தமிழால் இணைவோம்…!

தமிழ் இந்திய மொழிகளுள் ஒன்று மட்டுமல்ல, ஓர் உலகமொழியாகவும் திகழ்கிறது. ஆங்கிலம், சீனம், இசுபானிசு மொழி போன்று உலகெங்கும் பேசப்பட்டுவரும் மொழி நம் தமிழ்மொழி என்பதனைப் பெருமையுடன் நாம் அனைவரும் கூறலாம்.
உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களால் தமிழ் பல சிறப்புகளைப் பெற்று புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, மலேசியா, மொரீசியசு நாட்டிலும் தொடர்பு மொழியாக இருப்பதுடன் தமிழ், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்றே ஆத்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா, தமிழ், கல்விக்கூடங்களில் மாணவர்களால் படிக்கப்படுகிறது. அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் நார்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து நாடுகளில் பள்ளிப்பிள்ளைகள் ஆர்வத்துடன் தமிழ் பயில்கிறார்கள். சீனப் பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கப்பட்டு வருவதுடன் சீன வானொலியில் தமிழ்ப்பிரிவு சிறப்பாக இயங்கிவருகிறது. இவ்வாறு உலகெங்கும் பரவி வளர்ந்துவரும் தமிழுக்கு ஓர் ஊக்க ஊற்றாகவே உலகத் தமிழ் மாநாடு அமைந்துள்ளது எனலாம்.
அரை நூற்றாண்டுக்கு முன், 1966-ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வந்த தனிநாயக அடிகளார் உலகெங்கும் வாழும் தமிழர் ஒன்றுகூடித் தமிழ்வளர்ச்சி குறித்த திட்டங்களை இயற்றவும், விவாதிக்கவும் மாநாடு நடத்தவேண்டுமென்று கனவு கண்டார். அப்போது மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலேசிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மாநாடு வெற்றியுடன் நடத்திச் சாதித்துக்காட்டினார். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் புறநானூற்றுப் பாடல் அடியை மாநாட்டின் குறிக்கோள் வாசகமாக்கினார். தமிழர்கள் அனைவரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து தமிழால் ஒன்றுபட வேண்டும் என்பதே அவர் கண்ட கனவாகும்.
1966-ஆம் ஆண்டு நடந்த அம்மாநாட்டுக்குப் பின்னர் 1968-ம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகர், சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்றது. அப்போது முதல்-அமைச்சராக விளங்கிய அறிஞர் அண்ணா அம்மாநாடு சிறப்பாக நடைபெற எல்லா வகையிலும் ஈடுபட்டு உழைத்தார். அப்போதுதான் சென்னைக் கடற்கரையில் தமிழ்ச்சான்றோர்களின் சிலைகள் நிறுவப்பெற்றன. தமிழ்நாட்டின் மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கை உருவாக்கப்பட்டது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் அமைக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு நடத்தப்பட வேண்டுமென்னும் நடைமுறை வகுக்கப்பட்டு 1970-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பாரீசு நகரில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாட்டிலிருந்து, அப்போது முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், ஒரு குழு சென்று கலந்துகொண்டது. இந்த வரலாறு நீண்டு கொண்டே செல்லும். எனினும் 1981-ஆம் ஆண்டு மதுரையில் அப்போதிருந்த முதல்-அமைச்சர் எம்ஞ்சியாரின் ஈடுபாட்டால் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு அப்போதிருந்த முதல்-அமைச்சர் செயலலிதாவால் நடத்தப்பட்டது.
இப்போது பத்தாவது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் இன்று (சூலை 4) தொடங்க உள்ளது. நூற்றுக்கணக்கான அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கோணங்களில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்க உள்ளார்கள். தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் எனத் தமிழின் தொன்மையான நூல்களைப் புதிய கோணங்களில் ஆராய்ச்சி செய்யும் கட்டுரைகள் வழங்கப்படவுள்ளன. இத்துடன் நில்லாமல் தமிழரின் தொன்மையைக் கண்டறிய உதவும் கல்வெட்டுகள், வரலாற்று ஆவணங்களும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் புதிய உண்மைகள் உலகுக்கு வழங்கப்படும் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
கணினித்துறையில் ஏற்பட்டுள்ள கண்டுபிடிப்புகளைக் கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு ஆவன செய்தற்குரிய திட்டங்கள், கீழடியில் அண்மையில் கண்டறியப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் அறியலாகும் தமிழர் வரலாறு போன்ற பயனுள்ள ஆய்வுகளை இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் காணும்போது மனம் மகிழ்கிறது.
தமிழறிஞர்களின் ஒருமித்த முயற்சியால் தமிழ் பல புதிய ஆக்கங்களை இம்மாநாட்டின் மூலம் அடையும் எனவும், தமிழருக்குப் புதிய அறிவுத்துறைகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் எனவும் நம்புகிறோம்.
பத்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் தமிழறிஞர்களையும் உலகெங்குமிருந்து இம்மாநாட்டுக்கு வரும் அறிஞர்களையும் வாழ்த்துவோம். தமிழால் இணைவோம். வெல்க தமிழ்.
முனைவர் மறைமலை இலக்குவனார்,
சிறப்பு வருகைப் பேராசிரியர்,
கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.
தினத்தந்தி நாள் சூலை 4, 2019