தரவுகளை, சங்கக் காலத் தமிழ் இலக்கியங்களில் மட்டுமே, காண முடிகிறது.
கிடைத்த தொல்பொருட்களில் இருந்து, நீங்கள் கருதும் கலை, பண்பாட்டுஅடையாளம் குறித்து?
 தமிழர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன், தனித்த  கலை, பண்பாட்டு அடையாளத்துடன் வாழ்ந்துள்ளனர். அங்குப், பெண்களுக்குப் பெரும் சமூகப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஐரோப்பிய நாடுகள், மேற்காசிய நாடுகள், சிப்ரால்டர், சுபெயின், ஆப்பிரிக்கா முதலான பல்வேறு பகுதிகளுடன் வணிகம் செய்துள்ளனர். பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியாகி உள்ளன. இதற்கான சான்றுகள், எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. குறிப்பாகத், தென் சீனப் பகுதியான, எப்பூரில் நடத்திய அகழாய்வில், பட்டணத்தில் கிடைத்தது போன்ற பொருட்கள் அதிகம் கிடைத்துள்ளன. எகிப்தின் கூம்பறை (பிரமிடு) உள்ள இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், 7 பாரம் (டன் )எடையுள்ள, தமிழகத்தின் குறுமிளகு, மண் பாத்திரம் ஒன்றில் கிடைத்தது. அதேபோல, தேக்கு, தேங்காய் சிரட்டை, பருத்தி பொருட்கள் முதலானவையும் கிடைத்தன. பட்டணத்தில், மிகவும் நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக, கழிப்பறைகள் கட்டப்பட்டு, மூன்று குடுவைகள் போன்ற பகுதிகளுக்குப்பின், பூமியின் மேற்பரப்பிற்கு கெடுதல் ஏற்படாத வகையில் கழிவுகளை வெளியேற்றி உள்ளனர். ‘அமலன்’ எனப், பிராமி எழுத்தில், குறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தது. அது, சமணர் அல்லது புத்த மதத்தைச் சார்ந்தவரின் பெயராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மற்றபடி, சமய, மத அடையாளம் ஏதும் அங்கு கிடைக்கவில்லை. இதனால், தமிழர்கள், புத்த மதப்பரவலுக்கு முன், வளமான பண்பாட்டுடன் வாழ்ந்துள்ளது தெரிகிறது.
உங்களின் ஆய்வு முடிவுகளால், நீங்கள் சொல்ல விரும்புவது?
பண்டைய தமிழகம் என்பது, தற்போதைய தமிழகம் மட்டுமல்ல. ஆந்திரா, கருநாடகாவின் தென்பகுதி, புதுச்சேரி, கேரளா மற்றும் தற்போதைய தமிழகத்தை உள்ளடக்கி இருந்துள்ளது. தற்போது, தமிழகத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில், தங்களின் முன்னோர்கள் பற்றிய புரிதலும், வரலாற்று அணுகுமுறையும் இல்லை. அனைவரும் அண்ணன், தம்பிகள் என்பதைத்தான், இந்த மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கிடைக்கும், தொல்லியல் சான்றுகளின் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. தென் மாநிலங்களின் வாழ்வியல் சொல்லும் வளமான சான்றுகளாகச் சங்கக் கால இலக்கியங்கள் உள்ளன.
தென் மாநில முதல்வர்கள் இணைந்து, தொல்லியல் ஆய்வுகளை நடத்த வேண்டும். ஒருங்கிணைந்த முடிவுகளைத், திறந்த மனத்துடன் பதிவு செய்ய வேண்டும். அது, தென் மாநிலங்களின் தனி அடையாளத்தைக் காட்டுவதாக இருக்கும். மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும், சங்கக்காலச் சான்றுகளுடன் ஒப்பீட்டாய்வுக்கும் முயல வேண்டும்.
ஒப்பீட்டு அகழாய்வு செய்ய, நீங்கள் பரிந்துரைக்கும் இடங்கள்?
 தென் சீனாவின் குவான்சான், எப்பூ, தெற்கு மலாய் தீபகருப்பத்தின் காவோ சாம் காகோ, ஓமனின் கோர் ரோரி, இலங்கையின் மந்தை, அனுராதாபுரம், இந்தியாவின் தம்பரலிப்டி, அரிக்கமேடு, காவேரிப்பட்டிணம், பரிகாசா முதலான 60க்கும் மேற்பட்ட இடங்களின் அகழாய்வு முடிவுகளை, ஒப்பீட்டாய்வு செய்ய வேண்டும். அதைக் கேரளா, ஆந்திரா, கருநாடக மாநிலப் பாடப்புத்தகங்களிலும் சேர்க்க வேண்டும். அதுதான், நதிநீர் முதலான சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.
– நமது  செய்தியாளர், தினமலர், 04.11.2018

இதையும் காண்க: https://www.sahapedia.org/interview-pj-cherian

சனி, 3 நவம்பர், 2018

குவிகம் இல்லம் – குறும்படம் திரையிடலும் அளவலாவலும்


அகரமுதல

ஐப்பசி 18, 2049 – ஞாயிறு – 4.11.2018

மாலை 3.30 மணி


குவிகம் இல்லம் -குறும்படம் திரையிடலும்

அளவலாவலும்

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை,

தியாகராயர்நகர், சென்னை 600 017

வியாழன், 1 நவம்பர், 2018

புதுமையான முறையில் கவிஞர் குடியிருப்பில் வெளியிடப்பட்ட குறும்பா நூல்

அகரமுதல

புதுமையான முறையில்

கவிஞர் குடியிருப்பில் வெளியிடப்பட்ட குறும்பா நூல்

      கவிஞர்  சென்சி எழுதிய ‘மகரந்தத் துணுக்குகள்’ குறும்பா (ஐக்கூ கவிதை) நூல் வெளியீட்டு விழா, நூலாசிரியர் தங்கியிருக்கும் சென்னை இராயப்பேட்டை கவுடியா மடம் சாலையிலுள்ள  தலைமை மாளிகை (சுப்ரீம் மேன்சன்) தரைதளத்தில்  புதுமையான முறையில் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமில்லாமல், கவிதை நூலை அச்சிட்ட கேபிடல் அச்சக ஊழியர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
         இவ்விழாவிற்குத் தலைமையேற்று, கவிதை நூலினைப் பண்ணைத் தமிழ்ச் சங்க அமைப்பாளர் கவிஞர் துரை.வசந்தராசன் வெளியிட்டார்.
 கவிஞர் மு.முருகேசு பெற்றுக்கொண்டார். கவிதை நூலைத் திறனாய்வு செய்து கவிஞர் மு.முருகேசு பேசும்போது, “தமிழ்க் கவிதையில் இன்றைக்குச் சொல் புதிது, பொருள் புதிது என எழுதும் இளைய கவிஞர்கள் பட்டாளம் கிளம்பியுள்ளது. மரபுக் கவிதை, புதுக்கவிதை எழுதிய கவிஞர்கள் பலரும் இன்றைக்கு க் குறும்பா(ஐக்கூ கவிதைகள்) எழுதுவதிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். கவிதையின் கருப்பொருளும் சமூக அக்கறையுமே ஒரு கவிதையின் வெற்றியை தீர்மானிக்கும். கவிதையின் புறக்காரணியான வடிவம் ஒரு பொருட்டல்ல.
          தமிழில்  குறும்பா(ஐக்கூ ) மாக்கவி பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றைக்கு 530-க்கும் மேற்பட்ட பலவகை  குறும்பா(ஐக்கூ) நூல்கள் வெளிவந்துள்ளன. முன்னரே தனது சிறுகதை நூலின் வழியே அறிமுகமாகியுள்ள கவிஞர் சென்சியின் கவிதையாற்றலுக்கு இந்தக் குறும்பா(ஐக்கூ) நூல் சான்றாகும்.
தன் மனத்தைத் தொட்ட எந்தவொரு சமூக நிகழ்வையும் குறைந்த சொற்களில் செறிவான காட்சிக் கவிதைகளாகப் படைத்துள்ளார் சென்சி. இந்தக் கவிதைகளிலுள்ள செறிவும் காட்சியழகும் வாசிப்பாளனை நிச்சயம் ஈர்க்கும். பக்கம் பக்கமாக வெறும்  சொல் அலங்காரத்தோடு எழுதப்பட்டு வந்த தமிழ்க் கவிதைகளுக்குச் செறிவையும் அழுத்தத்தையும் தந்த பெருமை குறும்பா(ஐக்கூ) கவிதைகளைச் சாரும். கவிஞர் சென்சி, தனது சமூக அக்கறையைச் செறிவான மொழியில் சுருக்கென ஐக்கூவாகப் படைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.
  கவிஞர்கள் பிரியம், உமா சுப்பிரமணியன், கோவை நாவரசன், முருகு பாண்டியன், மேன்மை இதழின் ஆசிரியர் மு.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிஞர் சென்சி ஏற்புரையாற்றினார்.
கவிஞரின் உடன்பிறந்தார் கோவிந்தராசு நன்றி கூறினார்.

