பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை ஒதுக்குதல் வேண்டும்
சிற்றினம்-சிறிய இனம். ஒழுக்கத்தாலும்
அறிவாலும் குறைந்திருப்போரை இனமாகக் கொள்ளுதல் ஆட்சிப் பொறுப்பினை
ஏற்றுள்ளோர்க்கு நன்மை பயவாது. பதவியுயரச் செல்வமும் செல்வாக்கும் உயரும்.
செல்வம் உயர உயர வீணரும், வெற்றுரைகாரரும், சூதாடுவோரும் வலியவந்து
சேர்வர். அவர்களை அகற்றாது நட்பாகக் கொள்ளின் ஆளும் தலைவர் அல்லற்பட்டு
அழிய வேண்டியதுதான். பொறுப்புகளும் கடமைகளும் மிகமிக, ஒவ்வொன்றையும் நேரில்
ஆய்ந்து நிறைவேற்றுதல் இயலாது. சுற்றியிருப்போர் சொல்லும் கூற்றை நம்புதல்
வேண்டியவரும். அவர் சொல்லும் கூற்று உண்மை வயப்பட்டதாயின், யார்க்கும்
தீமையில்லை. ஆனால் அவரியல்பு அங்ஙனமிராது. உண்மை கூறின் தந்நலம் பெருக்க
இயலாது. ஆதலின் செல்வத் தலைவர் மனம் திரியுமாறு செவிக்கு இன்பம் பயக்கும்
செய்திகளைக் கூறி அவர் சிந்தை மகிழ்வித்துச் செல்வத்தைக் கவரவே நினைப்பர்.
ஆதலின் பொதுத் தொண்டு புரிவோர், இழிகுணம் படைத்த இச்சிறியோர் கூட்டத்தினை
வெறுத்து ஒதுக்குதல் வேண்டும்.
இச்சிற்றினத்தைக் கொண்டுள்ளார்
தம் கடமை தவறி, பொறுப்பிழந்து, நேர்மை துறந்து ஒழுகுவதை இன்றும் காண்கின்
றோம். விலைமகளிரும் காமுகரும் வட்டாடுவோரும் சுற்றியிருக்க வாழும்
பொறுப்புடைத் தலைவர்கள் கடமை தவறித்தான் நடக்கின்றனர். தம்மைச் சூழ்ந்துள்ள
அவர்கள் கூறுவதையே மெய்யென்று நம்பி, நேர்மை வழிதவறி நடந்து பிறரை
அல்லுக்கு ஆளாக்குகின்றனர். ஆதலின் ஆட்சித் தலைவர்கள் சிற்றினத்தை வெறுத்து ஒதுக்கியே தீர வேண்டும்
என்று திருவள்ளுவர் கூறுகின்றார். அங்ஙனம் கூறுங்கால், ஒருவர்க்கு
அறிவும், புகழும், தூய்மையும், வினைத்திறனும், செல்வமும் வலிமையும்,
பிற்கால வாழ்வும், இனம் காரணமாகவே உண்டாகும் என்று தெளிவுபடுத்தி,
சிற்றினம் தீமை பயப்பதால் அஞ்சி வெறுக்க என்று கட்டளையிடுகின்றார்.
பேராசிரியர் சி.இலக்குவனார் :
இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 742
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக