(தோழர் தியாகு எழுதுகிறார் 242 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1/2 – தொடர்ச்சி)

தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2

இந்துத்துவ ஆற்றல்களோடு கூடிக் குலாவி ஈழத்துக்கு ஏதாவது(?) செய்ய முடியும் என்ற கருத்தைப் பரப்பி வரும் காசி ஆனந்தனைக் காவி ஆனந்தன் என்றே தமிழீழ ஆதரவு முற்போக்காளர்கள் கேலி செய்து வருகின்றனர். அவரும் அது பற்றிக் கவலை இல்லை, நான் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று கூறி விட்டார். இந்துத்துவ ஆளும் கும்பலை நயந்து கொள்ளும் பொருட்டு அவரும், அவரைப் போலவே காந்தளகம் சச்சிதானந்தன் போன்றவர்களும் இசுலாமிய வெறுப்பைக் கக்கி வருகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளையும் சேர்த்து அகண்ட பாரதம் அமைப்பது ஆர்எசுஎசு-பாசக திட்டம். இந்தியாவில் போலவே இலங்கை, மியான்மர் போன்ற அண்டை நாடுகளிலும் அது இசுலாமியரை நசுக்கத் திட்டமிடுகிறது. அதற்குக் காசி ஆனந்தன் போன்றவர்களுக்கு ஈழ’ஆசை காட்டி இந்துத் தமிழர்களின் ஆதரவைத் திரட்ட முயல்கிறது. பாசக ஆதரவோடு தமிழீழம் அமையும் எனக் கொண்டாலும் அது காவித் தமிழீழமாகவே இருக்கும். இந்தப் பின்னணியில்தான் நான் சொன்னேன்: தமிழீழம் மலரும். அது காவித் தமிழீழமாக இருக்காது, சிவப்புத் தமிழீழமாகவே இருக்கும்.

முள்ளிவாய்க்கால் சுடரேந்தும் அந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை என்ன பேசினார் தெரியுமா? 2009இல் நரேந்திர மோதி பிரதமராக இருந்திருந்தால் இது (முள்ளிவாய்க்கால் கொடுமை) நிகழ்ந்திருக்காது.

மோதி அப்போது இந்தியத் தலைமையமைச்சராக இல்லை. ஆனால் குசாராத் முதலமைச்சராக இருந்தார். முதலமைச்சராக அவர் முள்ளிவாய்க்கால் இனவழிப்பைக் கண்டித்து அறிக்கை விட்டாரா?

அவர் சார்ந்த பாரதிய சனதா கட்சி முள்ளிவாய்க்கால் இனக்கொலையைக் கண்டித்ததா? அப்போதைய காங்கிரசு அரசு சிறிலங்காவின் சிங்கள அரசுக்கு ஆய்தங்களும் ஆதரவும் வழங்கியதை எதிர்க்கட்சியான பாசக கண்டித்ததா?

2009 தொடங்கி இன்று வரை ஐநா மனிதவுரிமைப் பேரவையில் இந்திய அரசு கடைப்பிடிக்கும் ஏமாற்று அணுகுமுறையில் தமிழ் மக்களின் ஈடுசெய் நீதிக் கோரிக்கையை மறுக்கும் அணுகுமுறையில் மன்மோகன் சிங்குக்கும் நரேந்திர மோதிக்கும் என்ன வேறுபாடு?

தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, பொதுவாக்கெடுப்பு ஆகிய பொதுவான தமிழர் கோரிக்கைகளை மறுப்பதில் காங்கிரசுக்கும் பாசக-வுக்கும் என்ன வேறுபாடு? 13ஆம் திருத்தச் சட்டம் என்னும் கவைக்குதவாத திட்டத்தைத் தமிழர்கள் மீது திணிக்க முற்படுவதில் முந்தைய அரசுக்கும் இன்றைய அரசுக்கும் என்ன வேறுபாடு?

2013ஆம் ஆண்டு அட்டோபரில் கொழும்பில் நடைபெறவிருந்த பொதுநலவாய (காமன்வெல்த்) உச்சி மாநாட்டுக்கு இந்தியத் தலைமையமைச்சர் செல்லக்கூடாது எனக் கோரி காலவரையற்ற பட்டினிப் போர் தொடுத்தேன். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் எமது போராட்டத்தை ஆதரித்த போது கொழும்பு மாநாட்டை மன்மோகன் சிங்கு புறக்கணிக்கக் கூடாது என்று அறிக்கை விட்டவர் பாசக அனைத்திந்தியத் தலைவர் இராசுநாத்துசிங்கு.

ஒரு கேள்விக்கு அண்ணாமலை விடை சொல்லட்டும்: 2009 முள்ளிவாய்க்காலில் நடந்ததை மோதியால் தடுத்திருக்க முடியுமா? என்ற இறந்த காலம் தொடர்பான வினா கிடக்கட்டும். அன்று நடந்தது இனக்கொலைதான் என்பதை இப்போதாவது மோதியும் அண்ணாமலையும் அறிந்தேற்பார்களா? இன்றைய பன்னாட்டரங்கில் ஓர் அரசு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை ஆதரிப்பதாக இருந்தால் அதற்கான முதல் படியே தமிழினவழிப்பை அறிந்தேற்பதுதான், அங்கீகரிப்பதுதான்.

ஆனால் அண்ணாமலை அந்தக் கூட்டத்திலேயே சொல்கிறார்: என்னால் சில சொற்களை உச்சரிக்க முடியாது என்று. இனவழிப்பு என்று தன் வாயால் சொல்ல முடியாதவரை ஏன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைக்க வேண்டும்? அவர் ஏன் அங்கு வந்து சுடர் ஏற்ற வேண்டும்? தமிழ்த் தலைவர்கள் அவரையும் அவரின் தலைவரையும் ஏன் பாராட்ட வேண்டும்?

தமிழீழ மக்கள் இனவழிப்புக்கு ஆளானவர்கள், இன்றளவும் கட்டமைப்பியல் இனவழிப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் இன்றைய போராட்டம் ஈடுசெய் நீதிக்கான போராட்டம். இனவழிப்புக் குற்றம் புரிந்த சிங்கள அரசியல் தலைவர்களும், படைத் தலைவர்களும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றப்பட வேண்டும். ஆனால் இது மட்டும் போதாது. இறுதி நோக்கில் இனவழிப்பு என்பது சிறிலங்கா எனப்படும் சிங்களப் பேரினவாத அரசின் குற்றம். சிறிலங்கா கலைக்கப்படுவதே முறையான அரசியல் நீதியாக நிறைவுபெறும்.

தமிழீழ மக்கள் ஒரு தேசம் என்ற வகையில் இயல்பிலேயே இறைமைக்கு உரிமை படைத்தவர்கள். இனவழிப்புக்கு ஆளான மக்கள் என்ற வகையில் இறைமைக்கான சிறப்புரிமையும் அவர்களைச் சாரும். (இ)யூதர்கள் ஒரு தேசமாக மாட்டார்கள் என்றாலும் இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் போர்க் காலத்திலும் பாரிய இனவழிப்பு ஆளானவர்கள் என்பதால் அவர்கள் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையை ஏற்று இசுரேல் அமைத்துத் தரப்பட்டது. இசுரேல் அந்த இறைமையைப் பாலத்தீனர்களுக்கும் பிற அராபியர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தி வருகிறது.

தமிழீழத்தை இசுரேலுடன் ஒப்பிட்டு, அமெரிக்க வல்லரசுக்கு இசுரேல் போல் இந்திய வல்லரசுக்கு ஈழம் பயன்படும் என்று சொல்லக் கூடியவர்கள் இப்போதும் இருக்கின்றார்கள். அப்படித்தான் ஈழம் பயன்படும் என்றால் இந்தியாவில் ஓர் ஒடுக்குண்ட தேசம் என்ற வகையில் தமிழர்களாகிய நாம் அதை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

விடுதலை பெறும் தமிழீழம் ஒருபோதும் இந்தியாவுக்கோ வேறு வல்லரசுக்கோ அடியாளாக இருக்காது, அது முற்போக்கான கொள்கைகளைக் கடைப்பிடித்துக் குறிப்பாகத் தெற்காசியாவில் பிற தேசங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அமையும் என்பதற்கு 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானமும், சோசலிசத் தமிழீழம் நோக்கி’’ என்ற விடுதலைப் புலிகளின் வேலைத் திட்டமும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க முன்முயற்சியில் பறைசாற்றப்பட்டுள்ள விடுமைப் பட்டயமும் சான்று பகர்கின்றன. இப்படியொரு தேசம் மலர்வதை அமெரிக்க, இந்திய, சீன வல்லரசுகள் விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் வல்லரசுகளின் விருப்பமே வரலாற்றைத் தீர்மானித்து விடுவதில்லை.

ஈழம் இந்தியாவின் எந்த நியாயமான நலனுக்கும் எதிரானதல்ல. இந்தியா ஈழத்தை எதிர்க்கவும், நீதிக்கான ஈழத் தமிழர் போராட்டத்தை மறுக்கவும் நியாயமான காரணம் ஏதுமில்லை. நீதிக்கான போராட்டத்தில் இந்தியா தமிழ்மக்களுக்கு உதவ விரும்பினால் அவர்களின் மூன்று முதன்மைக் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டும்.

1) ஈழத் தமிழருக்கு எதிராக இனவழிப்புப் போர் நடந்துள்ளது என்பதை அறிந்தேற்று, இனவழிப்பு, போர்க்குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் ஆகிய பன்னாட்டுக் குற்றம் இழைத்தவர்களை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்ற ஆதரவளிக்க வேண்டும்.

2) இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் தொடர்பான பொறுப்புக்கூறல் என்ற வகையில் வந்துள்ள ஐநா அறிக்கைகளின் தொடர்ச்சியாகத் தற்சார்பான பன்னாட்டுக் குற்றப்புலனாய்வு செய்ய ஆதரவளிக்க வேண்டும்.

3) தமிழீழத்தின் வருங்காலம் குறித்துத் தீர்மானிக்கத் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் ஈழத் தமிழர்களிடையே ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஆதரவளிக்க வேண்டும்.

இந்தப் பொதுவான கோரிக்கைகளை ஆதரிக்காமல் 13ஆம் திருத்தச் சட்டம் என்ற பாட்டையே இந்தியா திரும்பத் திரும்பப் பாடி வருகிறது. இது தவிர வேறு எதுவும் தமிழர்களின் கோரிக்கைகளாக இருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகிறது.

இந்திய-இலங்கை ஒப்பந்தக் காலம் அல்லது இந்தியப் படையெடுப்புக் காலம் என்ற வரலாற்றையே மறந்து விடும்படிச் சிலர் அறிவுரை கூறக் கிளம்பி வருவது பற்றிச் சொன்னேன். ஆனால் அவர்களும் கூட அக்காலத்தின் எச்சமான ஒன்றை மட்டும் இன்றளவும் பற்றிக் கொண்டு தொங்குகிறார்கள். அதுதான் 13ஆம் திருத்தச் சட்டம். ஏன்? என்று அடுத்த மடலில் பார்ப்போம்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 271