(தோழர் தியாகு எழுதுகிறார் 39 தொடர்ச்சி)
சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 4
கீழ்ச்சாதிக்காரன் தரத்தைக் கெடுத்து விடுவான் என்று சொல்லாமல் சொல்லும் இந்த மேல்சாதிக் கூட்டத்துக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டும்: இடஒதுக்கீடு என்பது ஒரு கல்விக் கழகத்தில் நுழைவதற்குக் கோரப்படுகிறதே தவிர இறுதியில் பட்டம் பெற்று வெளியே வருவதற்கு அல்ல. அதாவது இடஒதுக்கீடு சேர்க்கையில்தானே தவிர தேர்ச்சியில் அல்ல. தேர்ச்சிக்கான படித்தரங்கள் எல்லார்க்கும் ஒன்றுதான்.
‘இந்து‘ வின் சாதியம்
பிராமணியத்தின் தகுதி-திறமைவாதமும் சாதிக் குருட்டுச் சாதியமும் எவ்வளவு விபரீதமான வாதங்களுக்கு இட்டுச்செல்ல முடியும் என்பதற்கு ஆங்கில நாளேடு ‘இந்து’ வின் ஏப்பிரல் 2 ஆசிரியவுரையே சான்று.
‘இந்து’ சொல்கிறது:
“வானோட்டிகள், மருத்துவம் அல்லது பொறியியல் அல்லது ஆராய்ச்சியில் உயர்தனிப் பிரிவுகள், ஆயுதப் படைகள்… இப்படிச் சில துறைகளை இடஒதுக்கீட்டுத் திட்டத்துக்கு வெளியே வைத்துக் கொள்வதும் முக்கியமாகும். இந்தியத் தொழில் நுட்பப் பயிலகங்கள் (ஐஐடி), இந்திய மேலாண்மைப் பயிலகங்கள் (ஐஐஎம்) போன்ற சில நிறுவனங்களை வேறெந்த நோக்கிற்கும் விட்டுக் கொடுக்காத உயர் சிறப்புத் தீவுகளாகப் பாதுகாப்பதும் ஒட்டுமொத்த நாட்டு நலனுக்குத் தேவை.
சூத்திரனும் பஞ்சமனும் வேண்டுமானால் வண்டி ஓட்டட்டும்! பேருந்தும் சரக்குந்தும் ஓட்டட்டும்! தொடர்வண்டி கூட ஓட்டட்டும்! ஆனால் வானூர்தி ஓட்ட ஆசைப்படாதிருக்கட்டும்!
வானூர்தி ஓட்டுகிறவனுக்கு ஊதியம் அதிகம் என்பது தவிர இந்தப் பச்சையான பாகுபாட்டுக்கு வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?
இந்தியச் சமூகத்தின் மலட்டுத்தனம்
மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சியின் உயர்தனிப் பிரிவுகளில் இடஒதுக்கீடு தரக் கூடாதாம்! இது வரை இடஒதுக்கீடே இல்லாமல் இந்த உயர்தனிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட முற்றுரிமை வகித்துள்ள பிராமணர்கள் சாதித்தது என்ன? அனைத்துத் துறைகளிலும் தம் ஆற்றலை வெளிப்படுத்த அனைத்துப் பிரிவு மக்களுக்கும் வாய்ப்பளிக்காத ஒரு சமூகத்தால் பெருஞ்சாதனை எதையும் நிகழ்த்தி விட முடியாது. அறிவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியச் சமூகத்தின் நீடித்த மலட்டுத் தனத்திற்கு வர்ண சாதியமைப்பே பொறுப்பு என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் அறிவு நாணயம் ‘இந்து’ வுக்கு உண்டா? உறங்கிக் கிடக்கும் பேராற்றல்களை எழுப்பிவிட்டு புதிய சாதனைகள் படைப்பதற்குச் சமூக நீதி வேண்டும். அதில் ஒரு முக்கியக் கூறுதான் இடஒதுக்கீடு!
‘இந்து’வின் உயர்சிறப்புத் தீவுகள் இது வரை பெரும்பாலும் உயர்சாதித் தீவுகளே! குறிப்பாகச் சொன்னால் பிராமணத் தீவுகளே! சமூகநீதியின் ஆழிப் பேரலையில் இந்தத் தீவுகள் மூழ்கிப் போய்விடும் என்ற அச்சத்தால் ‘இந்து’ நடுங்குகிறது.
பசையடுக்குத் தந்திரக்கோல்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடஒதுக்கீட்டுப் பூதத்தை விரட்ட மீண்டும் எடுத்திருக்கும் மந்திரக் கோல், இல்லை, தந்திரக் கோல்தான் பசையடுக்கு வாதம். பிற்படுத்தப்பட்டோரில் ஒரு பிரிவினர் வசதியும் தகுநிலையும் உயர்ந்து பசையடுக்கு (creamy layer) ஆகி விட்டனராம். இடஒதுக்கீட்டின் பலன் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாதாம்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சின்னப்ப (இ)ரெட்டி ஒரு தீர்ப்பில் சொன்னார்:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கென ஒதுக்கீடு செயப்படும் இடங்கள், பதவிகளில் ஒரு சிலவற்றை அவர்களில் அதிக வாய்ப்புள்ள வசதியுள்ளவர்கள் தட்டிச் சென்று விடுகிறார்கள் என்பதன் பொருள் இடஒதுக்கீடு தேவையில்லை என்பதன்று. நம் சமூகம் போன்ற போட்டிகள் நிறைந்த ஒரு சமூகத்தில் இப்படி நிகழத்தான் செய்யும். ஒதுக்கீடு செய்யப்படாத இடங்கள், பதவிகளையும் கூட இதேபோல் அவர்களிடையிலான பசையடுக்கினர் தட்டிச் செல்வதில்லையா?… ஒதுக்கீடு செய்யப்படாத பதவிகளைச் சமூகத்தின் உயர் பசையடுக்கினர் இப்படித் தட்டிச் செல்வது மோசமில்லை என்றால், ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களையும் பதவிகளையும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பசையடுக்கினர் தட்டிச் செல்வது எப்படி மோசமாக இருக்க முடியும்?”
பசையடுக்கு வாதத்தை மண்டலே மறுதலித்து விட்டார். 31-12-1980 நாளிட்ட மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பது இதுதான்:
இடஒதுக்கீட்டின் தலையாய சிறப்பு என்ன? இந்தியச் சமூகம் எல்லா வகையான ஏற்றத் தாழ்வுகளாலும் பீடிக்கப்பட்டிருக்க, ஏனைய பற்படுத்தப்பட்டோரிடையில் மட்டும் அது சமத்துவத்தைக் கொண்டுவரும் என்பதன்று. ஆனால் பணிகளில் உயர்சாதிகளுக்குள்ள பிடிப்பைக் குறைத்து, நாட்டை நடத்திச் செல்வதில் ஒரு பங்கேற்புபுணர்வைப் பொதுவாக ஏனைய பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்படுத்த அது பயன்படும் என்பது உறுதி”.
மைய அரசின் உயர் கல்விப் பயிலகங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இன்னும் இட ஒதுக்கீடு தொடங்கவே இல்லை. இந்நிலையில் பசையடுக்குப் பூச்சாண்டி காட்டுகிறவர்களின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இடஒதுக்கீடே வழங்கப்பட்டு விட்டாலும் ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்புவதற்கு ஆள் இல்லை என்ற நிலையை உருவாக்கி, இடஒதுக்கீட்டைச் செயலளவில் இல்லாமற் செய்வதே அது. இடஒதுக்கீட்டை முறியடிக்கும் சதித் திட்டமே பசையடுக்கு என்ற கூக்குரல்.
சாதிக் குருடும் நீதித் திருட்டும்
இப்படி எல்லா வகையிலும் இடஒதுக்கீட்டை மறுக்கவும், குறுக்கவும், நாமயர்ந்தால் அடியோடு ஒழித்துக்கட்டவும் பிராமண, பிராமணிய ஆற்றல்கள் வரிந்து கட்டி நிற்கின்றன. இவர்கள் தங்களின் ஆதிக்கத் தன்னலத்துக்காகச் சாதியம் காப்பவர்கள். இதை சாதி பார்த்தும் செய்வார்கள்,
சாதி பார்க்கும் சாதியத்தை விடவும் சாதிக் குருட்டுச் சாதியம் ஆபத்தானது. ஏனென்றால் முன்னது வெளிப்படையானது. பின்னது பசுத்தோல் போர்த்திய புலி, புறாச் சிறகு போர்த்திய வல்லூறு! சாதிக் குருட்டுக்குப் பின்னால் மறைந்துள்ள நீதித் திருட்டைக் கண்டுகொள்வோம்; தமிழ் மக்கள் காணச் செய்வோம்.
வெடிக்கட்டும் எரிமலை!
கடைசியாக வந்துள்ள செய்தியின்படி, மையக் கல்விப் பயிலகங்களில் ஏனைய பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க மறுத்து விட்டது உச்ச நீதிமன்றம் ’57 ஆண்டுகள் காத்திருந்தீர்கள், இன்னும் ஆறு மாதம் காத்திருக்கக் கூடாதா?’ என்று நீதிபதிகள் கேட்டிருப்பது விபரீதமானது. ’57 ஆண்டுகளாக ஏன் இதைச் செய்யவில்லை?’ என்று அவர்கள் கேட்டிருந்தால் பாராட்டலாம். இன்னும் ஓராண்டு இடஒதுக்கீடு இல்லாமற் போவதால் எத்தனை மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுமோ? என்ற கவலையே இந்த நீதிபதிகளுக்கு இல்லை. “ஒடுக்கப்பட்ட மக்கள் எரிமலையாக வெடிப்பார்கள்” என்று தமிழக முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார். எரிமலை வெடிக்கட்டும். ஆனால் எரிக்க வேண்டியவை பற்றிய தெளிவு இல்லாவிட்டால் எரிமலை வெடித்துக் கனல் கக்கி இறுதியில் சாம்பலாகிப் போகும். இந்திய அரசிடமும் அரசமைப்பிடமும் சமூக நீதியை எதிர்பார்த்துக் காத்திருந்தது போதும். இவை சமூக நீதிக்குத் தடைகளாகி விட்டதை இப்போதாவது உணர்ந்து எரிமலை வெடிக் கட்டும்! எரிக்க வேண்டியவற்றை எரிக்கட்டும்!
தமிழ்த்தேசம் இதழ் – சித்திரை 2௦௦7 – ஆசிரியர்:தியாகு
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக