பிரித்தானியப் பாராளுமன்றில் முதல் தடவையாகத்

தைப்  பொங்கல் விழா!


  தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை  அடையாளப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள், அதற்கு  முதன்மையான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றைக் காலங்காலமாக நன்றியுடன் நினைவு கூரும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன.
  தம் நிலத்தையும் பரம்பரை இனத்துக்கான அடையாளங்களையும் நிலைக்க வைக்கப் போராடும் தாயகத்திலுள்ள எம் உறவுகள் துன்ப-துயரங்களைக் கடந்து “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற எதிர்பார்ப்புடன் எப்போதுமே எதிர்காலம்பற்றிய தம் நம்பிக்கையைக் கை விட்டதில்லை. தாங்கவொண்ணாத பல இழப்புகளையும் சுமைகளையும் உள்ளத்தில் பெருநெருப்பாகச் சுமந்து கொண்டு தத்தமது நாளாந்த கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். எதிர்வரும் தைப் பொங்கல் தாயகத்தில் மட்டுமல்ல உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர் மனங்களில் நம்பிக்கையையும் சமூக ஒற்றுமையையும் மேலோங்கச் செய்யட்டும் என்று பிரித்தானியத் தமிழர் பேரவை வாழ்த்துகின்றது.
  தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாகத், தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு எனத் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
  பொங்கல் விழாவைத் தமிழர் தேசிய விழாவாகப் பலர் கருதுகின்றனர். பொங்கலைத் தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. 
  தமிழர்களின் கலை, பண்பாடு, வரலாறு, அறிவியல்போன்றவற்றை நாம் வாழும் நாட்டு மக்களுக்குக் கொண்டு சென்று தமிழ் இனம் ஒரு தொன்மையான  பரம்பரையுள்ள இனமென்பதை வெளிக் கொண்டு வரும் பல முயற்சிகள் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நீண்ட கால ஆக்கப்பணி அடிப்படையில் இந்த வருடம் ‘தைப் பொங்கல்’  நாளைப் பிரித்தானியப் பாராளுமன்றில் நடத்திட சிறப்பான ஒழுங்கமைப்புகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர் வரும் புதன்கிழமை 04, 2049 – சனவரி 17,  2018 இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரையிலான காலப் பகுதியில் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் (APPGT) பிரித்தானியத் தமிழர் பேரவையும் (BTF) இணைந்து பாராளுமன்றில்  விழா அரங்கில் (Jubilee Hall)  மரபார்ந்த முறையில் தைப் பொங்கல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழர்களின் முன்னோடிச் சார்பாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இட வசதிகளே இருப்பதனாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
குறிப்பாக info@britishtamilsforum.org எனும் மின்னஞ்சலிற்கு உங்கள் பெயர், தொலைபேசி விவரங்களை வழங்கி இசைவு கோரவும். முதலில் வரும் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உறுதிப்படுத்தும்  மறுமொழி அனுப்பி வைக்கப்படும்.
தொன்மையான தமிழர் மரபினை நாம் வாழும் நாடுகளில் சிறப்புடன் அறிமுகப் படுத்துவோம்.

பிரித்தானியத்  தலைமையர் தெரேசா மே அவர்களின்

“தைப் பொங்கல் வாழ்த்து” காணொளி :

https://youtu.be/No4_uzA3rMw


வாழ்த்துகளுடன்
எசு.சங்கீதன்
ஒருங்கிணைப்பாளர், பிரித்தானியத் தமிழ்ப்பேரவை
Sangeeth
BTF Media Coordinator