25 December 2023 அகரமுதல
(சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொகுப்பு)
சட்டச்சொற்கள் விளக்கம் 81-85
81. Abetment by aid | தூண்டல் உதவி குற்ற உடந்தை உதவி – குற்றவாளி, குற்றம் புரிவதற்கு வேண்டுமென்றே உதவி, தூண்டுதலாக இருப்பது. குற்றம் புரிய அல்லது குற்றச் செய்கையை எளிமையாக்கத் தூண்டுநர் உதவுகையை இது குறிக்கிறது. குற்றவாளிக்கு உதவும் எண்ணம் இருப்பதே முதன்மையானது. தூண்டுதல் என்பது, குற்றவாளி குற்றத்தைச் செய்யும்போது, குற்றம் புரிய ஏவுதல் அல்லது சொல்லிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல் அல்லது வழிகாட்டுதல் என்பன அடிப்படைப் பொருள்களாகும். குற்றவாளி ஒரு குற்றத்தைச் செய்யும்போது அவருக்கு உதவுவதையும் இது குறிக்கும். இந்தியத் தண்டிப்புச்சட்டம் பிரிவு 107(IPC Section 107)குற்ற உடந்தை பற்றி உரைக்கிறது. |
82. Abetment by conspiracy | சதி உடந்தை குற்றச் சதி வாயிலான உடந்தை ஒரு குற்றச் செயல் நடைபெறுவதற்கு அதற்கான சதியில் கருத்துரை வழங்கியோ அக்குற்றச் செயலுக்குரிய உதவுநராக இருந்தோ உடந்தையாயிருத்தல். Cōnspīrātiō என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இரட்டிப்புச்சதி. |
83. Abetment by defamation | அவதூறு வாயிலாக உடந்தையாக இருத்தல் இணையத் தளங்களில் சொற்போருக்கு இடந்தரும் கருத்துகளை எழுதுபவர்கள் மீது,கடும் நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், இ.த.ச. பிரிவுகள் 499-502 அவதூறு தொடர்பானவை; பேச்சு உரிமை, கருத்துரிமை,தன்னுரிமையான சிந்தனை ஆகியற்றிற்கு எதிராக இப்பிரிவுகள் உள்ளனவாகக் கூறி இவற்றை நீக்க வேண்டும் என்ற கருத்து பரவி வருகிறது. |
84. Abetment by instigation | தூண்டுதல் வாயிலாக உடந்தையாயிருத்தல் இ.த.ச.107 இன்கீழ்க் குற்றத்தைச் செய்வதில், மறைமுகமாகப் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதன்படிக் குற்றச் செயலைச் செய்யத் தூண்டுதலாக இருத்தல், சதி செய்தல், உடந்தையாக இருத்தல் முதலியன தண்டனைக்குரிய குற்றச் செயலாகிறது. |
85. Abetment of a thing | ஒன்றைச் செய்யத் தூண்டுதல் ஒரு குற்றச் செயலைச் செய்யத் தூண்டுதல். ஒருவர் அல்லது ஒருவருக்கு மேற்பட்டவர்களுடன் சேர்ந்து சதி செய்து சட்டச்செயலை விடுத்தல் அல்லது சட்ட முரண் செயலைச் செய்தல். ஒன்றைவேண்டுமென்றே சித்திரிப்பதன் மூலம் அல்லது அவர் வெளிப்படுத்த வேண்டிய ஒரு பொருளை மறைப்பதன் மூலம் அல்லது குற்றச் செயல் ஒன்றைச் செய்விப்பதன் அல்லது அடைவதன் மூலம் அல்லது செய்யவோ அடையவோ முயல்வதன் மூலம் குற்ற உடந்தையாளர் ஆகிறார். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக