(தோழர் தியாகு எழுதுகிறார் 201 : சாத்தான்குளம் பென்னிக்குசு செயராசு – தொடர்ச்சி)

எப்படிச் செத்தார் புளியங்குடி தங்கசாமி?

தென்காசி மாவட்டம் புளியங்குடி நடுக்கருப்பழகுத் தெருவைச் சேர்ந்த தங்கசாமி (த/பெ மாடசாமி) சென்ற 11.06.2023 அன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை.

அவர் வெளியூர் வேலைக்குச் செல்வதும், அங்கேயே தங்கி விடுவதும் வழக்கமே என்பதால் குடும்பத்தினர் – அம்மாவும், தம்பி ஈஸ்வரனும் – நண்பர்களும் பெரிதாக அலட்டிக் கொண்டார்களில்லை. தங்கசாமி மறு நாளும் வரவில்லை, அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பும் இல்லை. அவரது செல்பேசியும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது.

கவலையுற்ற தாயும் தம்பியும் நண்பர்களும் தங்கசாமி வேலைக்குச் செல்லக் கூடிய இடங்களில் எல்லாம் தேட முற்பட்டார்கள். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஒரு நாள், இரு நாள், மூன்று நாளாயிற்று.

நான்காம் நாள், 14/06 மாலை 5.30 மணியளவில் புளியங்குடி ஊர் நாட்டாமையைக் கூப்பிட்டனுப்பிய புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருட்டிணன், தங்கசாமி பற்றி விசாரிப்பது போல் விசாரித்து விட்டுக் கடைசியில் சொன்னார்: “தங்கசாமி பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைத்துச் செத்துப் போய் விட்டான்.”

குடும்பத்தினரும் ஊர் மக்களும் இச்செய்தி அறிந்து காவல் நிலையத்துக்குச் சென்றார்கள். ஆய்வாளர் பாலகிருட்டிணன் அவர்களிடம் சொன்னார்: “நாங்கள் இருசக்கர வாகனம் ஒன்றைப் பிடித்து வைத்திருந்தோம், அது தனக்குச் சொந்தம் என்று கேட்டு வாங்கிப் போக தங்கசாமி காவல் நிலையத்துக்கு வந்தான். நாங்கள் அவனைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தோம். இன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைத்து அவன் இறந்து விட்டதாகத் தகவல் வந்துள்ளது. உடல் இப்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது.”

மறுநாள் 15/06 காலையில் தங்கசாமியின் தம்பி ஈசுவரன், உறவினர்கள் கணேசன், சிவராசு, கருப்பசாமி, அமிர்தராசு ஆகிய ஐவரும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பிணவறையில் தங்கசாமியின் உடலைப் பார்த்தனர். உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு, காணொளியும் நிலைப்படமும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் பிணவறையிலிருந்து வெளியே வந்த பின் பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சதீசுகுமார் செல்பேசியைப் பிடுங்கிக் காணொளிப் பதிவுகளை அழித்து விட்டார். “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று ஈசுவரன் கேட்ட போது உதவி ஆணையர் விடையே சொல்லாமல் கோபமாக முறைத்து விட்டுப் போய் விட்டார்.

தங்கசாமியின் இறப்பு பெருமாள்புரம் காவல் நிலையக் குற்ற எண் 255/2023இல் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்ட ஈசுவரன் சடலக் கூறாய்வு அறிக்கையும் கூறாய்வின் போது எடுத்த காணொளிப் பதிவும் வேண்டுமென்று கேட்டு அன்றே வழக்கறிஞர் உதவியோடு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விண்ணப்பித்தார். திருநெல்வேலி நீதித்துறை நடுவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் மின்னஞ்சலில் விண்ணப்பிக்கப்பட்டது. அன்று மாலையே உடற்கூறாய்வு அறிக்கை தரப்பட்ட போதிலும், காணொளிப் பதிவுகள் தரப்படவில்லை.

தங்கசாமியின் சடலக் கூறாய்வு அறிக்கையின் படி அவரது உடலில் 7 காயங்கள் காணப்பட்டுள்ளன. இறப்புக்கு 3-4 நாள் முன்னதாக அந்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தக் காயங்கள் ஏற்படுவதற்கான வன்முறைத் தாக்குதல் புளியங்குடி காவல் நிலையத்தில் நடந்ததா? அல்லது பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் நடந்ததா? என்று உறுதியாகத் தெரியவில்லை. எது எப்படியானாலும் காவல் சித்திரவதையால்தான் அவர் உயிரிழந்தார் என்பதில் ஐயமில்லை. சட்டப் புறம்பான இந்தச் சித்திரவதை யாரால் எங்கே செய்யப்பட்டது என்பதை முறையான புலனாய்வில்தான் கண்டறிய முடியும்.

தங்ககசாமியைப் பிடித்த (கைது செய்த) புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் அதற்கான கைதுக் குறிப்பாணை வழங்கினாரா? குடும்பத்தாருக்குத் தகவல் கொடுக்கவில்லை. டிகே பாசு நெறிமுறைகள், சைலேந்திரபாபுவின் 41 கட்டளைகள் எதையாவது கடைபிடித்தரா? புளியங்குடி காவல் நிலையத்தில் கண்காணிப்புப் படக் கருவிகள் உள்ளனவா?

தங்கசாமியைக் காவலில் வைத்து(‘ரிமாண்டு’ செய்து) நீதித்துறைக் காவலுக்கு அனுப்பி வைத்த சிவகிரி நடுவர் அவரிடம் ஏதாவது கேட்டறிந்தாரா? அவரை ஏறெடுத்துப் பார்த்தாரா? தலைகுனிந்தபடி காவல் ஆணையில் ஒப்பமிட்டு அனுப்பி விட்டாரா?

பாளையங்கோட்டை மத்தியச் சிறை அதிகாரிகள் தங்கசாமியை சிறைக்குள் சேர்த்துக் கொண்ட போது அவரிடம் என்ன கேட்டார்கள்? அவரை மருத்துவ ஆய்வுக்கு அனுப்பினார்களா? சிறைக்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு உடனே அனுப்பி விட்டதாகவும் சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அவர் இங்குக் கொண்டுவரப்படும் போதே பிணமாகத்தான் இருந்தார் என்று மருத்துவமனை அதிகாரிகள் சொல்கிறார்களாம். அப்படியானால் வரும் வழியில் உயிர் போய் விட்டதா? உண்மை தெரிய வேண்டும்.

தமிழ்நாட்டில் இனிக் காவல் கொட்டடிச் சாவே நிகழாது என்று உறுதி கொடுத்த முதலமைச்சர் மு.க. தாலினுக்குப் புளியங்குடி தங்கசாமியின் சாவு பற்றித் தெரியுமா?

தங்கசாமி தணிந்தசாதி(தலித்து) என்பதால் குற்றவாளிகள் மீது ப.சா.,ப.இ, (எசுசி, எசுடி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளான காவல் அதிகாரிகளையும் சிறை அதிகாரிகளையும் சிறைப்படுத்த வேண்டும். நம்பகமான விசாரணை வேண்டும். தங்கசாமி குடும்பத்தார்க்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காகப் புளியங்குடியில் ம.பொ.க.(சிபிஎம்), இ.பொ.க.(மா.இலெ.)(சிபிஐ(எம்எல்)), விசிக, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்த் தேசிய அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து போராடி வருகின்றன. காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டு விரிவாகப் பேசினேன்.

இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே மாவட்ட ஆட்சியர் மறைந்த தங்கசாமியின் தாயாரை அழைத்துப் போய் உடலை வாங்கிக் கொள்ளச் சொல்லிப் பேரம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவரும் இந்தப் பேரத்தில் மும்முரமாய் ஈடுபட்டிருப்பதாக அறிந்தேன்.

புளியங்குடியில் நடந்தது என்ன? நடக்க வேண்டியது என்ன? எல்லாவற்றையும் சாத்தான்குளத்திலிருந்து புளியங்குடிக்கு நீண்ட சாலைப் பயணத்தின் போது எனக்கு விளக்கிச் சொன்னவர் வழக்கறிஞர் மாடசாமி. தமிழ்நாட்டைக் காவல் சித்திரவதை இல்லாத தேசமாக்கும் முயற்சியில் தோழர் மாடசாமி போன்றவர்களின் உழைப்பு மகத்தானது. நமக்கு ஊருக்கு ஊர் மாடசாமிகள் தேவை.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 2
30