எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர்  செல்வி திட்சிகா சிறிபாலகிருட்டிணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம்.
எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள் நண்பியின் பிரிவுத் துயரத்தில் உறைந்திருக்கும் குடும்பத்தினரின் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தனது சிறு வயதிலிருந்தே தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் முழுவீச்சாகச் செயற்பட்டார், புதிய புதிய சிந்தனைகளில் தமிழ் மக்களின் துயரங்களை அனைத்துலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை அவர் மனத்தில் வேரூன்றி நின்றது.
பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பை முன்னேற்றப் பாடுபடுகின்ற தூண்களில் ஒருவராக இருந்தவர் திக்சிகா. அவரின் ஒருங்கிணைப்பில் பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் பொழுது புற்றுநோய் என்னும் கொடிய நோய் அவரை எங்களிடமிருந்து பறித்துச் சென்றுள்ளது.
தமிழ்ச் சமூகத்தினரிடையே இந்தப் புற்றுநோய் பெருமளவில் பரவிக்காணப்படுகின்றது. இன்று எம்மவர்களிடையே இதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இது தொடர்பான கருத்தரங்குகளும் இன்றியமையாத தேவையாக உள்ளன.
தமிழ் மருத்துவ அமைப்புகள் இதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டுமென இவ்வேளையில் தாழ்மையாக வேண்டுகின்றோம்.
திட்சியின் இழப்புத் தமிழீழம் நோக்கிப் பயணிக்கும் எங்களுக்குப் பேரிழப்பாக அமைந்துள்ள போதும், திட்சிகா வழிகாட்டிய பாதையில் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாங்கள் எங்கள் இலட்சியத்தை வென்றெடுக்கும் பணிகளில் மிகுந்த உள்ளுயிர்ப்புடன் செயற்படுவோமென உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.
பிரிவுத் துயரோடும் இலட்சிய உறுதியோடும்
தமிழ் இளையோர் அமைப்பு
பிரித்தானியா