(தோழர் தியாகு எழுதுகிறார் 199 : அணையாத் தீ – தொடர்ச்சி)

மோதி வாயில் கொழுக்கட்டை!

மணிப்பூர் எரிகிறது! மக்கள் கொலையுண்டு மடிகின்றார்கள்! மத வழிபாட்டுக் கூடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்டுகின்றன. கொடிய கொலைக் கருவிகளோடு வன்முறைக் கும்பல்கள் அலைந்து திரிகின்றன! மாநில முதல்வரே ஒருதரப்பு மக்கள் மீது வெறுப்புமிழ்ந்து வன்முறையைத் தூண்டி விடுகின்றார்! இந்திய உள்துறை அமைச்சரோ மணிப்பூர்த் தீயில் குளிர்காய்ந்து அரசியல் பழி விளையாட்டில் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்!

இத்தனையும் நடக்கும் போது இந்தியப் பெருநாட்டின் தலைமையமைச்சர் நரேந்திர மோதி இது குறித்து வாயே திறந்தாரில்லை.

2023 ஏப்பிரல் 27ஆம் நாள் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தலைமை
நீதியர் (தமிழ்நாட்டுக்காரர்) எம்.வி. முரளிதரன் வழங்கிய தீர்ப்புதான் முதலில்
கலகத்தைத் தூண்டியது. 
மைத்தி சமுதாயத்தை அட்டவணைப் பழங்குடியாக வகைப்படுத்த இந்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை வழங்க நான்கு மாத அவகாசம் கொடுப்பதுதான் இந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. மைத்தி சமுதாயத்தைப் பழங்குடி அட்டவணையில் சேர்ப்பது ஏற்கெனவே அந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ள குக்கி, சோ போன்ற பழங்குடிச் சமுதாயங்களின் உரிமைகளை, முகன்மையாக நிலவுரிமைகளை, அச்சுறுத்துவதாக இருக்கும். இது இனமோதல் ஏற்படத் தூண்டுதலாக அமைந்து விட்டது.

மேத் திங்கள் முழுக்க மணிப்பூரில் மைத்தி சமுதாய மக்களும் குக்கி சமுதாய மக்களும் மூர்க்கமாக மோதிக் கொண்டனர். மே 3 தொடக்கம் படுகொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்தன. சற்றொப்ப ஓரிலக்கம் (ஒரு இலட்சம்) பேர், பெரும்பாலும் குக்கிப் பழங்குடி மக்கள், பெரும்பாலும் கிறித்துவர்கள், வீடு வாசல் இழந்து ஏதிலிகளாக விரட்டப்பட்டனர். வழிபாட்டுக் கூடங்கள், முக்கியமாகக் கிறித்துவ தேவாலயங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. தாக்கி அழிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டன. காவல்துறையும் பிற ஆய்தப் படைகளும் இந்தக் குற்றங்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தன என்று சொல்வது குறைக்கூற்றே ஆகும். ஏனென்றால் இரு தரப்புக்கும் காவல்துறையே ஆய்தங்கள் வழங்கிற்று.

மணிப்பூர்த் தேசம் குருதியில் மூழ்கிய அந்த மே மாதத்தில் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி என்ன செய்து கொண்டிருந்தார்? கருநாடக மாநிலத்தில் தெருத்தெருவாகச் சென்று வாக்கு வேட்டையாடிக் கொண்டிருந்தார். தமது தலைமையில் நாடு கண்டுள்ள முன்னேற்றம் பற்றி ஓங்கி முழங்கிக் கொண்டிருந்தார். ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை மணிப்பூர் பற்றி உச்சரிக்கவில்லை. கருநாடகத் தேர்தல் முடிந்தது. மோதியை சந்திக்க அனைத்துக் கட்சிக் குழு ஒன்று காத்துக் கிடந்தது. தேசத் தலைவர் இப்போது உலகத் தலைவர் அல்லவா? நேரமில்லை என்று அமெரிக்கா புறப்பட அணியமாகிக் கொண்டிருந்தார்.

பெரும்பாலும் கிறித்தவர்களான மலைவாழ் மக்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாவது பற்றி வருந்த ஆர்எசுஎசு மரபில் ஊறிய நரேந்திர மோதிக்கு மனமில்லை. இசுலாமும் கிறித்துவமும் அவரைப் பொறுத்த வரை அயல் சமயங்கள். வடகிழக்கு மாநிலங்களை ஆர்எசுஎசு, பாசக வலையில் வீழ்த்தப் பற்பல முறை வடகிழக்கு இந்தியாவுக்கு ‘திக்விசயம்’ புரிந்த மோதிஐயா சரியாக மணிப்பூர் எரியும் நேரம் பார்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். ஆர்எசுஎசு – பாசகவும், மாநில பாசக முதல்வர் பிரேன் சிங்கும் கக்கிய வெறுப்புத் தீயில் மணிப்பூர் எரிந்து கொண்டிருந்தது.
மே மாதத்தில் உள்துறை அமைச்சர் அமித்துசா கருநாடகத்தில் காய்ந்து கருகிக் கொண்டிருந்த தாமரையை மீண்டும் மலரச் செய்ய முட்டி போட்டுக் கொண்டிருந்தார். கருநாடகத் தோல்வி மூட்டையைச் சுமந்து கொண்டுதான் மணிப்பூர் சென்றார். அவரது பயணத்தால் உருப்படியான பயன் ஏதும் விளையவில்லை என்பது நடுநிலையாளர் கருத்து. உண்மையில் அவரது பயணம் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதாகவே அமைந்தது. அடுத்த தேர்தலைப் பற்றி மட்டுமே சிந்திக்கத் தெரிந்த, அதற்கேற்ப சூழ்ச்சித் திட்டங்கள் வகுக்க மட்டும் தெரிந்த இழிதகை அரசியலரே அமித்துசா. அதால்ஃப் இட்லருக்கு வாய்த்த கோயபல்சு (அல்லது சீபெல்சு?) போல் நரேந்திர மோதிக்கு வாய்த்த அமித்துசா!

நடுவணரசிலும் பாசக, மணிப்பூர் மாநில அரசிலும் பாசக! இதற்குப் பெயர் ‘இரட்டை இழு பொறி (எஞ்சின்) சருக்கார்’! வலுமிக்க ஆட்சியாம்! பாசக ஆட்சியில் வகுப்புவெறி வன்முறைக்கு இடமிருக்காது என்ற பீற்றல் மணிப்பூரில் பிய்ந்து தொங்குகிறது. இது பற்றிய கவலை பிரேன் சிங்குக்கும் இல்லை! அமித்சாவுக்கும் இல்லை! அகன்ற மார்போடு அகிலம் சுற்றும் அசகாய சூரர் நரேந்திர மோதிக்கு இருக்க வேண்டாமா? எவன் செத்தால் எனக்கென்ன? என்று வெள்ளை மாளிகையில் விருந்துண்டு, பிதேன் இணையருக்கு வைரம் பரிசளித்து, கொசுறாக ஆய்தக் கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொண்டு தேச நலன் காத்து நெஞ்சு நிமிர்த்திக் கொண்டிருக்கிறார். மற்றதெல்லாம் இருக்கட்டும், குசராத்து – 2002, மணிப்பூர் – 2023 இரண்டையுமே மறந்தும் மறைத்தும் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இல்லையோ என்ற சிறு ஐயத்தையே எள்ளி நகையாடுகின்றார்.

வகுப்பு மோதல் வன்முறையை விரிவாக ஆய்வு செய்துள்ள உ.பி. முன்னாள் காவல்துறைத் தலைவர் முனைவர் விபூதி நாராயண்ராய் கூறியுள்ள படி, ஆட்சியில் உள்ள அரசியல் தலைமை மனம் வைத்தால் எவ்வளவு பெரிய வகுப்புக் கலவரத்தையும் 48 மணிநேரத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதோ மணிப்பூரில் சற்றொப்ப இரு திங்களாயிற்று, வன்முறை தணிந்த பாடில்லை. வன்முறையைக் கட்டுபபடுத்த ‘இரட்டை இழுபொறி(எஞ்சின்) சர்க்கார்’ விரும்பவில்லை என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

தூண்டில்காரனுக்குத் தெப்பத்தில் கண் என்பது போல், இந்திய ஆளும் கும்பலுக்குப் பழங்குடி மக்களின் பாதுகாப்பில் இருக்கும் வனத்திலும் நிலத்திலும் கண்! பிரேன் சிங்கு அரசின் நிலவெளியேற்ற நடவடிக்கைகள், உயர் நீதிமன்றத்தின் பொறுப்பற்ற தீர்ப்பு, இருமாத கால வன்முறை வெறியாட்டங்கள், இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் மோதியின் அழிச்சாட்டிய ஊமைத்தனம்… எல்லாமே மணிப்பூரின் வனத்தையும் வளத்தையும் பன்னாட்டுக் குழுமங்களுக்கும், மார்வாரி, குசராத்தி பெருமுதலாளர்களுக்கும் அள்ளிக் கொடுப்பதற்காகவே! இதற்குப் பொருத்தமான அரண் அமைத்துக் கொடுக்கவே ஆர்எசுஎசு – பாசகவின் பார்ப்பனிய இந்துவெறி அரசியல்!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் நரேந்திர மோதி முக மலர்ச்சியோடு பெருமிதம் பொங்க உரை நிகழ்த்தக் கண்டீர்களா?

அண்மையில் ஐயா நக்கீரன் அவர்கள் தாழி மடலுக்கு எழுதிய ஒரு செய்தியை மறந்து விடாதீர்கள்:
“மேற்கு நாடுகளில் மதசார்பின்மைக் கோட்பாட்டை கட்டாயமாக கடைப்பிடிக்கிறார்கள். கனடா நாடாளுமன்றம் தொடங்கும் போது விவிலியத்தில் இருந்து பாடல்களைப் பாடுவார்கள். கனடிய நாடாளுமன்றத்துக்குக் கிறித்து அல்லாதவர்கள் வரத் தொடங்கிய பின்னர் அந்த நடைமுறையை நிறுத்தி விட்டார்கள்!

“அமெரிக்காவில் ஒரு நீதிமன்ற வளாகத்துக்குள் பைபிள் வாசகம் ஒன்றை ஒரு கல்லில் பொறித்து வைத்திருந்தார்கள். அண்மையில் அது அரசின் மாசார்பின்மைக் கோட்பாட்டுக்கு முரணாக இருப்பதாகச் சொல்லி அதனை அகற்றி விட்டர்கள்.”

கனடாவிலும் அமெரிக்காவிலும் உலகியத்தின் (மதச் சார்பின்மையின்) வலிமை இத்தகையது. மோதியின் இந்தியாவில்? புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பின் போது என்னவெல்லாம் நடந்தது? நரேந்திர மோதி அவர்களே கணபதி ஃகோமம் வளர்த்த செய்தி பார்த்தீர்களா? கணபதியும், கஜமுகனும், வீர விக்கினேசுவரனும் ஆகிய பிள்ளையாருக்குப் படைத்த பூரண கொழுக்கட்டையை விழுங்க முயன்று வாயிலேயே வைத்துக் கொண்டாரோ? அதனால்தான் மணிப்பூர் குறித்து வாய்திறக்க முடியவில்லையோ?
மோகன் பகவத்துக்கே வெளிச்சம்!

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 228