அரிக்கேன் வெட்சு அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா

அரிக்கேன் வெட்சு அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா

“தொண்டு மனப்பான்மை இருந்தால்

புற்றுநோயையும் எதிர்த்துப்போராடி வாழமுடியும்!’’

    சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் (1988) ஒன்று சேர்ந்து உருவாக்கி இருக்கும் தொண்டு நிறுவனம் அரிக்கேன் வெட்சு என்ற நிறுவனம். இதன் மூன்றாவது ஆண்டு விழா ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை, 27-10-2018 அன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன், பல்கலைக்கழகப் பதிவாளர்  தென்சிங்கு ஞானராசுஆகியோருடன் கவிஞர் அ.வெண்ணிலா, கில்ட் ஆப் சர்வீசு அமைப்பின் இணைச்செயலாளர் மாயா(நாயர்) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
   தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, புதுதில்லி  முதலான இடங்களில் கடந்த மூன்றாண்டுகளில் 26 நலப்பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது. கடலூரில் வெள்ளத் துயர் துடைப்பு, ஒக்கி புயல் மறுவாழ்வு,  அண்மையில் கேரள வெள்ள மறுவாழ்வுப்பணிகள் ஆகியவையும் இந்தப் பணிகளில் அடங்கும். இன்னும் அதிகமான நலப்பணிகளைச் செய்ய தேவையான நிதிகளைத் திரட்டி வருவதாக இந்த அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்வில் தெரிவித்தனர்.
    நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் அ. வெண்ணிலா, “தொண்டு என்பது கையில் இருப்பதைப் பிறருக்குக் கொடுப்பது மட்டுமல்ல, தங்களைப் பிறருக்காக ஒப்படைத்துக்கொள்வதும் ஆகும். காந்தி, பெரியார், சுபாசு சந்திரபோசு, அன்னை தெரசா போன்றோரின்  தொண்டு மனப்பான்மையை அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மையின் தொண்டு மனப்பான்மைதான் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளுக்கே வழிகாட்டியாக அமைந்தது.” என்றார். அத்துடன், “பல அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்துதரப்பட்டுள்ளது. ஆனால் பல பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லாததால் அவை மூடப்பட்டுள்ளன. எனவே பல்வேறு தொண்டுப்பணிகளை மேற்கொள்ளும் அரிக்கேன் வெட்சு அமைப்பினர் அரசுப்பள்ளிகளில் முடிந்த அளவுக்கு நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியையும் மேற்கொள்ளவேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.
      “தமிழ் மக்களுக்கும் விலங்குகளுக்குமான உறவு சங்கக்காலத்தில் இருந்தே பதிவாகி உள்ளது. கிபி ஏழாம் நூற்றாண்டில் சாத்தனூர் அருகே நிறுவப்பட்ட ஒரு நடுகல்லில் ஒரு வீரனின் உருவமும் அவனுக்கு அருகே ஒரு வேட்டை நாயின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கூடிய கல்வெட்டில் கள்வர்களுடன் மோதி இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு அந்த வீரன் பெயரைக் குறிப்பிடாமல் கோவன் என்று நாயின் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். அந்த அளவுக்கு நேசிக்கப்பட்ட விலங்குகளுக்குத் தொண்டு செய்யும் கால்நடைமருத்துவர்களாகிய நீங்கள் நற்பேற்றாளர்கள்” என்றார் வெண்ணிலா.
      நிகழ்ச்சியில அடுத்ததாக வாழ்த்திப் பேசிய மாயா(நாயர்) மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காகப் பள்ளி நடத்தும் தன் தொண்டுப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார். “இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தொடக்கத்தில் பாடம் எடுத்தேன். அப்போது நாற்காலியில் அமராமல் அக்குழந்தைகளுக்குச்  சமமாக மனைக்கட்டையில் அமர்ந்து சொல்லித்தந்தேன். இப்போது  நல்வாய்ப்பாக இளம்பிள்ளை வாதப் பாதிப்பு குறைந்துவிட்டது. ஆனால் கைகால் இழந்தவர்கள், தசை, எலும்பு பலவீனம் கொண்ட குழந்தைகள் எங்கள் பள்ளியில் படித்துவருகின்றனர். அவர்களுக்குத் தொண்டாற்றுவதில் என் முகம் மலர்கிறது. நான் கடந்த பத்து ஆண்டுகளாகப் புற்றுநோயை எதிர்கொண்டு வாழ்ந்துவருகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இனிப் பயனில்லை என்று மருத்துவர்கள் கைவிட்டனர். ஆனால் இதோ உங்கள் முன்பு நலமாக நிற்கிறேன். குழந்தைகளுக்கான தொண்டில் மனம் நிரம்புவதால்தான் புற்றுநோயை எதிர்த்துப் போராடமுடிகிறது” என்றவர் தொடர்ந்து விரிவாக நலப்பணிகளைச் செய்யுமாறு அமைப்பினரைக் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் மருத்துவர் ஏ.கே. செந்தில்குமார் வரவேற்புரை வழங்க, இறுதியில் மருத்துவர் நிசா நன்றியுரை வழங்கினார்.
 சிறப்பாகப் பங்காற்றிய உறுப்பினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

புதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான புலமைப்பரிசில் விருது

அகரமுதல


புதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான

புலமைப்பரிசில் விருது

தமிழ் இனத்தின் புதிய நம்பிக்கை இராகினி. அவரது ஆசிரியர்களுக்குப்
புலமைப்பரிசில் புதிய வெளிச்ச நிதி  நூறாயிரம் உரூபாய்!   
அண்மையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்விற்கான பெறுபேறுகள் வெளியாகின. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாணவி இராகினிதேசிய நிலையில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் தேர்வில் 169 புள்ளிகளைப் பெற்று  தேர்ச்சியடைந்துள்ளார்.
இவர் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் தன் தாய்,  படையினரின் குண்டுதாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர்த் தன் ஒரு கையையும் இனஅழிப்புப்போரில் பறிகொடுத்த குழந்தையாவார் .
விழ விழ எழுந்துவரும் தமிழ் இனத்தின் இன்னுமொரு சான்றாக மக்கள் மனங்களிலும் வரலாற்றின் பக்கங்களிலும் இடம் பிடித்திருக்கின்றார்.
தனியார் வகுப்புக்களுக்குச் செல்ல வசதி இல்லாதிருந்தபோதும் தனது இவ்வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த பாடசாலை ஆசிரியர்களான சிவகரன், துவாரகா ஆகிய இருவருக்கும் பெருநன்றி கூறுவதைக் காணொளியில் காண்கின்றோம். மேலும் தான் அவர்கள் போன்று ஆசிரியராக வருவேன் என்றும் கூறுகின்றார்
கடந்த மூன்று வருடங்களாக நாம் எடுத்துக்கொண்ட புதிய வெளிச்சச் செயற்பாடுகளில் ‘ஆசிரியர்களை வளப்படுத்தல்‘ செயல்திட்டத்தின் தொடர் நிகழ்வாக இந்த ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டிற்குமான ‘நல் ஆசிரியர் விருதினை’ அறிவிக்க இருக்கின்றோம்..
நல் ஆசிரியர் விருதிற்குத் தகுதியான ஆசிரியரை மாணவர்களின் தெரிவில் இருந்தே தெரிந்தெடுக்கக்கூடிய ஒழுங்குமுறையைச் செயற்பாட்டிற்குக்  கொண்டுவருகின்றோம்.
இந்த ஆசிரியர் விருது நிதிக்கு முதல்கட்டமாக 2 பேராயிரம்(மில்லியன்) இலங்கை உரூபா நிதியை நான் வழங்குகின்றேன்  இந்நிதி வருடத்திற்கு நான்கு இலட்சம் வீதம் ஐந்து வருடங்களுக்குத் தொடர்ச்சியாக வழங்குகின்றேன் . மேலும் நண்பர்கள் இத் திட்டத்துக்கு உதவும் பொருட்டுஆசிரியர்களுக்குப் புலமைப்பரிசில் திட்டம் மேலும் அதிகரிக்கப்படும் .
எனது தந்தையும் ஆசிரியர் அவரது விடா முயற்சியான ஆசிரியப் பணியையும் அவரது மாணவர்கள் அறிவார்கள். வட மாகாணக் கல்வி அமைச்சரின் செயலாளராக இருக்கும் அவர் தன்னுடைய 50 வருட ஆசிரியப்பணியில் இருந்து இந்தவருடம் தனது 70 வயதில் ஓவ்வுபெற உள்ளார்.
அவரின் ஆதரவுடனும் அறிவுரைக்கிணங்கவும் இந்த “நல் ஆசிரியர் விருதினை” அறிமுகப்படுத்தி இதன் முதற்கட்டமாக விழ விழ எழும் இனத்தின் வரலாற்றுச் சான்றாகத் தடம் பதித்திருக்கும் வன்னி மண்ணின் மாணவி இராகினியின் ஆசிரியர்கள் இருவருக்கும் ஓர் இலட்சம் உரூபாக்களை வழங்குகின்றோம்.
கடந்த காலப் புதிய வெளிச்சச் செயற்பாடுகள்
1) ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை
2) இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை
3) இயற்கை விவசாய பயிற்சிப் பட்டறை
உலக ஆசிரியர் நாள் வாழ்த்துகள்
#புதிய வெளிச்சம்
நவசீவன் அனந்தராசு
4162728543
வணிகத் தொடர்பிற்கு : www.Biztha.com
(படங்களை அழுத்தின் பெரிய அளவில் காணலாம்.)

புதன், 31 அக்டோபர், 2018

அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கம் தொடக்க விழா

அகரமுதல

அனைத்திந்திய

சிறுவர் எழுத்தாளர் சங்கம்  தொடக்க விழா

 அடையாறு, காந்தி நகர் அரசு நூலக வாசகர் வட்டத்தில் அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத் தொடக்க விழாவும் சிறுவர் இதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றன.
       இவ்விழாவிற்கு மூத்த இதழாளர் தீபம் எசு.திருமலை தலைமையேற்றார்.
    கவிஞர் இராய.செல்லப்பா அனைவரையும் வரவேற்றார். அடையாறு நூலகர் சித்திரா, ஓய்வுபெற்ற நூலகரும் எழுத்தாளருமான ஆலந்தூர் கோ.மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
       அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தின் நோக்கம் குறித்தும் சிறுவர் இதழ்களின் சமூகத் தேவை குறித்தும் எழுத்தாளரும் நூலக வாசகர் வட்டத் தலைவருமான வையவன் கருத்துரை வழங்கினார். குழந்தை எழுத்தாளர் அழ.வள்ளியப்பாவின் புதல்வர் அழகப்பன், அனைத்திந்திய சிறுவர் எழுத்தாளர் சங்கத்தைத் தொடக்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.
      ‘இதயத் தும்பி’ சிறுவர் இதழை கவிஞர் மு.முருகேசு வெளியிட, ஆதித்தியா வித்யாமந்திர் பள்ளித் தாளாளர் பஞ்சமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
   பின்னர் நடைபெற்ற ‘சிறுவர் உலகமும் கவிதையும்’ எனும் தலைப்பிலான கவியரங்கில் கவிஞர் மு.முருகேசு தலைமையில், கவிஞர்கள் பாலக்கிருட்டிணன் வண்ணமுத்து, மல்லிகை தாசன், துரை.நந்தகுமார், வானவன், சென்சி, இரா.நாகராசன் ஆகியோர் கவிதை படைத்தனர்.
      கவிஞர் இராய.செல்லப்பாவின் கவிதையை அவரது மகள் அருச்சனா, பேரன் கந்தா செய், பேத்தி சம்பிரதா ஆகியோர் பாடலாகப் பாடினர்.
      குமாரராசத முத்தையா அரசு மேனிலைப்பள்ளி, பள்ளிக்கரணை ஆதித்தியா வித்யாமந்திர் பள்ளி மாணவ- மாணவிகளின் பாடல், உரையரங்கம் நடைபெற்றன.
     விழாவில், குழந்தை எழுத்தாளர் காந்தலெட்சுமி சந்திரமெளலி, புதுகை இராசேந்திரன், கு.இராமச்சந்திரன் முதலான ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
     நிறைவாகக், கவிஞர் குடந்தை பாலி நன்றி கூறினார்.