(தோழர் தியாகு எழுதுகிறார் 87 தொடர்ச்சி)
இனிய அன்பர்களே!
மார்க்குசிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலர் வெளியிடப்படுகிறது. பல ஆண்டுகளாகவே ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலரில் தவறாமல் என் கட்டுரை இடம்பெறும். வழக்கமாகத் தோழர் ஆனைமுத்து எனக்கான தலைப்பைச் சொல்வார். அவர் போய் விட்டார். அவருடன் பணியாற்றிய பாவலர் தமிழேந்தியும் போய் விட்டார். அவர்களிடத்தில் தோழர்கள் வாலாசா வல்லவனும் முகிலனும் மற்றவர்களும் தொடர்ந்து உழைக்கின்றார்கள். ‘சிந்தனையாளன்’ தொடர்ந்து வருகிறது. இவ்வாண்டு பொங்கல் மலரில் எனக்குச் “சாதியத்தை எதிர்ப்பதில் காந்தி-அம்பேத்கர் முரண்” என்று தலைப்புக் கொடுத்திருந்தார்கள். இன்று காலைதான் எழுதி முடித்து அனுப்பி வைத்தேன். பட்டி அடைக்குமுன் கடைசி மாடாக இருக்கக் கூடும். பொறுமையாகக் காத்திருந்தார்கள் வல்லவனும் முகிலனும். அந்தக் கட்டுரையின் முகன்மைப் பகுதிகள் இரண்டை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்:
1. காந்தியின் வன்முறை
1932 ஆகட்டு 16ஆம் நாள் பிரித்தானியத் தலைமையமைச்சர் இராம்சே மக்குடொனால்டு அறிவித்த வகுப்புவாரித் தீர்வு (Communal Award):
முற்பட்டசாதிகள், முசுலிம்கள், சீக்கியர்கள், ஐரோப்பியர்கள், இந்தியக் கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், தீண்டப்படாதார் என்று ஒவ்வொரு குழுவுக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கொதித்தெழுந்தார் மகாத்துமா! மற்ற எந்தக் குழுவுக்கும் ஒதுக்கீடு வழங்குவதுபற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்குவதை மட்டும் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று உறுதியாக அறிவித்தார். வெறும் அறிவிப்போடு நிற்க வில்லை. சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கி விட்டார்.
அம்பேத்துகருக்கு மிகப்பெரும் நெருக்கடி! காந்தி உயிரிழந்தால் பழி அம்பேத்கரைச் சாரும். அதை விடவும் மோசம், இந்துக்களின் சினம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திரும்பும். பெரும் படுகொலைகள் நிகழலாம். நெருக்கடி அம்பேத்துகருக்குத்தானே தவிர, பிரித்தானிய அரசுக்கல்ல, விட்டுக் கொடுங்கள் என்று தேசியத் தலைவர்களும் தலித்து தலைவர்களும் கூட அம்பேத்துகரை வலியுறுத்தலானார்கள். என்ன நடந்தாலும் விட்டுக் கொடுக்காதீர்கள் என்று அம்பேத்துகருக்கு அறிவுரை சொன்ன ஒரே ஒருவர் பெரியார் மட்டுமே. கடைசியாக அம்பேத்துகர் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனி வாக்காளர் தொகுதி என்ற அம்பேத்துகர் கனவைப் பலியிட்டு காந்தி பிழைத்துக் கொண்டார்..
காந்தியின் அகிம்சைக் கொள்கை பொய்மையானது என்பதற்குச் சான்றாகச் சில நிகழ்வுகளை அவரின் குற்றாய்வர்கள் எடுத்துக் காட்டுவதுண்டு. ஆனால் என் பார்வையில் அவரது பூனா உண்ணாநோன்புதான் மிகப்பெரும் சான்று. அது ஒரு வன்முறை அச்சுறுத்தல், அம்பேத்துகரை வீழ்த்துவதற்காகப் பாமர தலித்துகளுக்கு காந்தி விடுத்த வன்முறை மிரட்டல். உளத்தியல் வன்முறை.
2. காந்திக் கொலையின் உட்பொருள்
காந்தியைக் கொன்றவர்கள் மதவெறியர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்து மத வெறிக்குள் மறைந்திருப்பது சாதி வெறியே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்து மதவாதிகள் இசுலாத்தையும் கிறித்துவத்தையும் வெறுப்பது ஏன்? அவர்கள் வெறுப்பது அல்லாவையோ இயேசுவையோ அல்ல. அந்த மதங்களில் சேர்ந்த கீழ்சாதியினர், இழிகுலத்தவர் மீதான வெறுப்புதான் அந்த மதங்களின் மீதான வெறுப்பாக வெளிப்படுகிறது.
இப்படிப் பார்க்கும் போது காந்தி மீதான வன்மத்தின் வேர்மூலம் சிறுபான்மை மதங்களில் சேர்ந்த மக்கள் மீதான வெறுப்பின் வெளிப்பாடுதான். முசுலிம்களிடம் காந்தியாரின் பரிவு என்பதும் முசுலிமாக மாறிய எளிய ஒடுக்குண்ட மக்கள் மீதான பரிவாகவே புரிந்து கொள்ளப்படும். இது காந்திக்குப் புரிந்ததோ இல்லையோ சவர்க்கருக்கும் கோட்சேக்கும் புரிந்திருந்தது. தெளிந்த சாதியொழிப்புப் பார்வையே இல்லாவிட்டாலும் காந்தியாரின் உயிரீகம் இந்துமத வெறிக்கு எதிரானது மட்டுமல்ல; பார்ப்பன வர்ண-சாதி வெறிக்கும் எதிரான ஒன்று.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 55
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக