பொங்குக புதுமை!
ஞாயிறன்று பொங்கல்! அதனைத் தமிழர் திருநாளெனக் கொண்டு போற்றி வாழுபவர். தமிழரெல்லோருக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அனுப்புகிறோம் அன்புடன். தமிழர வாழ்வே, நம் வாழ்வு எனக் கொண்டு பணியாற்றி, தமிழ் வாழத் தமிழர் வாழ்வர், தமிழர் வாழத் தமிழ்நாடு தழைக்கும் எனக்கூறி அதற்கெனப் பாடுபடும் நாம் தமிழரின் திருநாளன்று நமது அன்பு மொழியைத் தமிழர் இல்லந்தோறும் அனுப்பி, தமிழர் உள்ளமெல்லாம் செல்லச் செய்ய அவாவுறுகிறோம்.
தமிழரின் களிப்பைக் கண்ணாரக் கண்டார், காண வேண்டிய காட்சியைக் கண்டு தீர்ந்துவிட்டது என்ற உள்ளூர எண்ணும் நாம், இவ்வாண்டுப் பொங்கற் புதுநாளன்று பொன், மணி தர முன்வரவில்லை! தமிழர் அதனை நாடார்; தேடார்; பிறர் கைநோக்கி நிற்கார்; ஆனால் நாம் நமது அன்மையே பொங்கல் வாழ்த்தாகத் தருகிறோம்.
சென்ற ஆண்டும் பொங்கல் வந்தது, இவ்வாண்டு வருவதுபோன்றே! ஆண்டுதோறுந்தான் பொங்கல் வந்து போகிறது. அந்நாள் புனலில் குளித்து, புத்தானை உடுத்தி, பூரித்த உள்ளத்துடன், இல்லந்தோறும் இன்பத் தமிழோடு, தமிழர் இருத்தலே முறை.
ஆனால் சென்ற ஆண்டு பொங்கலின்போது இன்பமா இருந்தது? இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதற்காகக், காளைகளும், காரிகையரும் கடுஞ்சிறையில் கஞ்சியும் கூழும் உண்டு, கல் தலையில் படுத்துருண்டு, காய்ச்சலைத் தோழமை கொண்டு, கல் உடைத்து, கட்டைபெட்டி, நீர் மொண்டு நிலம் பெருக்கி, நிந்தை கேட்டுச் சிந்தை நொந்து வாழ்ந்தனர். அவர்கள் உள்ளம் உறுதிதான், ஆனால் உடல் அப்படியல்லவே! அவர்கள் பெற்றோரும், பெறற்கரிய பேறு பெற்றான் எம் மகவு என்றுதான் உள்ளத்தில் கருதினர். ஆனால் தம்மனையில் பொங்கி, பொங்கற் புதுநாளன்று இருக்கவேண்டிய சிங்கமனையார், தமிழரைப் பங்கப் படுத்துவதையே தமது பணியெனக் கொண்டு வாழ்ந்த ஆட்சியினரின் கொடுஞ் செயலால், சிறைப்பட்டு, சோர்ந்து இருப்பதை எண்ணி, வாடினர்.
எத்துணை எத்துணை பிரிவுகள்! எங்கெங்கு வாட்டம்! இன்று எண்ணினாலும் ஏக்கமே வரும்.
அந்த ஆண்டு போயிற்று! அந்தப் பொங்கல் போய்விட்டது. இவ்வாண்டு பொங்கலில் இல்லம் தோறும் இன்பம் இருக்கவே வழி கிடைத்தது.
ஆனால் இன்பம், பூரணமானதா? இல்லை! தமிழரின் இல்லங்களில், தமிழ் வாழ்வு பொங்குமா? இல்லை! தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கவா வழியிருக்கிறது! இல்லை! தமிழ்நாட்டில் தமிழர் வாழவா வழி பல இருக்கின்றன? இல்லை! இல்லை! ஆட்சி தமிழரிடமா? காணோம்! தமிழ்நாடு தமிழருக்கா? இல்லை! இப்போதுதான் அந்த மூலமந்திர முழக்கம் கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி சாந்தி, சமாதானம், அமைதி, மனநிறைவு ஏற்படக் கூடிய விதத்திலே அரசியல் நடப்பு உள்ளதா? காணோம் அதுவும்!
எனவே பூரணமான இன்பத்துக்கும் இடமில்லை இவ்வாண்டு, ஆனால் சென்ற ஆண்டு சிந்தை நொந்து வாழ்ந்ததைப் போல இருக்க வேண்டியதுமில்லை.
ஆனால் சென்ற ஆண்டுக்கு இவ்வாண்டு தமிழர் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதிலே சந்தேகமில்லை.
எங்கு நோக்கினும் தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! என்ற பேரொலி கேட்கிறோம்.
யாரைக் கேட்பினும், ஆம்! நான் தமிழனே! எனப் புன்சிரிப்புடன் மார்தட்டிக் கொண்டு கூறக் கேட்கிறோம். நாள்தோறும் ஊர் தோறும் தமிழர் கூட்டங்கள், தமிழர் பரண, தமிழர் முழக்கம், நடந்தபடி உள்ளன. தமிழரின் தலைவர் தமிழர் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டுவிட்டார். தமிழர் தம்மை உணரத் தொடங்கிவிட்டனர். தம்மவரைத் தழுவத் தொடங்கிவிட்டனர். தம் நாட்டில் தமது மொழியைக் காக்கத் தொடங்கிவட்டனர். தம் நாட்டில் தாமே வாழவேண்டும், அரசு தமதே ஆட்சி தமதே எனக் கூற உறுதி கொண்டுவிடடனர். தமிழர் விடுதலைப் போரிட முனைந்துவிட்டனர்.
எனவே இவ்வாண்டு பொங்கலன்று வீடுதோறும் செந்நெல் மணி வாடையுடன் செந்தமிழின் மணமும் சேர்ந்து கமழும் என நம்புகிறோம்.
அந்த நம்பிக்யே நமது இன்பத்துக்குக் காரணம்.
பொங்கல் புதுநாளின் கருத்து மிக அழகியது. பொருள் ததும்புவது.
ஆரியர் கொண்டாடும் ஆபாசப் பண்டிகைபோல எதிரியை எப்படியோ வதைத்து விடடதற்காகக் கொண்டாடும் நாளன்று! ஆரியர் பண்டிகை, வெறியாட்டம்! அவை சூதும் சூழ்ச்சியும் வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும்பண்டிகைகள். பொங்கற் புதுநாள் அத்தகைமைத்தன்று.
பாடுபட்டால் பலன் உண்டு! உழைத்தால் வாழ்வுண்டு! என்ற மூலக் கொள்கைக்கு ஏற்றநாள் அது.
காட்டைத் திருத்தி, நிலமாக்கி, மேட்டை அகற்றிக் குளமாக்கி, கரடுமுரடைப் போக்கி வாய்க்கால்களாக்கி, வயல்கள் பலவும் அமைத்து வரப்புகள் தொகுத்து, உழுது நீர்பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி, அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலும் நாளாகும் அந்நாள்.
உழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனத்தில் இருத்த வேண்டி, பாற்கொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல்! எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.
அந்நாள், தமிழர் தமது உள்ளத்தில் ஒரு செய்தியை நினைவிலிருத்துவர் என நம்புகிறோம்.
திருந்தாத வயலில் உழவு இல்லை. நம்நாடு திருந்தாத வயலாகவே இன்னமும்உள்ளது. எனவேதான் இங்குத் தன்னாட்சி முளைக்கவில்லை.
வரம்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான், தமிழர் தம்நாட்டின் வரம்பு கட்டத் தவறி, அதாவது தமிழ்மொழி, கலை, வழிமுறை(மார்க்கம்) ஆகியவை ஆரியத்தால் சிதைக்கப்படாதிருக்கவேண்டித் தன்மானம் எனும வரம்பு கட்டத் தவறியதால், இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.
உழுது நீர்பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம், பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? செந்நெல் தேட இயலுமா? நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா! இல்லையே! அதோ தீண்டாமை எனும் கோரமான களை இருக்கிறது. பார்ப்பனீயம் எனும் பண்டைப் பயங்கரப் பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்திருக்கிறது. பித்தலாட்டக் கொள்கைகள் எவ்வளவு! பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும் கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள்! இவை போக்கப்படா முன்னம், பயிர் ஏது? இவற்றைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரை கொண்டோரின் கடன்.
எனவே, இவ்வாண்டு பொங்கலன்று, தமிழர் உள்ளத்திலே புதுமை பொங்க வேண்டும். தமிழரின் வாழ்வுக்கு எதிரிடையான உள்ளவை யாவும் மங்கும்படி செய்தல் வேண்டும்.
ஒன்று மங்கிவிட்டது. மறுபிறப்பு எடுக்க எண்ணுகிறது. எனினும் மீண்டும் வரினும், மிக விரைவில் பங்கப்பட்டுப் போகும் என்பதில் சந்தேகமில்லை.
ஒழிந்து போன காங்கிரசு ஆட்சியைத்தான் நாம் குறிப்பிடுகிறோம்.
உழவரையே பெரிதும் ஏய்த்து வாக்குபெற்ற அந்த ஆட்சி உழவர் சார்பில் ஒரு சிறு நலனும் செய்யவில்லை.
வரி எல்லாம் போகும் என்ற கூறினவர்கள், வரிபல போட்டு வாட்டினர். நிலவரித்தள்ளுபடி குறித்து ஏதேதோ கூறினர். ஏதும் செய்ய இயலவில்லை எனக் கூறிவிட்டுப் போயும் விட்டனர். பள்ளிகள் மூடினர், மருத்துவ வசதிகளை மாய்த்தனர், பண்டங்களின் விலை ஏறும்படி விற்பனை வரிபோட்டு ஏழைகளை வாட்டினர். தொழிலாளர் துயரம் பெறுகிற்று. வகுப்புக் கலவரம் வளர்ந்தது. தீண்டாதார் துயரம் அதிகரித்தது. அப்பா! அவர்கள் ஆட்சி!! இன்னும் எத்தனைநாள்? இன்னும் எத்தனை நாள்? என்று கேட்டபடி இருந்தனர் தமிழர். இன்று இல்லை அவர்கள்! ஒழிந்தது அந்த ஆட்சி! தீர்ந்தது அவர்களின் அரசவை(தர்பார்)! நாடு பூராவும், அவர்கள் போனதற்குப் புலம்பவில்லை. பூரித்தது, விடுதலை விழா கொண்டாடி, போனாயா, ஒழிந்தாயா என்று கூறிவிட்டது.
எனவே, தமிழருக்கு ஆபத்தாக வளர்ந்த ஆட்சி மங்கி மடிந்தது.
பொங்கற் புதுநாளன்று, இச்சிந்தனையொன்றே தமிழரின் செந்தேனாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அம்மட்டோ? அந்நாள், இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க, எவ்வளவு இழிந்த செயலில் இறங்கவும் அவர்கள் இறங்கிவிட்டார்கள் என்பதை எண்ணி, அத்துடன், வந்த பதவியை வேண்டா எனக் கூறிய தமிழர் தலைவரின் தீரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழரின் நெஞ்சில் ஏன் இன்பம் பெருகாது எனக் கேட்கிறோம்.
அதோ அந்தக் கும்பல் இன்னமும் அலைந்து திரிகிறது அதிகாரத் துண்டுகளுக்கு. இதோ தமிழர் தலைவர் எமக்கேன் இது, எமக்கு வேண்டியது தமிழ்நாடு! தமிழ்நாடு தமிழருக்கே என முழக்கம் செய்கின்றார். ஆங்கிலக் கவி சேக்சுபியர் கூறியபடி அந்தப் படத்தையும் பாருங்கள், இந்தப் படத்தையும் பாருங்கள் என்று நாம் கூறுகிறோம்.
பொங்கற் புதுநாளன்று தமிழரின் மனக்கண் முன்பு இக்காட்சி தோன்றட்டும்!
தமிழ் நாட்டில் ஒற்றுமை பொங்குகிறது. தமிழரின் எதிரிகளின் கோட்டையில் புரட்சிச் சங்கமே ஓங்குகிறது.
தமிழர் கட்சியில், மேலும் மேலும் பலர் வந்து அணிவகுப்பில் நான் முன்னே நீ முன்னே என்ற சேருகின்றனர். தமிழரின் எதிரிகளில், “போடாபோ, நரிமகனே எட்டிநில் நீ கவிழ்க்கப் பட்டாய்” என்ற தண்டனைத் தாக்கீதுகள் பொங்கி வழிகின்றன.
காங்கிரசு ஆட்சி ஒழிந்ததற்குத் திருநாள் காங்தியார் வாழும் இடத்திலே நடந்தது. தமிழரின் தலைவர் பெரியார் தமிழ் நாட்டைத் தாண்டிச் சென்று பம்பாய் மாகாணத்தில் தமிழர் இலட்சிய விளக்கம் செய்தார்.
காங்கிரசிடம் நம்பிக்கை இல்லை, நாம் கூட முடியாது, நம்பமாட்டோம் முசுலிம் லீகும், ஆதித் திராவிடர்களும் கூறிவிட்டனர். தமிழர் தலைவருடன் அளவளாவிப் பேசி, ஒத்துழைப்பதாக உறுதி வறி அகில இந்திய முசுலிம்லீகு தலைவர் மதிப்புமிகு சின்னாவும், ஆதித்திராவிடப் பெருங்குடி மக்களின் அண்ணல் அறிஞர் அம்பேத்கரும் வாக்கு கொடுத்தனர். புத்துலக வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக உள்ள காங்கிரசு என்னும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க மூவரும் ஒன்று கூடியுள்ளனர்.
எனவே, தமிழருக்கு இனி இன்பம் பொங்க வழியேற்பட்டுவிட்டது.
தமிழர்கள் யாவருக்கும் இனி புத்துலக வாழ்வு நிச்சயம், அதற்காகப் போரிட வேண்டும்; பாடுபட வேண்டும். களை எடுக்கவேண்டும். இக்கருத்தையே பெரிதும் உள்ளடக்கிய பொங்கற் புதுநாளன்று தமிழர்கள் உள்ளத்தில் இவ்வெண்ணங்கள் பொங்க வேண்டுமென விரும்புகிறோம்.
உமது இல்லந்தோறும் உள்ளம் தோறும் பொங்குக புதுமை என அன்புடன் வாழ்த்தி, உமது இன்பமே, எமது குறிக்கோள் என்பதை வணக்கத்டன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க தமிழர்!
வழங்க தமிழ்நாடு!
புதுமை பொங்குக!
தமிழ்நாடு தமிழருக்கே!
பேரறிஞர் அண்ணா
- விடுதலை – 13.01.1940 பக்கம்: 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக