(தோழர் தியாகு எழுதுகிறார் 1 தொடர்ச்சி)
தோழர் தியாகு எழுதுகிறார் 2
காதல் விடுமையா? பாலியல் விடுமையா?
கிளாரா செட்கினுடன் பாலியல் சிக்கல்கள் குறித்து உரையாடுகிறார் மா இலெனின். இந்த உரையாடலின் போக்கில்தான் “கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு” எனும் பாலியல் விடுமைக் கொள்கை பற்றிப் பேசுகிறார்.
இளைஞர்கள் பலரும் தாங்கள் நம்பும் பாலியல் விடுமைப் போக்குதான் புரட்சியமானது என்று நம்புகின்றனர். இதுதான் பொதுமைத் தனமானது (கம்யூனிசுட்டுகளுக்குரியது) என்றும் புரிந்து கொள்கின்றனர். இலெனின் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. எம்மைப் போன்ற [அல்லது நம்மைப் போன்ற?] வயதானவர்களை இது ஈர்க்கவில்லை என்று சொல்லும் போது இலெனினுக்கு 50 வயதிருக்கலாம். கிளாராவுக்குக் கிட்டத்தட்ட 63. இலெனின் எச்சரிக்கையாகச் சொல்கிறார்:
“அடியேன் ஒன்றும் வாழ்க்கையை வெறுத்து விட்ட துறவி அல்லேன். ஆனால் இந்த இளைஞர்களின் — சிலநேரம் முதியவர்களின் — ‘புதிய பாலியல் வாழ்வு’ எனப்படுவது முழுக்க முழுக்க முதலாண்மைத்தனம் என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது, இது முதலாண்மைய விலைமாதர் விடுதிகளின் நீட்சிதான் எனத் தோன்றுகிறது. இதற்கும் பொதுமையராகிய நாம் புரிந்து கொண்டுள்ள காதல் விடுமைக்கும் பொதுவானது ஒன்றுமில்லை.”
காதல் விடுமை வேறு, பாலியல் விடுமை வேறு. இதைத்தான் கிளாராவிடம் இலெனின் விளக்கிச் சொல்கிறார். பாலியல் விடுமையை வலியுறுத்தும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாட்டைக் குறிப்பிட்டு “இது நம் இளையோரை வெறி கொள்ளச் செய்து, இளம் ஆண்பெண்களின் அழிவுக்குக் காரணமாகியுள்ளது என்று வருத்தப்படுகின்றார். காதல் விடுமைக்கு மாறான பாலியல் விடுமைக் குளறுபடிக்குப் பூசப்படும் மார்க்குசிய வண்ணப் பூச்சை இலெனின் உரித்தெறிகின்றார்.
இது என்ன வகையான மார்க்குசியம்? குமுகத்தின் [சமூகத்தின்] கருத்தியல் மேல்கட்டுமானத்தில் ஏற்படும் நிகழ்வுகள், மாற்றங்கள் அனைத்துக்கும் பொருளியல் அடிப்படையைக் காரணங்காட்டும் இவ்வகையான ‘மார்க்குசியம்’ காட்டுவது போல் இந்தச் சிக்கல் அவ்வளவு எளிமையானதன்று. மெய்யியல் அறிஞர் பிரெடெரிக்கு எங்கெல்சு நெடுங்காலமுன்பே வரலாற்றுப் பொருண்மியம் [‘வரலாற்றுப் பொருள்முதல்வாதம்’] தொடர்பாக இந்த உண்மையைச் சுட்டிக்காட்டினார் என்று இலெனின் நினைவுபடுத்துகிறார்.
“இந்தக் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு மார்க்குசியத்துக்கு அறவே புறம்பானது, மேலும் குமுகப் பகையான [சமூக விரோதமான] ஒன்று பாலியல் வாழ்வில் கருத்தில் கொள்ள வேண்டியது இயற்கை மட்டுமன்று. பண்பாட்டுத் தனித்தன்மைகளும்தாம். அவை உயர்வானவையா, கீழானவையா என்பதையும் கருதிப் பார்க்க வேண்டும்.” என்கிறார் மா இலெனின்.
பொதுவான பாலியல் வேட்கை தனியொருவரின் பாலியல் காதலாக வளர்ந்து செம்மையுறுவது எவ்வளவு முகன்மையானது என்பதை பிரெடெரிக்கு எங்கெல்சு குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற புகழார்ந்த நூலில் எடுத்தியம்பினார். எங்கெல்சின் இந்த விளக்கத்தின் அடிப்படையில் பாலியல் விடுமைப் போக்கை –– கோப்பைத் தண்ணீர்க் கோட்பாட்டை — இலெனின் குற்றாய்வு செய்வதை நாளை பார்ப்போம்.
இப்போதைக்கு ஒன்று: திருக்குறளில் அறம், பொருள் போலவே காமம் அல்லது இன்பத்துக்கும் நம் திருவள்ளுவப் பெருந்தகை தந்த இடத்தை எண்ணிப் பார்க்கிறேன். அவருக்குக் காவி உடுத்திக் காட்சிப்படுத்தும் கயவர்களின் கொலை வெறியை என்னென்பீர்! பாலியல் வேட்கையையும் அவ்வேட்கையின் நிறைவையும் அவர் போல் சுவைமிளிர வண்ணிக்க [வர்ணிக்க அல்ல, வண்ணிக்க] எவருளர்? குறளில் மிகவும் வலியுறுத்தப்படுவது பாலியல் விடுமையா? காதல் விடுமையா? என்பதற்கு ஒரு பட்டிமண்டபம் தேவையா?
தமிழ் என்ற சொல்லே இல்லாமல் தமிழ்மக்களின் அறநெறி வகுத்தது போலவே, காதல் என்ற சொல்லே இல்லாமல் காதல் நெறி போற்றியவர் நம் வள்ளுவப்பெருந்தகை.
தம் பிள்ளைகளின் காதலை ஏற்க மறுக்கும் தமிழாசிரியர் இருப்பின் அவரிடமிருந்து திருக்குறளைப் பறித்து விடுங்கள்.
தரவு: தியாகுவின் தாழி மடல் 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக