திங்கள், 16 ஜனவரி, 2017

சிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி பன்னாட்டு நீதிபதிகளுக்கான தேவையினை வலுப்படுத்துகிறது.



அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017

சிறிலங்காவின் நள்ளிரவு நீதி

பன்னாட்டு நீதிபதிகளுக்கான 

தேவையினை வலுப்படுத்துகிறது.

 

மனித உரிமை மன்றமேவட கொரியாவைப் போல் சிறிலங்காவையும்
நா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்புக!
  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு நடராசா இரவிராசு அவர்களது கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரிகள் அனைவரையும் கடந்த 2016 திசம்பர் 24ஆம் நாள் சிறிலங்காவின் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இரவிராசு அவர்கள் 2006 ஆம்ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் ஊர்தியில் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். கொழும்பு நகர்மையப்பகுதியில் காவல்துறை – பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் பலவற்றுக்கும் கூப்பிடு தொலைவில் பட்டப்பகலில்கொலைகாரர்கள் அவர் வண்டியின் மீது சுட்டார்கள்.
  இரவிராசு படுகொலைக்காக 2015 நவம்பர் 3ஆம் நாள் கடற்படையினர் மூவர் உட்பட அறுவர் குற்றஞ்சாட்டப் பட்டிருந்தார்கள். 2016திசம்பர் 24ஆம் நாள் ஒரு சிங்கள நீதிபதியும் சிங்களச் சான்றாயர் குழுவும் அனைத்து எதிரிகளையும் விடுவித்தனர். இவ்வழக்கில் நீதிபதியான மணிலால் வைத்யதிலக சான்றாயத்தில் சிங்கள இனத்தவர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்ற எதிர்த் தரப்புவேண்டுகோளை ஏற்றுக் கொண்டிருந்தார்.
  சான்றாயம் அமைப்பதில் இத்தகைய இனப் பாகுபாட்டுக் காரணங்களைப் பயன்படுத்தியிருப்பது சிறிலங்காவின் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. எதிரிகளை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்த சான்றாயர்கள் நள்ளிரவு கடந்த மௌன வேளையில் தமது தீர்ப்பை வழங்கினார்கள். இதுவும் கூட சிறிலங்காவின் நீதித்துறை வரலாற்றில்முதல் முறைதான். இந்தத் தீர்ப்பிலிருந்து தெளிவாகத் தெரிவது என்னவென்றால், சிறிலங்காவின் நீதித் துறையும் அரசுமே கூடஇனம்சாரா நடுநிலைத்தன்மை கொண்டவையல்ல. போர்க் குற்றங்களுக்கும் மானிடஎதிர்க் குற்றங்களுக்கும் இனக்கொலைக்கும் இலக்காகிப் பாதிப்புற்ற ஏராளமான தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய அவற்றால் இயலாது.         
  கடந்த 2015 அட்டோபர் மாதம் சிறிலங்கா அரசாங்கமே அயல்நாட்டு  நீதிபதிகளின் பங்கேற்புடன் நிலைமாற்ற நீதிச் செயல்வழிகோரும் தீர்மானத்தைப் பிற அரசுகளுடன் சேர்ந்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கூட்டாக முன்மொழிந்திருந்தது. இது குறித்து இற்றைவரை சிறிலங்கா அரசாங்கம் உருப்படியான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. மாறாக, அது மனித உரிமைகள் ஆணையத்திற்கு அளித்த உறுதிகளை அப்பட்டமாக மறுதலித்து, அயல்நாட்டு நீதிபதிகள் யாரும் இடம்பெறப்போவதில்லை எனவே அறிவித்துள்ளது. அரசியல் தலைவர்களுக்கு எதிராக எவ்வித வழக்கும் தொடுக்கப் போவதில்லை எனவும் கடற்படை- படைத்துறை அதிகாரிகளுக்கும் இதே போன்ற வாக்குறுதிகளையும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபாலசிறிசேனா முன்பே வழங்கியுள்ளார்;.
  இந்த நூற்றாண்டின் ஆகக் கொடிய குற்றங்கள் சிலவற்றுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பாக இனியும்  நிலையான பொறுப்புக்கூறல் பொறிமுறை இல்லாமற்போவது இக்குற்றங்களுக்கு இலக்காகிப் பாதிப்புற்ற தமிழ் மக்கள் தொடர்பான சிக்கல்மட்டுமல்லாது ஐநா அதனது மனித உரிமை ஆணையம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நேர்மை, நம்பகத்தன்மையின் மீதுநேராகத் தாக்கங்கொள்வதாகும்.
  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனித உரிமை ஆணையத்திடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாவது வரவிருக்கும் 2017மார்ச்சு அமர்வில் சிறிலங்காவுக்கு மேலுமொரு நீட்டிப்பு வழங்குவதன் மூலம் பாதிப்புற்ற தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கும் சிறிலங்காவின் முயற்சிகளுக்கு நீங்களும் உடந்தையாக இருந்து விடாதீர்கள் என்பதே. 2015 செட்டம்பரில் மனிதஉரிமைகளுக்கான உயர் ஆணையர் பரிந்துரைத்த இடைக்காலப் பன்னாட்டுத் தீர்ப்பாயம் அமைப்பதற்கான காலம் வெகுவாகக்கடந்து விட்டதென்பதே உண்மை.
   மனித உரிமை ஆணையம்; ஏற்கெனவே வட கொரியாவுக்குச் செய்ததுபோல சிறிலங்காவையும் ஐநாவின் பொதுப் பேரவையின்பார்வைக்கு அனுப்ப வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் மீது மக்கள் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கை நிலைத்திருப்பதற்குஅவ்வகை முரணற்ற உறுதிப்பாடு முக்கிய காரணியாகும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
விசுவநாதன் உருத்திரகுமாரன்
தலைமையர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
– முருகையா சுகிந்தன், செயலகம், நா.த.ஈ.அ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக