விடுதலைச்சிறுத்தைக் கட்சி சார்பில்
அறுவருக்கு விருதுகள்
பினராயி விசயன், திருநாவுக்கரசர் முதலானோருக்கு விருதுகள் அறிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை விட்டிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத்து பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை அளித்து வருகிறோம்.
திமுக தலைவர் கலைஞர், புதுச்சேரி முதலமைச்சர் வெ.நாராயணசாமி, முதுபெரும் பொதுவுடைமைக்கட்சித் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முதலான தலைவர்கள் பலருக்கும் இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சான்றோரின் பட்டியலை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
அம்பேத்கர் சுடர் – கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயிவிசயன்,
பெரியார் ஒளி – ஆந்திரத்தைச் சார்ந்த மக்கள் பாடகர் தோழர் கத்தார்,
காமராசர் கதிர் – தமிழ்நாடு பேராய(காங்கிரசு)க் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர்,
காயிதேமில்லத்து பிறை – வைகறை வெளிச்சம் இதழாசிரியர் மு.குலாம் முகமது,
அயோத்திதாசர் ஆதவன் – மருத்துவர் அ.சேப்பன் (மறைவிற்குப் பின்),
செம்மொழி ஞாயிறு – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்.
இந்த விருதுகள் வைகாசி 01, 2049 – 15.5.2018 அன்று மாலை சென்னை காமராசர் அரங்கில் நடைபெறும் விழாவில் அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.’
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக