அகரமுதல
கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில்
நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்
செங்கற்பட்டு.நவம்.13, இளையோர் கூரறிவினர்(little jacky) பதின் மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் நாள் விழாவையொட்டி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசினார்.
செங்கற்பட்டு இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி இவ்விழாவிற்குத் தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ குழந்தைகளுக்கான கதை நூலினைத் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப., வெளியிட்டார். இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி பெற்றுக் கொண்டார்.
நூலினை வெளியிட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசும்போது, “இன்றைக்குக் குழந்தைகள் பாடப்புத்தகங்களைப் படிப்பது, நல்ல மதிப்பெண் எடுப்பது என்கிற ஒற்றை இலக்கோடு மட்டுமே இருக்கிறார்கள். குழந்தைகளின் இலக்கு இப்படி சுருங்கிப் போனதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே முதற்காரணம். நாங்கள் பள்ளியில் படிக்கிற காலங்களில் நீதி போதனை வகுப்புகளில் எங்களுக்குக் கதைகள் சொல்வார்கள். அந்தக் கதைகளில் வரும் நீதி எங்களின் மனத்தில் ஆழமாகப் பதியும். பெற்றோர்களின் கவனிப்பு போதிய அளவு இல்லாத போதும், குழந்தைகள் அக்கறையோடும் ஒழுக்கத்தோடும் இருப்பார்கள். இன்றைய காலச்சூழலில் குழந்தைகளின் கவனம் திசை திருப்பப்படுகிறது. குழந்தைகள் தானாகச் சிந்திக்கவும் செயல்படவும் புத்தக வாசிப்பு கை கொடுக்கும். கதைகளின் வழியாக குழந்தைகள் மனத்தில் சமூக அக்கறையையும் ஒழுக்கத்தையும் மிக எளிதாக விதைக்க முடியும். நெகிழிப்(plastic) பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது, பெரியவர்களை மதிக்க வேண்டும், எந்த இடத்தில் இருந்தாலும் தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகள் மனத்தில் கொள்ள வேண்டும். மு.முருகேசு எழுதிய குழந்தைக் கதைகளைப் படிப்பதன் மூலமாக நாளைய தலைவர்களாக மாறவிருக்கும் இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்தவர்களாக வருவார்கள் என்பது நிச்சயம்” என்று குறிப்பிட்டார்.
விழாவில், கவிஞர் அ.வெண்ணிலா, செங்கை தாமசு, பொன்.வாசுதேவன், பேராசிரியர் கிள்ளிவளவன், நா.வீரமணி, ஆ.கிருட்டிணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு ஏற்புரையாற்றினார். விழாவில், கதைகளுக்கான ஓவியங்களை வரைந்த இப் பள்ளியைச் சேர்ந்த 16 மாணவ – மாணவிகளைப் பாராட்டினர்.
விழாவில், ஏராளமான ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
நிறைவாகப், பள்ளி ஆசிரியர் பி.இரேணுகாதேவி நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக