(தோழர் தியாகு எழுதுகிறார் 203 : நெல்லையில் ஊடகச் சந்திப்பு – தொடர்ச்சி)

கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்!

நெல்லை வரும் போதெல்லாம் சுடலைமாடன் தெருவில் தோழர் தி.க.சி.யைப் பார்த்துப் பேசாமல் திரும்ப மாட்டேன். என்னோடு உரையாடும் அந்தக் குறுகிய நேரத்தில் தன் மகிழ்வுகளையும் மனக்குறைகளையும் கொட்டித் தீர்த்து விடுவார்.

அவரது மனநிலையை அகவை முதிர்ந்த தந்தை தன் மகன் போன்ற ஒருவரைப் பார்க்கிற உணர்வு என்று சொல்ல முடியாது. நான் நெல்லை வரும் செய்தி கிடைத்ததிலிருந்தே வழி மேல் விழி வைத்து என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பார். உண்மையில் தாயைப் பார்த்த தனயனின் மனநிலையில்தான் பேசுவார். எது பற்றி எல்லாம் நான் எழுத வேண்டும் என்று அறிவுறுத்துவார். தன் கனவுகளையெல்லாம் எனக்குச் சொல்லி அவற்றை நான் மெய்படச் செய்ய வேண்டும் என்பார். அவர் என் மீது கொண்டிருந்த அந்தப் பெருநம்பிக்கையைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறேன்?

முன்பு திகசி அவர்களைப் பார்க்கும் துடிப்பு போல் இப்போது காலுடுவெல்லைப் பார்க்கும் துடிப்பு தொற்றிக் கொண்டது. காலுடுவெல் 1893ஆம் ஆண்டில் மறைந்து 130 ஆண்டுகளாகின்றன. சற்றொப்ப 54 ஆண்டுகள் அவர் வாழ்ந்த இடையங்குடியைப் பார்த்தால் என் மனத்துக்கு அவரைப் பார்த்தது போலவே இருக்கும்.

22/06 இரவு எனக்கு வசதியான அறையெல்லாம் ஏற்பாடு செய்து தங்க வைத்து விட்டுப் புறப்பட்ட பிரிட்டோ “அண்ணா, ஏதும் தேவை இருந்தால் கேளுங்கள்” என்றார். இடையன்குடிதான் வேண்டும், எப்படியாவது இடையன்குடி பார்க்காமல் நெல்லையிலிருந்து புறப்பட மாட்டேன் என்று விடையளித்தேன். அவர் இனிப்பான ஒரு செய்தி சொன்னார்:

“நாளை நீங்கள் இடையன்குடி போகலாம், உறுதியாக! ரெவரெண்ட் (அருள்திரு) கிப்சன் உங்களை அழைத்துப் போவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த சேகரகுரு. கூடுதலாக ஒன்று: நாளை குருக்களின் கூடுகையில் நீங்கள் காலுடுவெல் பற்றிச் சுருக்கமாகப் பேச வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அவருடனேயே நீங்கள் இடையன்குடி போகலாம்.”

ஊடகச் சந்திப்பு முடிந்தவுடன் பீட்டருடன் ஊசிக் கோபுரத் தேவாலயத்துக்கு விரைந்தேன். அருள்திரு கிப்புசன் (வயது 48) என்னை ஆர்வத்துடன் வரவேற்று அழைத்துப் போய் அந்தக் கூடுகையில் உட்கார வைத்தார். பேராயர் பருனபாசு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கழுத்து முதல் பாதம் வரைக்குமான வெண்ணிற நீண்ட அங்கி (CASSOCK) உடுத்தியிருந்தார். இடுப்பைச் சுற்றி இளஞ்சிவப்பு வண்ணப் பட்டை அணிந்திருந்தார். அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அதே வெண்ணிற அங்கியில் இடுப்பைச் சுற்றி கருப்புக் கயிறு கட்டியிருந்தனர்.

அது பெரிய வழிபாட்டுக் கூடமாக இருக்க வேண்டும். பேராயர் பேசி முடித்த பின் என்னைக் காலுடுவெல் பற்றிச் சிறிது நேரம் பேச அழைத்தார். கிப்புசன் என்னை அறிமுகம் செய்து சில வார்த்தைகள் பேசினார்.

முன்பே கிப்புசன் என்னை அரை மணி நேரம் வரை பேசச் சொல்லியிருந்தார். அவ்வளவு நேரம் பேசலாமா? என்ன பேசலாம்? நெல்லையில் கிறித்துவ சமயத்தை நிறுவிய காலுடுவெல் பற்றி கிறித்துவ அருள் தந்தைகளிடமே பேசுவது எப்படி? இப்படிப் பல தயக்கங்களோடுதான் பேசத் தொடங்கினேன்.

“உங்களிடையே காலுடுவெல் பற்றிப் பேசுவது கொல்லன் தெருவில் ஊசி விற்பதைப் போன்றது” என்று சொல்லித் தொடங்கினேன்.

நம்முடைய நாடு வெப்ப மண்டலத்தில் இருக்கிறது. இங்கு பிறந்த நமக்கு இந்த வெயில் தாங்கவில்லை. மின் விசிறி இல்லாமல் உட்கார முடியவில்லை. குளிரி(ஏசி) வசதி தேவைப்படுகிறது. குளிர் மண்டலத்தில் பிறந்த காலுடுவெல் வெப்பம் தகிக்கும் செம்மண் படர்ந்த தேரிக்காட்டில் இடையன்குடியில் ஐம்பதாண்டுக்கு மேல் வாழ்ந்துள்ள செய்தி அவரது அருப்பணிப்பைக் காட்டுகிறது. நெல்லைச் சீமையையே அவர் தமது தாய்மண்ணாக மதித்துள்ளார். இந்த மண்ணையும் மக்களையும் அவர் போல் நேசித்த அயலார் யாரும் உண்டா?

தமிழ்நாட்டில் காலுடுவெல் பாதம் படாத இடமில்லை. கால்நடையாகவே தமிழ்நாடெங்கும் சுற்றியுள்ளார். தஞ்சைப் பெரிய கோயிலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் அவரை வியப்பில் ஆழ்த்துகின்றன. அதை விடவும் தமிழ் மக்களின் பண்புகளைக் கண்டு வியக்கிறார்.

சமயப் பரப்பலுக்காகக் காலுடுவெல்லுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்த சில திருப்பணியாளர்கள் இந்நாட்டுக்கே உரித்தான வருண-சாதியமைப்பைக் கண்டு மிரட்சியுற்றார்கள். இயேசுவின் நிகர்மைச் செய்தியை இம்மண்ணில் ஊன்றுவதற்கு சாதி போடும் தடையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கில்லை. சாதியத்திடம் அவர்கள் சரணடைந்து விட்டார்கள். நொபிலி போன்றவர்கள் பார்ப்பனர்கள் போலவே உடுத்தி, பார்ப்பனர்களைப் போலவே நடந்து கொண்டார்கள்.

இராபருட்டு காலுடுவெல் இந்த வழியை ஏற்கவில்லை. தாம் பணியாற்ற வேண்டிய மக்களை அவர் சரியாகப் படித்தார். “திருநெல்வேலி சாணார்கள் ஒரு சித்திரம்” என்பதுதான் காலுடுவெல் எழுதிய முதல் நூல். 1849இல் ஆங்கிலத்தில் இந்நூல் வெளிவந்த போது அதைப் படிக்கும் அளவுக்குக் கல்வியறிவு பெற்ற நாடார் அல்லது சாணார் அநேகமாய் எவருமில்லை.

இன்று அதே நாடார் சமுதாயம் கல்வியில் வெகுவாக முன்னேறியிருக்கிறது, முன்னேறிய சைவ வேளாளர்களை விடவும் முன்னேறியிருக்கிறது. இதற்கு அடித்தளமிட்டவர் கால்டுவெல்தாம்.

அண்மையில் ஒரு முறை “காலுடுவெல் செய்த கலகம்” என்ற தலைப்பில் அரசியல் வகுப்பு எடுத்தேன். காலுடுவெல் மொழியியல் அல்லது மொழிநூல் துறையில் செய்த புரட்சி அறிவுலகில் பரவலாக அறியப்பட்ட ஒன்றுதான். அதற்கும் மேலே சமூகக் களத்திலும் அவர் கலகம் செய்தார்.

தம் பெயரையே எல்லிசன் என்று மாற்றிக் கொண்ட எல்லிசு தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் சமற்கிருதமாகிய வடமொழியைச் சார்ந்தவையல்ல என்று வேர்ச்சொல் ஆய்வு வழியில் மெய்ப்பித்தார். அவர் 41 அகவையில் மறைந்தார். எல்லிசின் பணியை காலுடுவெல் அறிந்தேற்கிறார்.

தமிழை முதற்பெரும் உறுப்பாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பம் என்ற வரையறை கால்டுவெல் செய்ததே. திராவிட மொழிகள் தென்னிந்தியாவில் மட்டுமல்ல, மத்திய இந்தியாவிலும் வடமேற்கு இந்தியாவிலும் கூட வழக்கில் இருப்பதை அவர் மெய்ப்பித்தார். திராவிட மொழிகளைச் செப்பமுற்ற மொழிகள், செப்பமுறாத மொழிகள் (திருந்திய மொழிகள், திருந்தா மொழிகள்) என்று வகைப்படுத்திப் பட்டியலிட்டார். நீலமலைத் தோடர்கள் பேசுவதும் ஒரு திராவிட மொழிதான்.

காலுடுவெல் செய்த ஆய்வில் குறை காண்போர் உளர். அதனால் அவரது மதிப்பு குன்றி விடாது. அறிவியலில் குறைகண்டு குறைகண்டுதான் முன்னேற்றம் ஏற்படும். கலிலியோவிடம் குறைகண்டால்தான் நியூட்டன், நியூட்டனிடம் குறைகண்டால்தான் ஐன்சுடைன், அவரிடமும் குறைகண்டால்தான் இசுடீபன் ஆக்கிங்கு. மொழியியல் அல்லது மொழிநூல் எனபதும் ஓர் அறிவியல்தான்.

காலுடுவெல்லிடம் சில குறைகள் கண்ட மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அதேபோது காலுடுவெல் செய்த புரட்சியை ஏற்றுப் போற்றவும் செய்தார். தனித்தமிழியக்க வரலாறு குறித்துப் பாவாணர் சொல்வார்:

“தமிழின் தொன்மையை உலகிற்கறிவித்தவர் காலுடுவெல் பெருமகனார்; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர்; செடியாகத் தழையச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகளார்! நான் மரமாக வளர்த்து வருகிறேன்.”

கால்டுவெல் செய்தது ஊடுடைப்பு (breakthrough), அடிப்படையான முன்னேற்றம், புரட்சியமான மாற்றம். இது மொழித் துறையோடு நிற்கவில்லை. காலுடுவெல்லின் மொழியியல் முடிவுகளே திராவிட இயல், தமிழியல் என்ற சமூக-அரசியல் போக்குகளுக்கும் விதையிட்டது, அல்லது உரமிட்டது. மொழி வரலாற்றில் மட்டுமல்ல, சமூக அரசியல் வரலாற்றிலும் காலுடுவெல் பதித்த முத்திரை உறுதியானது, நிலையானது.

காலுடுவெல்லின் பெரும்படைப்பு (magnum opus) A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH-INDIAN FAMILY OF LANGUAGES [திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம்] என்ற நூல் 1856ஆம் ஆண்டு வெளிவந்தது. 1875ஆம் ஆண்டு இதன் திருந்திய இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. முதல் பதிப்பு வெளிவந்த பின் திராவிட மொழிகளின் இலக்கணம் குறித்து வந்த புதிய செய்திகள் திருந்திய இரண்டாம் பதிப்பை வெளியிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின. ஆனால் மூன்றாம் பதிப்பை வெளியிட அவர் இல்லாமற்போனார். காலுடுவெல் மறைந்த பின் மூன்றாம் பதிப்பைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. மூன்றாம் பதிப்பில்தான் ‘அவர்கள்’ தங்கள் வேலையைக் காட்டினார்கள்.

இரண்டாம் பதிப்புக்கும் மூன்றாம் பதிப்புக்கும் பாரிய வேறுபாடுகள் இருந்தன. காலுடுவெல் எழுதிய பல பக்கங்கள் பதிப்பாசிரியர்களால் உள்நோக்கத்தோடு நீக்கபட்டிருப்பதை இன்றைய தமிழியல் மாணவர்கள் வெளிபடுத்தியுள்ளார்கள். அது என்ன உள்நோக்கம்? சாதிய நோய் பீடித்த உள்ளங்களுக்குக் கால்டுவெல்லின் அறச் சிந்தனைகள் உவப்பாய் இல்லை. காலுடுவெல்லைக் குழுதோண்டிப் புதைத்து வரலாற்றிலிருந்து காணாமல் அடிக்கும் முயற்சிதான் அது.

கால்டுவெல்லைக் கடுமையாக வெறுத்தவர்களில் ஒருவர் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்பதைக் கேட்க உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஆம், திருவிதாங்கூரின் அடிமைமுறையையே ஆதரித்த வேளாளச் சிந்தனைக்கு கால்டுவெல்லின் அறச் சிந்தனை கசக்கத்தானே செய்யும்?

தமிழ்மொழியை வடமொழித் தளையிலிருந்தும் தமிழ் மண்ணைச் சாதிய இருளிலிருந்தும் மீட்டெடுக்க அயாரது பாடாற்றியவர் இராபருட்டு காலுடுவெல். அவரிடமிருந்து ஆய்வுக் கலையைப் பயின்றால் போதாது. ஒடுக்குண்ட மக்களிடம் அவர் காட்டிய நேசத்தை, எதிர்ப்புக்கஞ்சாத நெஞ்சுரத்தை நாமும் வரித்துக் கொள்ள வேண்டும்.

காலுடுவெல் வாழ்ந்து பணியாற்றிய காலத்தை விடவும் இது கடினமான காலம். மணிப்பூரிலிருந்து வரும் செய்திகள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. நாட்டை இருளில் தள்ள நடக்கும் முயற்சிகளை எதிர்த்து மக்களுக்கு விழிப்பூட்டும் பெரும்பணியில் இன்றே நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்.

உரையை முடிக்கும் போது இப்படிச் சொன்னேன்:

“பேசியது போதும் என்று நினைக்கிறேன், காலுடுவெல் வாழ்ந்த மண்ணைப் பார்க்கும் அவசரத்தில் உள்ளேன். புறப்படுகிறேன். நன்றி வணக்கம்.”

அருள்திரு சேகரகுருக்கள் பலரும் என்னைக் கைகுலுக்கிப் பாராட்டினார்கள். சிலர் “காலுடுவெல் பற்றி நீங்கள் சொன்ன செய்திகள் இது வரை நாங்கள் அறியாதவை” என்றார்கள்.” கூடுகையில் கலந்து கொண்ட சேகரகுருமார்கள் 144 பேர் என்பதைப் பிறகு அருள்திரு கிப்புசன் சொன்னார்.

பகலுணவு முடித்துக் கொண்டு அருள்திரு கிப்புசன், அன்பர் நெல்லை பீட்டர் ஆகியோருடன் இடையன்குடி நோக்கிய பயணம் தொடங்கியது. இரு நாட்களாகவே எங்களை எல்லா இடத்துக்கும் அழைத்துச் சென்று கொண்டிருந்த ஓட்டுநர் பாலுவிடம் “இனி வேறு எங்கும் போக வேண்டா, நேராக இடையன்குடிதான்” என்றேன். ஆகட்டும் என்றார். கடைசியாக 1998ஆம் ஆண்டு மரணத் தண்டனை எதிர்ப்புப் பயணத்தின் போது இந்தப் பகுதியில் – கன்னியாகுமரி, இராதாபுரம், கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி – கிடைத்த பட்டறிவு பற்றிப் பேசிக் கொண்டே பயணத்தில் பறந்து கொண்டிருந்தோம். நல்ல வெளிச்சம் இருக்கும் போதே இடையன்குடி சென்றடையும் துடிப்பில் வழியில் எதற்காகவும் நில்லாது சென்றோம். (இடையன்குடிச் செய்திகள் ஒருநாள் இடைவேளைக்குப் பின் சொல்கிறேன்.)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 232