24 August 2023 அகரமுதல
(தோழர் தியாகு எழுதுகிறார் 188 : செவ்வணக்கம் தோழர் (இ)லிங்கன்! -தொடர்ச்சி)
மணிப்பூர் வன்முறையை நிறுத்துக!
இனிய அன்பர்களே!
மணிப்பூர் வன்முறை இன்னும் ஓயவில்லை. ஓயவிடப்பட வில்லை. இந்த வன்முறை தொடங்கியதிலும் தொடர்வதிலும் பாரதிய சனதாக் கட்சிக்கும், இந்திய ஒன்றிய அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும், மணிப்பூர் நீதிமன்றத்துக்கும் முகன்மைப் பங்கு உண்டு. இதற்கான சில சான்றுகளை நாளை வெளியிடுகிறேன்.
இந்த வன்முறையை நிறுத்தக் கோரும் வேண்டுகோளை அறிஞர் இராம் புனியானி எனக்கு அனுப்பி வைத்து என்னையும் வழிமொழியச் சொல்லிக் கேட்டிருந்தார். இது பொறுப்புடன் எழுதப்பட்ட வேண்டுகோள். மணிப்பூரில் நடப்பது என்ன? வன்முறையை நிறுத்த நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற வினாகளுக்குத் தெளிவான விடைகள் தரப்பட்டுள்ளன. இந்த வேண்டுகோளை வழிமொழிந்திருக்கும் சிலரின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. நானும் வழிமொழிந்திருக்கிறேன். இதோ அந்த வேண்டுகோள் அறிக்கை –
வேண்டுகோள்
மைத்தி சமுதாயத்துக்கும் குக்கி, சோ ஆகிய பழங்குடிச் சமுதாயங்களுக்கும் இடையில் தொடர்ந்து வரும் இன வன்முறை குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பெருமளவில் உயிரிழப்புக்கும் வாழ்வுக் குலைவுக்கும் சொத்துடைமைகள் அழிப்புக்கும் காரணமாகி, மக்களிடையே இன்னும்கூட திகில் பரவச் செய்து வரும் இந்த வன்முறைக்கு உடனே முடிவுகட்ட வேண்டும் எனக் கோருகின்றோம்.
மைத்தி சமுதாயத்துக்கு அட்டவணைப் பழங்குடித் தகுநிலை வழங்கும்படி மாநில அரசுக்குப் பரிந்துரை செய்து 2023 ஏப்பிரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைதான் இந்த வன்முறைக்கு உடனடித் தூண்டுதலாக அமைந்தது. (மைத்தி சமுதாய உறுப்பினர்களுக்கு இப்போது ஏனைய பிற்பட்டோர், அல்லது சில நேர்வுகளில் அட்டவணைச் சாதி, எனும் தகுநிலை உள்ளது.) அட்டவணைப் பழங்குடித் தகுநிலை கிடைத்தால் மைத்தி சமுதாயம் பெறக்கூடிய நன்மை… இப்போது பழங்குடிச் சமுதாயங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலத்துக்கு உரிமை கோர முடியும். மேத் திங்கள் முழுக்க தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள் நடந்து, இரு தரப்பும் ஆய்தந்தரித்திருந்த நிலையில் உள்நாட்டுப் போரையொத்த நிலைமை தோன்றியது, சட்டம் ஒழுங்கு அடியோடு குலைந்தது. அதுமுதல் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் ஆய்தக் குழுக்களும் எளிய மக்களுக்கு எதிராகப் பரந்துபட்ட அளவில் முன்னெப்போதும் காணாத மூர்க்கமான கொடுமைகள் செய்வதைப் பார்த்து வருகிறோம்.
இன்று மணிப்பூர் எரிந்து கொண்டிருப்பதற்குப் பெரும்படியான காரணம் பாசகவும் நடுவண் அரசும் மாநில அரசும் மக்களைப் பிரிக்கும் அரசியல் ஆட்டம் ஆடி வருவதே ஆகும். மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் இந்த உள்நாட்டுப் போரை நிறுத்தும் பொறுப்பு அவற்றையே சாரும். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக அனைவரும் வன்முறையால் துயருற்றுள்ளனர், 300க்கு மேற்பட்ட ஏதிலி முகாம்களில் 50,000க்கு மேற்பட்ட மக்கள் தங்கியிருக்க, இலட்சக் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
உண்மையில் பாசக மாநில அரசு சேமவனப் பகுதிகளிலிருந்து ‘சட்டப்புறம்பான’ குடியேறிகளை’ அகற்றும் முயற்சிகளை இந்த ஆண்டு சனவரியில் தொடங்கிய போதுதான் நிலைமை மோசமாயிற்று. இவர்கள் 1970களிலிருந்து இப்பகுதிகளில் குடியமர்ந்துள்ளனர் என்று அரசு கூறிக் கொண்டது. பழங்குடியினரான வனவாழ்வோரை ‘வன்பறிப்பாளர்கள்’ என்று அறிவித்து சுராசந்த்பூர், காங்க்குபோக்பி, தெங்குனூபால் மாவட்டங்களில் மாநில அரசு நிலவெளியேற்ற நடவடிக்கை தொடங்கிற்று.
நாடெங்கும் பாசக கையாளக் கூடிய அதே வழிமுறைதான், காலங்காலமாய் இருந்து வரும் இனக்குழுப் பதற்றங்களை அது தன் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக முற்றச் செய்து வருகிறது. மாநிலத்தில் இன்னுங்கூட வலுவாகக் காலூன்ற வேண்டும் என்பதற்காக வன்முறையும் வலுவந்தமுமாகிய வழிகளைப் பயன்படுத்திக் கொள்வதில் பாசகவின் வகிபாகம் உள்ளது. பாசக இரு சமுதாயங்களுக்கும் கூட்டாளி போல் நடித்துக் கொண்டே அவற்றுக்கிடையிலான வரலாற்றுவழிப் பதற்றங்களின் இடைவெளியை அகலப்படுத்தி வருகிறதே தவிர, தீர்வு நோக்கிய உரையாடலுக்கு வழிசெய்ய எம்முயற்சியும் செய்யவில்லை.
நடுவணரசும் சரி, மாநில அரசும் சரி, குடியாட்சிய உரையாடல், கூட்டாட்சிக் கொள்கை, மாந்தவுரிமைக் காப்பு ஆகிய கருத்துகளை அழிக்கவே அரசமைப்புச் சட்ட வழிவகைகளைக் கருவிகளாக கையாண்டு வருகின்றன. இப்போதைய நிலவரத்தில், அரம்பை தெங்கோல், மைத்தி இலீபுன் ஆகிய மைத்தி பேரினவாத ஆய்தக் குழுக்களே குக்கி இன மக்களுக்கு எதிராகப் படுமோசமான வன்முறைக் கொடுமைகள் செய்துள்ளன. இனவழிப்புக்குரிய வெறுப்புமிழும் பேச்சுகளும், என்ன செய்தாலும் தட்டிக் கேட்கவும் தண்டிக்கவும் யாருமில்லை என்று பேரினத் திமிர்த்தன வெளிப்பாடுகளும் இத்துடன் சேர்ந்து கொண்டன. இவற்றுள் முதற்குழு மைத்திகள் சனாமகி மரபுகளுக்கு மீள வேண்டுமென அழைப்பு விடுக்கும் பழமைமீட்புக் குழுவாகும். இரண்டாம் குழு தெள்ளத் தெளிவாகவே இந்துப் பேரினவாதச் சார்புடையதாகும். முதலமைச்சர் பிரேன் சிங்கு இந்தக் குழுக்களுடன் நெருங்கிய ஈடுபாடு உடையவர். இரு குழுக்களுமே குக்கி சமுதாயத்தைச் “சட்டப்புறம்பான வெளியார்” என்றும் “போதைப் பொருள் திகிலியர்கள்” (நார்கோ பயங்கரவாதிகள்) என்றும் இழிவாகப் பேசுகின்றன. மைத்தி இலீபுன் தலைவர் ஊடகச் செவ்வி ஒன்றில், மைத்திகள் பூசலுக்குரியவையாகக் கருதும் பகுதிகளில் குக்கிகள் “துடைத்தெறியப்படுவார்கள்” என்று வெளிப்படையாகவே அறிவிக்கத் தயங்கவில்லை. குக்கி சமுதாய மக்கள் “சட்டப்புறம்பானவர்கள்”, “வெளியார்கள்”, “குடும்பத்தில் இடம்பெறாதவர்கள்” “மணிப்பூருக்குச் சொந்தமல்லாதவர்கள்”, மணிப்பூரில் “குடக்கூலிகள்” என்றெல்லாம் அவர் வண்ணித்தார். இதற்கு முன் முதலமைச்சரே குக்கி மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் ஒருவரை “மியான்மரியர்” என்று குறிப்பிட்டிருந்தார். மியான்மரில் காணப்படும் அமைதியின்மையால் தப்பி வரும் ஏதிலியரால் மைத்தி சமுதாயம் மக்கள்தொகை சார்ந்து ஓர் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்ற பரப்புரைக்கு முதலமைச்சரும் ஆமாம் போடுகிறார் என்பதே இதன் பொருள். இந்த ஏதிலிகள் மணிப்பூரிலும் வாழ்ந்து வரும் பழங்குடிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், பழங்குடி மக்களின் தொகை பெருகி, அவர்கள் மைத்திப் பெரும்பான்மையையும் விஞ்சி விடுவார்கள் என்று மைத்திப் பேரினவாதக் குழுக்கள் பேய்க்காட்டுகின்றன.
சிறுபான்மைச் சமுதாயம் ஒன்றைச் “சட்டப் புறம்பானவர்கள்” என்று மாந்த நீக்கம் செய்கிற இந்த மொழியைத்தான் ஒன்றிய உள்துறை அமைச்சரும் அசாம் முதலமைச்சரும் அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு செய்யும் முயற்சியின் போது பேசினார்கள். இப்போது அதே மொழி வடகிழக்கில் மற்றுமொரு மாநிலத்துக்குப் பரவியுள்ளது. வெறுப்பும் வன்முறையும் அயலார் வன்மவெறியுமான தீயை மூட்டி வருகிறது.
குக்கி ஆய்தக் குழுக்கள் 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் பாசகவுக்கு வாக்கு சேகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள 10 குக்கி உறுப்பினர்களில் 7 பேர் பாசகவைச் சேர்ந்தவர்கள். குக்கி குழுக்கள் செய்து வரும் பரப்புரையும் ஒருவகையில் பாசக வழியைக் கடைப்பிடித்து, குக்கி தலைவர்கள் இந்திய அரசு நலன்களுடன் கூடிச் செயல்பட்ட முன்னுதாரணங்களைக் காட்டி, மைத்திகளை இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று முத்திரையிடுவதாக உள்ளது. இப்போது தொடரும் வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலார் குக்கி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று செய்திகள் காட்டுகின்றன. பள்ளிகள், தானியக் களஞ்சியங்கள், வீடுகள் இவற்றோடு, 200க்கு மேற்பட்ட குக்கி தேவாலயங்கள் கொளுத்தபப்ட்டுள்ளன.
இன்று பொய்ச்செய்தி எனப்படும் வதந்திகள் பரப்பி, சமுதாயங்களுக்கிடையே மோதல்களைத் தூண்டி விடுவது – காலங்காலமாய்க் கையாளப்படும் இந்த உத்தி – பெண்களை எளிதில் இலக்காக்கும் நடைமுறை தொடர்கிறது. மைத்திப் பெண்களைக் குக்கிகள் வன்புணர்வு செய்து விட்டார்கள் என்று பேரின மைத்திக் குழுக்கள் பரப்பிய பொய்ச் செய்தியைச் சாக்கிட்டு குக்கி இனத்தவரை அடித்துக் கொல்வதும் குக்கி-சோ பெண்களை வன்புணர்வு செய்வதுமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெறிக் கும்பல்கள் “அவளைக் கெடு, அவளை வதை செய்” என்று கத்திக் கொண்டே பெண்களைத் தாக்கியதாகச் செய்திகள் வந்துள்ளன. இந்தச் செய்திகளை அவசரமாகச் சரிபார்க்க வேண்டும்.
தொடர்ந்து வரும் இந்த வன்முறை வெறியாட்டத்தை உடனே நிறுத்தக் கோருகிறோம். வன்முறைச் செயல்கள் ஓய்ந்தவுடனே தற்சார்பானவர்களும் கட்சிசார்பற்றவர்களுமான குடியியல் சமூக உறுப்பினர்கள் வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்களையும் அன்புக்குரியோரை இழந்தவர்களையும் போய்ப் பார்க்க வேண்டும்; கொலைகள், வன்புணர்வுகள் பற்றிய செய்திகளைச் சரிபார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்; அன்புக்குரியவர்களையும், வீடுகளையும், தேவாலயங்களையும் பறிகொடுத்துத் துயரப்பட்டவர்களுக்குத் தோழமையும் ஒல்லும் வகையெல்லாம் ஆதரவும் வழங்க வேண்டும்.
நாடெங்கும் கவலையுற்ற குடிமக்கள் என்ற முறையில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
- தலைமையமைச்சர் வாய்திறந்து பேசவும் மணிப்பூரின் நடப்பு நிலைமைக்குப் பொறுப்பேற்கவும் வேண்டும்;
- உண்மைகளை நிறுவவும், நீதிக்கான அடித்தளத்தை அணியமாக்கவும், மணிப்பூரில் இரு சமுதாயங்களையும் வேறுபடுத்தும் கொடும் புண்ணை ஆற்றவும், தூண்டி வளர்க்கப்படும் பிரிவையும் வெறுப்பைத் தணிக்கவும்… நீதிமன்றக் கண்காணிப்பில் ஒரு சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.
- “மோதல் பகுதிகளில் பாலியல் குற்றம் புரிந்த படையினர் எளிய குற்றவியல் சட்டத்தில் உசாவப்பட வேண்டும்” என்ற வருமா ஆணையத்தின் பரிந்துரைக்கு இணங்க, அரசுத் தரப்பாரும் அரசல்லாத் தரப்பாரும் புரிந்த பாலியல் வன்முறை வழக்குகள் அனைத்துக்கும் ஒரு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.
- வெளியேறி ஓடுமாறு வலிந்து விரட்டப்பட்டவர்களுக்குத் துயர்தணிப்பு உதவி வழங்கப்பட வேண்டும்; பாதுகாப்பாக அவரவர் ஊர்திரும்புவதற்கு உறுதிகாப்பளிக்க வேண்டும். அவர்தம் இல்லங்களும் வாழ்வும் மீட்டமைக்கப்பட வேண்டும். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் வீடு, தானியங்கள், கால்நடைகளை இழந்தவர்களுக்கும் கருணை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும். மீட்டனுப்புவதும், மறுவாழ்வளிப்பதும், இழப்பீடு வழங்குவதுமான இந்தச் செயல்வழி இந்த வட்டாரத்தை நெருக்கமாக அறிந்த ஓய்வுபெற்ற நீதியர் குழு ஒன்றின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். இந்த நீதியர் குழுவை உயர் நீதிமன்றமோ உச்ச நீதிமன்றமோ அமர்த்தலாம்.
இந்த வேண்டுகோளை வழிமொழிந்து ஒப்பமிட்டவர்கள்: .
அன்னி இராசா, இந்திய மாதர் தேசியப் பெருமன்றம்,
கவிதா சிரீவசுதவா, குடியியல் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்,
அனுராதா பானர்சி & வாணி சுப்பிரமணியம், சகேலி மாதர் வள மையம்,
கவிதா கிருட்டிணன், பெண்ணியர், தில்லி,
இரஞ்சனா பதி, நூலாசிரியர், பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒரிசா,
நந்தினிராவு, பெண்ணியச் செயற்பாட்டாளர், தில்லி
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 218
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக