(தோழர் தியாகு எழுதுகிறார் 186 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)- தொடர்ச்சி)

ப.த.ச.சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.வைக் கலைத்திடு!

2019இல் பாசக ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆட்கடத்தல் (human trafficking) பற்றிய குற்றச்சாட்டுகள், வெடிமருந்துப் பொருள் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் (offences under the Explosives Act), மேலும் சில ஆயுதச் சட்டங்கள் (Arms Act) முதலியன இப்போது இந்தத் திருத்தப்பட்ட தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டத்தின் ஊடாக ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கீழ் இவை கொண்டு வரப்பட்டால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு எந்தத் தெளிவான காரணமும் சொல்லப்படவில்லை.இவற்றை விசாரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரமும் நிறுவனங்களும் இருக்கும்போது அந்த மாநில உரிமைக்குள் மூக்கை நுழைத்து அவ்வழக்கை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) எடுத்துக் கொள்வதற்கு வழிசெய்யவே இந்தத் திருத்தம்.

தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தொடங்கப்பட்டு வெறும் 15 ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் இதன் இந்துத்துவ அரசியல் சார்பு அம்பலப்பட்டு நிற்கிறது.

இந்துத்துவப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் புலனாய்வில் குற்றவாளிகளிடம் மென்மையானப் போக்கை கடைபிடிக்குமாறு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதென அவ்வழக்கை நடத்திய அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் (உ)ரோகினி சலைன் 2015 சூன் 25 அன்று தெரிவித்தார்.

சம்சூதா விரைவுவண்டி குண்டுவெடிப்பு வழக்கிலும் ஐதராபாத்து மெக்கா மசுஜித்து குண்டுவெடிப்பு வழக்கிலும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தன் புலனாய்வு நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது.

ப.த.ச.(ஊபா) சட்டம் காலவரையறையின்றிச் சிறையில் வைக்க வழிவகுத்தது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் புலனாய்வைக் கொண்டு போய் விட்டது.

மாநில அதிகாரத்தைப் பறிப்பதும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் செயல்திறனும் நேர்மையும் இல்லாததும் ஆன தே.பு.மு.(என்.ஐ.ஏ.) நிறுவனம் கலைக்கப்பட வேண்டும், அந்தச் சட்டம் கிழித்தெறியப்பட வேண்டும்.

திமுக 2008ஆம் ஆண்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டம் இயற்றப்படும் போதும் ஆதரித்தது. அதில் 2019ஆம் ஆண்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வை மேலும் அதிகாரப்படுத்தும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த திருத்தத்தையும் ஆதரித்தது. அதற்கு எதிர்ப்புக் கிளம்பிய போதுகூட தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை, மாறாக இச்சட்டத்தை நியாயப்படுத்தி அறிக்கை கொடுத்தது.

வல்லரசியத்தின் (ஏகாதிபத்தியத்தின்) பயங்கரவாத எதிர்ப்புக் கோட்பாடு இந்தியாவில் பெற்றெடுத்த பிள்ளைதான் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! மாநிலத் தன்னாட்சி என்று வாயளந்து கொண்டே தே.பு.மு.(என்.ஐ.ஏ.)விடம் திமுக மண்டியிட்டது. காரணம், திமுகவின் வல்லரசிய (ஏகாதிபத்திய) சார்பும் புதுத்தாராளியப் பொருளியல் கொள்கையும் மாநிலத் தன்னாட்சிக் கொள்கை முணுமுணுப்புகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டது; அதிமுகவும் இவ்விசயத்தில் விதிவிலக்கல்ல, கடந்த 2019இல் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு 270 வழக்குகளில் ப.த.ச.(ஊபா) பிரிவுகளைப் பயன்படுத்தி 308 பேரை சிறைப்படுத்தியுள்ளது. அதில் பெரும்பாலோருக்கு அதே ஆண்டில் பிணை கிடைத்துள்ளது.

கடந்த அட்டோபரில் நடைபெற்ற கோவை எரிவாயு உருளை வெடிப்புக்காகப் போடப்பட்ட வழக்கை மிகவும் அம்பலப்பட்டுப் போன தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வுக்கு அவசர அவசரமாக மாற்றி வேட்டை நாய்க்கு வெற்றிலைப் பாக்கு வைக்கும் வேலையைத் திமுக அரசு செய்துள்ளது.இவ்வண்ணம், தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தன் விருப்பம் போல் தமிழ்நாட்டில் செயல்பட திமுக அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் புரசைவாக்கத்தில் அலுவலகம் வைத்துக் கொண்டு விசாரணை, கைது என்ற பெயரில் இசுலாமியர்களை அச்சுறுத்தும் வேலையை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தொடர்ந்து வருகிறது.

செயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அலுவலகத்திற்குத் தமிழ்நாட்டில் இடம் கொடுக்கவில்லை. தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வை மாநிலஉரிமை மீதான அத்துமீறல் என்ற காரணத்தைச் சொல்லி அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

திமுக அரசோ ப.த.ச.(ஊபா), தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அடக்குமுறை சட்டங்களையும் அதில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களையும் ஆதரித்தது; தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அலுவலகம் தமிழ்நாட்டில் இயங்க அனுமதித்தது; தானே முன்வந்து வழக்குகளை தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வுக்கு மாற்றியது; புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) தடையைக் கண்டிக்கவில்ல; மாறாக அத்தடையைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தியது; தடைக்கு முன்னும் பின்னும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) செய்வது வரும் கைது நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளவில்லை. கடந்த மே 9 அன்று வழக்கறிஞர்கள் மீதே பொய் வழக்குப் போட்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) கைது செய்திருக்கும் நிலையில், அதை கண்டிக்கக்கூட மறுக்கிறது திமுக. இதன் மூலம், இசுலாமியர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு நிகழ்த்தி வரும் பாசிச ஒடுக்குமுறைகளுக்கு திமுக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

பாசிசத்தின் பயங்கர நிறுவனமாக தே.பு.மு.(என்.ஐ.ஏ.) பயன்படுகிறது. ப.த.ச.(ஊபா) சட்டப் பிரிவுகளின் கீழ்ப் பொய் வழக்குப் போடப்படுகிறது. எனவே, பாசிச எதிர்ப்பில் அக்கறைக் கொண்டோர் ப.த.ச.(ஊபா), தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வை எதிர்த்து போராடாமல் இருக்க முடியாது. நாம் எழுப்ப வேண்டிய உடனடி மற்றும் நீண்ட காலக் கோரிக்கைகள்:
பாசிச பாசக அரசே!

  • புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) வழக்கு, பீமா கோரேகான் வழக்கு. தில்லி கலவர வழக்கு , முதலான அனைத்து ப.த.ச.(ஊபா) வழக்குகளிலும் உடனடியாகப் பிணை வழங்கு!
  • ப.த.ச.(ஊபா) பிரிவுகளின் கீழ்ப் போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறு! • ப.த.ச.(ஊபா) சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வைக் கலைத்திடு!

திமுக அரசே!

  • ப.த.ச.(ஊபா), தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமெனக் கொள்கை முடிவெடுத்திடு! அம்முடிவை செயல்படுத்த உழைத்திடு!
  • தே.பு.மு.(என்.ஐ.ஏ.)-வைத் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்று! தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அலுவலகத்தை இழுத்து மூடு!
  • - பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி
  • (தொடரும்)
    தோழர் தியாகு
    தாழி மடல் 216