ஆளும் தலைவர்க்கு வலிமை மக்கள் அன்பும் ஒத்துழைப்பும்
ஆளும் தலைவர்க்கு
வலிமையாவது மக்கள் அன்பும் ஒத்துழைப்பும் ஆகும். மக்கள் அன்பைப்
பெற்றதலைவர் பகைவரை எளிதில் வெல்வர். மக்கள் அன்பைப் பெற விரும்பினால்,
கடுஞ்சொல் அற்றவராய் இருத்தலோடு நேர்மையாகவும், யாவரிடமும் ஒத்த
அன்புடையவராகவும் ஒழுகுதல் வேண்டும். உறவினர்க்கு ஒரு நீதியும் உறவினர்
அல்லாதார்க்கு ஒரு நீதியும் வழங்குதல் கூடாது. நெறிமுறை கடந்து யாவர்
செல்லினும், அவரை விருப்பு வெறுப்பின்றி ஒறுத்து நன்னெறிப்படுத்துதல்
வேண்டும். இல்லையேல் மக்கள் வெறுப்பர். மக்கள் வெறுப்பின், மாபெரும் தலைவரும் தாழ்ச்சியுற வேண்டியதுதான்.
அரமானது இரும்பைத் தேய்ப்பதுபோல், தலைவரின் கடுமொழியும் ஒழுங்கற்ற
ஆட்சிமுறையும், மக்களன்பை மாய்ந்து விடும். அரம் இரும்பைத் தேய்ப்பது
சிறிது சிறிதாகத்தான். மக்கள் அன்பு மாறுபடுதலும் தலைவரின்
செயல்முறைக்கேற்பச் சிறிது சிறிதாகத்தான். உவமை மிக மிகப் பொருத்தமானது.
பேராசிரியர் சி.இலக்குவனார் :
இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 738
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக