உலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம்! இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான
நினைவேந்தல்!
மே 18 ஆம் நாளும் இவ்வாரமும் மனித நேயர்களால் மறக்க முடியாத துயர நாள்!
தாய் மண்ணில் உரிமையுடன் வாழ எண்ணியவர்களுக்கு ஆளும் கொடுங்கோல் அரசும் அதற்குத் துணை நின்ற பன்னாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களும் கொடுமையான முறையில் மரணத்தைப் பரிசாகத் தந்த வாரம்!
1,70,000 ஈழத் தமிழர்கள் உயிரிழப்பு, பல்லாயிரவர்கள் உடலுறுப்பு இழப்பு, உடைமைகள் இழப்பு, இருக்க இடமோ உண்ண உணவோ இன்றித் துன்பக்கடலில் மூழ்கடிப்பு!
இக்கொடுமைகள் அந்த வாரத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து சிறை முகாம்களில் அடைப்பு!
அண்மையில் தமிழ் நிலத்தின் கிறித்துவ ஆலயங்களில் தமிழ் வழிபாட்டு நேரங்களில் தொடர் குண்டு வெடிப்பு மூலம் இன அழிப்பு அரங்கேறியது போல் தொடரும் இனஅழிப்புகள்!
கட்டாயக் கருத்தடை மூலம் இன அழிப்புகள்!
என அடுக்கிக் கொண்டே போகும் வண்ணம் இன அழிப்புத் துயரம் தொடர்கிறது.
இதற்குக் காரணம் இன அழிப்புக் கொலையாளிகளும் கூட்டாளிகளும் தண்டிக்கப்படாமைதான்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும். இல்லையேல் இன அழிப்பு தொடரும் என்பதே நிலைமை
இன்றைய நாள் என்பதில் பார்த்த இணையத் தளங்களில் மே 18 (2009)என்பது இலங்கை உள்ளாட்டுப் போர் முடிவிற்கு வந்ததாகவும் விடுதலைப்புலிகள் இலங்கை அரசால் தோற்கடிக்கப்பட்டதாகவும் குறிப்பு உள்ளது. சிலவற்றில் தமிழர் படுகொலை எனக் குறிக்கப்படவில்லை. குறைவான(40,000) எண்ணிக்கையில் தமிழர்கள் போரில் இறந்தனர் என்ற குறிப்பு உள்ளது. இனப்படுகொலைத் துயர நாள் என்பது நாம் வாழும் பொழுதே வரலாற்றில் இடம் பெறவில்லை எனில் பின்னவர் எங்ஙனம் அறிவர்? இன்றைய தலைமுறையினர் துயர் துடைக்க எங்ஙனம் எழுவர்?முயல்வர்? வெல்வர்?
எனவே, தமிழ் மக்களே!
மனித நேயர்களே!
நினைவேந்தல் கடைப்பிடியுங்கள்! அத்துடன் உண்மை வரலாற்றை முடிந்த இடங்களில் பதியுங்கள்!
தமிழர் உரிமைகளும் உயிர்களும் பறிக்கப்படும் வரலாற்றுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதுங்கள்!
இதுவே களத்திலும் நிலத்திலும் மடிந்தவர்களுக்காக நாம் செய்யும் நினைவேந்தல் ஆகும்.
பல்வேறு காலக்கட்டங்களிலும் கூட்டு இனப்படுகொலை வாரத்திலும் உயிர் பறிக்கப்பட்ட ஈகையர்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக