(தோழர் தியாகு எழுதுகிறார் 190 : மணிப்பூர் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!- தொடர்ச்சி)

இந்து அறநிலையத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா?

நான் இறைமறுப்பாளன். சமய மறுப்பாளன். ஆனால் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இறைமறுப்பு, சமயமறுப்பு இயக்கமன்று. அதே போல் இறைநம்பிக்கைக்கான இயக்கமும் அன்று. தமிழர்களில் பல சமயத்தவர் இருப்பது மெய். சமய மறுப்பாளர்களும் உள்ளனர். சமய விடுமை என்பது ச்மய மறுப்பு விடுமையும் அடங்கலானது. பொது அமைதிக்கும் பொது ஒழுங்குக்கும் உட்பட்டு சமயத்தைக் காட்டிக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் சமயத்தைப் பரப்பவுமான விடுமையே சமய விடுமை ஆகும். இதுவே சமய மறுப்பு விடுமைக்கும் பொருந்தும். சமய மறுப்பைக் காட்டிக் கொள்ளவும் கடைப்பிடிக்கவும் பரப்பவும் விடுமை உண்டு.

சமயம் அல்லது சமய மறுப்பை அரசிலோ அரசியலிலோ கலக்கக் கூடாது என்பதுதான் சமயச் சார்பின்மை [SECULARISM] எனப்படும் உலகியல். சமய வழிபாட்டில் அல்லது சமய நிறுவனங்களில் சொத்துச் சிக்கல் போன்ற உலகியல் செய்திகள் தொடர்புற்றிருக்கும் நேர்வுகளில் மட்டுமே அரசு தலையிட வேண்டும். தேவையான நேரத்தில் தலையிடவும் வேண்டும். காட்டாக, சமயத்தின் பெயரால் ஒரு சிறு கும்பல் மக்களின் சொத்தை வன்பறிப்பு செய்யுமானால் அரசு தலையிட வேண்டும். சமய உரிமையின் பெயரால் ஒருசில சமுதாயங்களுக்குக் கோயில் நுழைவு அல்லது தெரு நுழைவு மறுக்கப்படுமானால் அரசும் அரசியல் ஆற்றல்களும் தலையிடத்தான் வேண்டும். கருவறை நுழைவும் இப்படித்தான்.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல பெரிய கோயில்கள் மன்னராட்சிக் காலத்திலிருந்தே சில மேல்சாதி நிலக்கிழார்களின் பிடியில் இருந்தன. இவை பார்ப்பனர்களின் பண்பாட்டுக் கோட்டைகளாகவும் விளங்கின. நான் பிறந்த திருவாரூரில் தியாகராசர் கோயில் வி.எசு. தியாகராச முதலியாரின் தலைமையிலான அறக்கட்டளை அல்லது அறங்காவலர் குழுவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இந்தக் கோயிலுக்கு ஓராயிரம் வேலி நன்செய் நிலம் இருந்தது. வேலி என்றால் 20 மா. ஆறு மா சற்றொப்ப ஒரு ஏக்கர் வரும் என நினைக்கிறேன்.

தியாகராச சாமிக்கு ஆயிரம் வேலியும், அதே பெயர் கொண்ட ஆசாமிக்கு 1,001 வேலியும் இருந்ததாம். ஆசாமி ஒரு வேலியைச் சாமிக்கு எழுதி வைத்து விட்டாராம். ஆனால் மொத்தம் 2.001 வேலியும் ஆசாமியின் ஆளுகையில் நீடித்ததாம். கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்தவர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் செவ்வியக்கம் பல போராட்டங்களை நடத்தியது வரலாறு. அதே செவ்வியக்கத் தலைவர்கள் சிலர் கோயில் அறங்காவலர்களாகி குத்தகை சாகுபடியாளர்களை வஞ்சித்த நேர்வுகளும் உண்டு.

சைவ வைணவக் கோயில்களின் பெயரில் பெரும் நிலச்சொத்துகள் இருப்பதையும், இவற்றைப் பரம்பரை அறங்காவலர்களோ மடாதிபதிகள் அல்லது ஆதீனகர்த்தர்களோ ஆண்டு அனுபவித்து வருவதையும் மன்னராட்சிகள் காலங்காலமாய்ப் பாதுகாத்து வந்தன. சாதிய-நிலக்கிழாரிய அமைப்பின் ஒரு முகன்மைக் கூறாக இந்தக் கோயில் சொத்துடைமை ஆட்சி அமைந்திருந்தது.

பிரித்தானியக் குடியேற்ற(காலனி)ஆதிக்கம் கிழக்கிந்தியக் கும்பினியின் வடிவில் தொடங்கிய போது இந்த கோயில் சொத்துடைமையின் மீது வெள்ளையர் ஒரு கண் வைக்கலாயினர். ஒரு புறம் அவர்களின் வரித் தண்டல் கொள்ளைக்கும், மறுபுறம் வணிக அங்காடி வளர்ச்சிக்கும் கோயில் சொத்துடைமையை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர நினைத்தனர். 1810, 1817 ஆண்டுகளில் கிழக்கிந்தியக் கும்பினி இந்துக் கோயில்களின் ஆட்சியில் தலையிடுவதற்கான சட்டங்கள் இயற்றியது.

பல வகையிலும் எதிர்ப்புக் கிளம்பியதால் 1841க்குப் பின் அரசு பின்னடித்தது. 1857 சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்பட்ட முதல் இந்திய விடுதலைப் போருக்குப் பின் கிழக்கிந்தியக் கும்பினியின் ஆட்சியை மாற்றி பிரித்தானிய முடியரசே 1858 விக்குடோரியா சாற்றுரை வழியாக தன் நேரடி ஆட்சியை நிறுவிய பின் குறுநில மனனர்கள், நிலக் கிழார்களின் ஆளுகையில் தலையிடாமைக் கொள்கையை மேற்கொண்டது. அறமற்ற அறங்காவலர்களை அவிழ்த்து விட்டாற்போலாயிற்று. அவர்கள் கோயில் நிதியையும் நகைகளையும் விருப்பம் போல் கொள்ளையடித்தனர். கோயில் நிலங்களைக் குறைந்த விலைக்கு விற்றும் குத்தகைக்கு விட்டும் ஆதாயமடைந்தனர்.

சிவன் சொத்து குலநாசம்” போன்ற அச்சுறுத்தல்களுக்கு யார் அஞ்சினாலும் அறங்காவலர்களும் அருச்சகர்களும் அஞ்சுவதில்லை. நிதி ஆதாரமில்லமல் பல கோயில்களில் பூசைகள் நின்று போயின. இறையன்பர்களே இப்போது அரசுத் தலையீட்டைக் கோரினர். 1863இல் இசுலாமிய நிறுவனங்கள் உட்பட இந்து சமயக் கோயில்களின் ஆட்சியில் தலையிடுவதற்கான அறநிலையச் சட்டம் போடப்பட்டது. இது தயங்கித் தயங்கிச் செய்த ஒரு தொடக்கம் மட்டுமே.

இரட்டையாட்சி முறைப்படி சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி ஆட்சியமைத்த பிறகுதான் 1925ஆம் ஆண்டு பனகல் அரசர் ஆட்சியில் இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் 1926ஆம் ஆண்டு செட்டம்பர் 17ஆம் நாள் மதராசு இந்து சமயம் அறநிலையச் சட்டம், 1927  என்ற சட்டம் வரையப்பெற்றது. இதன்படி ஒரு தலைவரையும் மூன்று உறுப்பினர்களையும் கொண்டதாக வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தின் கீழ் நிருவாக அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர்.

இந்திய விடுமை (சுதந்திரம்) என்ற அதிகாரக் கைமாற்றத்துக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதியர் பி. வெங்கட்ரமணராவு(நாயுடு) தலைமையில் அறுவர் கொண்ட குழுவின் அறிக்கையின்படி மதராசு இந்து சமயம்-அறநிலையச் சட்டம், 1959 நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அறநிலைய வாரியங்கள் மாற்றப்பட்டு அறநிலையத் துறை உருவானது. இதன்படி, அறங்காவலர்களால் இயற்றப்படும் தீர்மானங்களை அரசால் நியமனம் செய்யப்பட்ட நிருவாக அதிகாரிகள் அனுமதியைப் பெற்று நடைமுறைப்படுத்துவார்கள்.

இப்படிப் பிறந்ததே தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை. இது சமயச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதே தவிர, இந்து சமய ஆகம விதிகளுக்கு உட்பட்டதன்று. இஃது உலகியல் நிறுவனமே தவிர சமய நிறுவனம் அன்று. கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற்றப்படுவதைத் தடுப்பதுதான் அதன் கடமையே தவிர இந்துத்துவ நிகழ் நிரலைச் செய்து முடிப்பதன்று.

இதையெல்லாம் இப்போது யாருக்கு நினைவுபடுத்துகிறோம்? தமிழக அரசுக்குத்தான்! குறிப்பாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்குத்தான்! பார்ப்பானை விஞ்சிய பார்ப்பனாக இருப்பதுதான் இந்து அறநிலையத் துறை அமைச்சருக்குரிய தகுதி என்று அவர் எண்ணிக் கொள்வார் போலும்! இந்துத்துவ நிகழ்நிரலின் படி கோசாலை அமைத்தால் போதாதென்று கோமாதா கோமியம் கழிக்கும் பின்பக்கம் நின்று தீபாராதனையும் காட்டி வழிபாடு செய்கிறார்.

அரிசனங்கள் கோயிலில் நுழையக் கூடாது என்று கோயில் வாசலில் அறிவிப்புப் பலகை தொங்கிய ஒரு காலத்தில், பி. பரமேசுவரன் என்ற ‘அரிசன்’ ஒருவரையே இந்து அறநிலையத் துறை அமைச்சராக்கிக் கோயில் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக்கியதோடு, அவருக்குப் பார்ப்பனப் பூசாரிகளே பூரண கும்ப மரியாதை தர வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியவர் அன்றைய முதலமைச்ச்சர் காமராசர்.

சேகர்பாபுவின் பொறுப்பில் இந்து அறநிலையத்துறை எப்படிச் செயல்படுகிறது என்பதில் முதலமைச்சர் சற்றே கவனம் செலுத்த வேண்டுமெனக் கோருகிறேன். அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பு என்ற நெறிப்படி சேகர்பாபுவின் நடவடிக்கைகள் தமிழக அரசுக்கும், அதன் திராவிடக் கொள்கைகளுக்கும் பெருங்கேடாகிக் கொண்டிருப்பதை விரைவில் உணர்ந்தால் நல்லது.

சாதி வெறி சமய வெறி அரசியலின் கோட்டை கொத்தளங்களாகத் தமிழ்நாட்டுப் பெருங்கோயில்களும் சிறு கோயில்களும் மாற்றப்பட்டு வருகின்றன. தமிழக அரசு இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல்  221